கதை எழுத வழிகாட்டும் இணையதளம்
எழுத்தார்வம் மிக்கவர்களுக்கு வழிகாட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது பிராம்ட்ஸ்.டெடா.டெவ் (https://prompts.deta.dev/) இணையதளம்.
எழுதுவதற்கான இணைய பலகையையும் உருவாக்கி கொடுத்து, அதில் எழுதி பழகுவதற்கான முதல் அடியையும் எடுத்துக்கொடுகொடுத்து ஊக்குவிக்கிறது இந்த தளம்.
எழுத்தாளர்களுக்கு ஏற்படும் தடை ரைட்டர்ஸ் பிளாக் என கூறப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த தடையை கடந்து எழுதுவதற்கான படைப்பூக்கம் பெறுவதற்கான தூண்டுகோளை அளிப்பதே இந்த தளத்தின் நோக்கமாக இருக்கிறது.
அதாவது எதை எழுதுவது எனும் கேள்விக்கு பதில் அளிப்பது போல, எழுதுவதற்கான முதல் வரியை இந்த தளம் முன்வைக்கிறது. இதை தூண்டுகோள் ( பிராம்ட்) என குறிப்பிடுகிறது.
இதை ஏற்றுக்கொண்டு கிளிக் செய்தால் அடுத்த பக்கத்தில், எழுதி ( இணைய பலகை தோன்றுகிறது). அதில் முதல் வரி தானாக தோன்றவும் செய்கிறது. அந்த வரியை நூல் பிடித்துக்கொண்டு, அப்படியே எழுத துவங்க வேண்டும்.
ஒவ்வொரு முறை கிளிக் செய்தாலும் வேறு வேறு தூண்டுகோள் வரி தோன்றுகிறது.
எப்படியும் எழுதி விடுவது எனும் தீர்மானத்துடன், டைமர் வசதியை இயக்கி விட்டு எழுதலாம். மனதில் தோன்றுவதை எழுதி முடித்த பின் அதை சேமித்து வைக்கும் வசதியும் உள்ளது.
சும்மாயில்லை, இணையத்தில் கருத்து பரிமாற்றத்திற்கு பெயர் பெற்ற சமூக விவாத தளமான ரெட்டிட்டில் உள்ள, எழுத்தார்வம் சார்ந்த துணை குழுவில் (https://reddit.com/r/WritingPrompts) இருந்து, எழுதுவதற்கான தூண்டுகோள் வாசகத்தை இந்த தளம் முன்வைக்கிறது.
உங்களுக்கு ஆர்வம் இருந்தால், நேராக இந்த ரெட்டிட் துணை குழுவிற்கே சென்று பார்க்கலாம். எழுத்து சார்ந்து இங்கு நடக்கும் விவாதம் உங்களை திக்குமுக்காட வைத்துவிடும்.