வரலாற்று ஒலிகளை கேட்க ஒரு இணையதளம்
சவுண்ட்ஸ் ஆப் சேஞ்சஸ்.இயூ – ( https://www.soundsofchanges.eu/) இணையதளம் அற்புதமான தளமாக இருக்கிறது. ஒலிகளின் அருங்காட்சியகம் என்றும் இந்த தளத்தை வர்ணிக்கலாம். ஏனெனில், காலமாற்றத்தால் மறக்கப்பட்ட ஒலிகளை இந்த தளம் பாதுகாத்து வருகிறது.
அந்த காலத்து தொலைபேசி மணி அழைப்பு, டெலிபிரிண்டர் இயங்கும் ஒலி, பயணிகள் ரெயிலின் சத்தம் போன்ற காலத்தின் குரல்களை இந்த தளத்தில் கேட்கலாம்.
பழைய ஒலிகளில் எல்லாம் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப்போகிறது என நினைக்க வேண்டாம். காலம் மாறிக்கொண்டே இருக்கிறது அல்லவா? இந்த மாற்றத்தின் பிரதிபலிப்பை சமூகத்தின் எல்லா துறைகளிலும் பார்க்கலாம். பிளாப்பி டிஸ்க் காலத்தில் இருந்து பென் டிரைவுக்கு மாறி இப்போது கிளவுட் சேமிப்பிற்கு வந்திருக்கிறோம்.
இன்றைய தலைமுறைக்கு பிளாப்பி டிஸ்க்கும், சி.டியும் கூட அந்நியமாக தோன்றலாம்.
இந்த மாற்றம் எல்லாம் முன்னேற்றத்திற்கானது என்பதால், வழக்கொழிந்து போன நுட்பங்கள் குறித்து கவலைப்பட்டு கொண்டிருக்க வேண்டியதில்லை தான். ஆனால் அந்த நுட்பங்களின் வடிவங்களை பாதுகாப்பது அவசியம் அல்லவா? இதற்கான தொழில்நுட்ப அருங்காட்சியங்கள் தேவை அல்லவா?
இந்த இடத்தில் தான் இன்னொரு முக்கியமான கேள்வியையும் கேட்ட வேண்டும். பெளதீக பொருட்களை பாதுகாத்து வைக்கலாம். ஆனால் காலத்தின் பாடல்களை கரைந்து போகும் ஓலிகளை எப்படி மனித குலத்தின் நினைவில் நிறுத்துவது?
இந்த கேள்விக்கு பதிலாக தான் சவுண்ட்ஸ் ஆப் சேஞ்சஸ் இணையதளம் அமைந்துள்ளது. தொழிற்புரட்சி காலத்தில் இருந்து கேட்டு வரும் ஒலிகள் பலவற்றை இந்த தளம் சேமித்து வருகிறது. ஐரோப்பாவில் உள்ள ஆறு அருங்காட்சியகங்கள் ஒன்றிணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
கால மாற்றத்தின் ஒரு அங்கமாக ஒலி வெளியில் நிகழ்ந்து வரும் மாற்றத்தை வரலாற்று நோக்கில் ஆவணப்படுத்துவதை நோக்கமாக கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய உலகம் எப்படி மாறிக்கொண்டிருக்கிறது? எனும் கேள்விக்கு பதிலாக இன்றைய ஒலிகள், ஒலி சூழல்களை திரட்டி வருங்காலத்திற்கான ஆவண குறிப்புகளை உருவாக்கி வருவதாகவும் இந்த திட்டத்தின் அறிமுக பக்கம் குறிப்பிடுகிறது.
வரலாற்று ஒலிகளை கேட்க செய்வோம் எனும் இந்த தளத்தின் முழக்கம் எத்தனை பொருத்தமானது என்பதை, இதனுள் நுழைந்து ஒலித்தேடலில் ஈடுபடும் போது புரிந்து கொள்ளலாம்.
முகப்பு பக்கத்தில் உள்ள தேடல் கட்டம் அல்லது ஒலிகளுக்கான பகுதியின் மூலம், காலத்தின் ஒலிக்குறிப்புகளை அணுகலாம். மின் ஆலைகள் ஒலி, ரெயில் போக்குவரத்து ஒலி கார் இயக்க ஒலி உள்ளிட்ட ஒலி கோப்புகளை வரிசையாக கேட்கலாம். இல்லை எனில், ஒலிக்குறிப்புகளை தேடிப்பார்க்கலாம்.
ஒலிகளுக்கான தேடல் வசதி விரிவாகவே இருக்கிறது. விவசாயம், விமானம், கட்டுமானம், கல்வி, மின்சாரம், இயந்திரங்கள் என ஒலிகளின் வகைகளுக்கு ஏற்ப தேடலாம் அல்லது 1800 துவங்கி ஆண்டுகளில் அடிப்படையிலும் அந்த கால ஒலிகளை தேடலாம். தவிர பிரபலமான குறிச்சொற்கள் மூலமும் ஒலிகளை தேடலாம். ஆலைகள், போக்குவரத்து, பின்லாந்து ஆகியவை பிரபலமான குறிச்சொற்களாக இருக்கின்றன.
குறிப்பிட்ட ஒலிகளை கிளிக் செய்தால், அவற்றுக்கான அறிமுக குறிப்புடன், ஒலிக்குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளதை பார்க்கலாம். ஒலிக்குறிப்பை கேட்க முடிவதோடு, இரண்டு விதமான கோப்பு வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
காலத்தின் கடந்த கால குறிப்புகளை கேட்கலாம் என்பதோடு, திரைப்படம், ஆவணப்படம் போன்றவற்றுக்கான ஒலிகள் தேவை என்றாலும் இந்த கோப்புகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒலிகள் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பயனாளிகள் விரும்பினால் தங்கள் பங்கிற்கும் ஒலிகளை இந்த தளத்தில் சமர்பிக்கலாம்.
-