நேர்மையான இணையதளம் எது?
ஒரு நல்ல இணையதளம், பார்வையாளர்களை ஏமாற்றாமல் இருக்க வேண்டும். அதாவது, இணையதளத்தின் உள்ளடக்கம் அதன் நோக்கத்திற்கு ஏற்ப அமைந்திருக்க வேண்டும். இணையதளத்தின் உள்ளடக்கத்திற்கும் அதன் நோக்கத்திற்கும் வேறுபாடு இருக்க கூடாது என்றும் இதை சொல்லலாம்.
ஆனால், இணையத்தில் அமைக்கப்படும் பல தளங்கள், இப்படி பார்வையாளர்களை ஏமாற்றும் நேர்மையற்ற தளங்களாகவே இருக்கின்றன. ஏதேனும் ஒரு வகையில் இணைய போக்குவரத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டு, ஆனால் அவ்வாறு ஈர்ப்பதை நிறைவேற்றும் வகையிலான உள்ளடக்கத்தை கொண்டிருக்காமல் அள்ளித்தெளிக்கப்பட்ட தகவல்களை கொண்டதாக இருக்கும் தளங்கள் பல ரகங்களில் இருக்கின்றன.
இதற்கு எளிய உதாரணமாக, தலைப்பின் பலத்தை கொண்டு மட்டுமே அமைக்கப்பட்ட தளங்களை சொல்லலாம். இணைய மார்க்கெட்டிங் நோக்கில் ஈர்ப்பு கொண்ட தலைப்பை கொண்டதாக தளம் இருக்கும். ஆனால், உள்ளடக்கமோ இணைய குப்பையாக இருக்கும்.
பாலிவுட்எம்டிபி (https://www.bollywoodmdb.com/) இணையதளத்தை பார்க்கும் போது இந்த சிந்தனைகள் எல்லாம் தோன்றுகின்றன.
பாலிவுட்எம்டிபி தளத்தை மோசமான தளம் என்று சொல்வதற்கில்லை. பாலிவுட் திரைப்படங்கள் தொடர்பான செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்களை தொகுத்தளிக்கும் இணையதளமாக இது இருக்கிறது. புதிதாக வெளியாக உள்ள படங்கள் மற்றும் ஏற்கனவே வெளியான படங்களை தெரிந்து கொள்ள உதவும் பாலிவுட் நாட்காட்டி அம்சம் இந்த தளத்தின் ஓரளவு பயனுள்ள பகுதியாக கொள்ளலாம். ஆண்டு வரிசைப்படியும் படங்களை தெரிந்து கொள்ள இது உதவுகிறது.
தளத்தில் உள்ள கட்டுரைகளும், தகவல்களின் தரம் பார்வையாளர்களை மீண்டும் வரத்தூண்டும் வகையில் இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்காட்டி அம்சம் தளத்திற்கான இணைய தூண்டிலாக இருக்கும். அதிலும் குறிப்பாக கூகுள் போன்ற தேடியந்திரங்களில் திரைப்படம் தொடர்பாக தேடும் போது, இந்த நாட்காட்டி அம்சம் பார்வையாளர்களை இந்த தளத்தின் பக்கம் இடர வைக்கும்.
இதே நோக்கில் தான், தளத்தின் பெயரும், பாலிவுட்.எம்டிபி என அமைக்கப்பட்டிருப்பதாக புரிந்து கொள்ளலாம். பாலிவுட் திரைப்படங்களுக்கான களஞ்சியம் என்பதை குறிக்கும் பாலிவுட் மூவி டேட்டாபேஸ் என்பதன் சுருக்கமாக இது அமைகிறது.
இணையத்தின் நன்கறியப்பட்ட திரை களஞ்சியமான இண்டெர்நெட் மூவி டேட்டாபேஸ் எனப்படும் ஐ.எம்.டி.பி தளத்தை போலவே அமைக்கப்பட்ட தளமாக இதை கொள்ளலாம். ஆனால் பெயர் பொருதத்தை தவிர, ஐஎம்டிபி தளத்திற்கும், இந்த பாலிவுட் தளத்திற்கும் எந்த பொருத்தமும் இல்லை.
பாலிவுட் மூவிடேட்டாபேஸ் எனும் தலைப்பு இணையவாசிகளை கவர்ந்திழுக்கும் என்ற வகையில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் திரைக்களஞ்சிய தகவல்களை நாடி வருபவர்களுக்கு இந்த தளம் ஏமாற்றமே அளிக்கும். ஏனெனில், இதில் களஞ்சிய நோக்கில் விரிவான தகவல்கள் இல்லை. ஒரு சில தளங்கள் செய்யக்கூடிய போல, ஆண்டு அடிப்படையில் பாலிவுட் படங்களின் பட்டியலை மட்டும் கூட இந்த தளம் அளிக்கவில்லை.
திரைப்பட ரசிகர்களின் வழக்கமான எதிர்பார்ப்பை நிறைவேற்றக்கூடிய வகையில், உருவி எடுக்கப்பட்ட தகவல்கள் இந்த தளத்தில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், குறிப்பிட்ட பாலிவுட் படத்திற்கான திரைக்களஞ்சிய விவரங்களை நாடி வருபவர்களுக்கு இந்த தளம் தன்னிடம் என்ன கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. அதிலும், தேடியந்திர விளம்பர குறிச்சொல் உத்திகளுக்கு ஏற்ப கூகுள் இந்த தளத்தை அடையாளம் காட்டுவதை ஏற்றுக்கொண்டு இதில் நுழையும் போது பார்வையாளர்கள் தலை தெறித்தே ஓடுவார்கள்.
வங்காள திரைப்பட மேதை ரித்விக் கட்டக் (Ritwik Ghatak) திரைப்படங்கள் தொடர்பான தேடல் பட்டியலில், இந்த தளம் தோன்றுகிறது. ஆர்வத்துடன் உள்ளே சென்று பார்த்தால், ரிதிவிக் கட்டக் படங்கள் முழு பட்டியல் எனும் தலைப்பின் கீழ் அவரது ஒரு படம் கூட இல்லை.
1958 முதல் 1958 வரையான கட்டக்கின் முழு படங்கள் பட்டியல் என்பது போன்ற ஒரு சில வரிகளுடன், ஒரே ஒரு படத்தின் பெயர் மட்டும் இடம் பெற்றுள்ளது. மதுமதி எனும் அந்த படமும் கட்டக் இயக்கியது அல்ல. பிமல் ராய் இயக்கியது. - https://www.bollywoodmdb.com/celebrities/filmography/ritwik-ghatak/29891
கட்டக் படங்கள் பற்றி தகவல்களை தேடுபவர்கள் எத்தனை தீவிரமான மனநிலையுடன் வருவார்கள் எனும் போது, இந்த தளத்தின் பொய்களஞ்சியம் ஏற்படுத்தக்கூடிய அதிர்ச்சியை புரிந்து கொள்ளலாம். இது போன்ற ஏமாற்று செயலில் ஈடுபடாத தளங்களையே நல்ல தளம் என்றும் நேர்மையான தளம் என்றும் கொள்ளலாம்.
நிற்க, ரிதிவிக் கட்டக் திரைப்படங்கள் தொடர்பான அடிப்படை தகவல்களை அளிக்கும் திமூவிடேட்டாபேஸ் (https://www.themoviedb.org/person/543652-ritwik-ghatak
) தளம் சற்று நிம்மதி பெருமூச்சுவிட வைக்கிறது.