செய்திகளை சுருக்கித்தருவது இந்த தளம்…
நீள் வாசிப்புக்கான ஆழமான கட்டுரைகளின் தீவிர வாசகன் என்ற முறையில், பெரிய கட்டுரைகளை எல்லாம் சில வரிகளில் சுருக்கித்தரும் இந்த இணையதளத்தை (https://tldrthis.com/) என்னால் உற்சாகமாக பரிந்துரைக்க முடியாது என்றாலும் நவீன தொழில்நுட்பத்தின் சாத்தியத்தை உணர்த்தும் வகையில் இந்த தளத்தை அறிமுகம் செய்கிறேன்.
டி.எல்.டீ.ஆர் என்பது இணையத்தில் பிரபலமாக இருக்கும் சுருக்கெழுத்து. நீளமாக இருப்பதால் படிக்கவில்லை என்பதை இது குறிக்கிறது. இணையத்தில் இன்று பலருக்கும் இந்த அணுகுமுறை தான் இருக்கிறது. பேஸ்புக் துவங்கி, இணையதளங்கள் வரை எதிலுமே நீளமான விஷயங்களை படிக்காமல் கடந்து சென்று விடுகின்றனர்.
டிக்டாக் வீடியோ போல சுருக்கமாக இருக்கும் சங்கதிகள் பெரும்பாலானோரால் வாசிக்கப்படுகின்றன.
இந்த பின்னணியில் தான், நீளமான கட்டுரைகளை எல்லாம் முழுவதும் வாசிக்காமலே சாரம்சத்தை மட்டும் தெரிந்து கொள்ளும் வகையில் அவற்றை சுருக்கித்தரும் சேவையை மேலே சொன்ன இணையதளம் வழங்குகிறது.
எந்த ஒரு நீளமான விஷயத்தையும் ஒரு கிளிக்கில் சுருக்கித்தருவதாக இந்த தளம் சொல்கிறது. அதற்கேற்பவே, சுருக்கமாக வாசிக்க விரும்பும் கட்டுரையை இந்த தளத்தில் சமர்பித்தால் அல்லது அதன் இணைய முகவரியை மட்டும் கொடுத்தால், சில வரிகளில் சுருக்கத்தை அளிக்கிறது.
இணையத்தில் தகவல்கள் குவிந்து கிடக்கும் நிலையில் நீளமான கட்டுரைகளை வாசிக்க நேரம் செலவிட முடியாதவர்களுக்கான சேவையாக இது முன்வைக்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு கொண்டு இந்த சேவை செயல்படுகிறது.
மாணவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என பல தரப்பினரும் இந்த சேவையை பயன்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்களும் சுவாரஸ்யமாகவே உள்ளன.
ஆங்கிலத்தில் மட்டுமே செயல்படுவதாக புரிந்து கொள்ளலாம்.