நான் ரொட்டிக்காக ஒரு இணையதளமும், அதன் பின்னணி கதையும்!
இன்றைய இணையதள அறிமுகத்துடன் உங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான சவாலையும் முன்வைக்கிறேன்.
நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் ரெஸ்டாரண்டில் உணவு ஆர்டர் செய்யும் போது, எத்தனை நான் ரொட்டிகளை ஆர்டர் செய்வது எனும் கேள்விக்கு விடை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இணையதளத்தை இன்று பார்க்கப்போகிறோம்.
இந்த இணையதளத்தை, இப்படியும் ஒரு இணையதளமா, என லேசாக வியந்து பாராட்டுவீர்களா அல்லது இதெல்லாம் ஒரு இணையதளமா என அலட்சியம் செய்து கடந்து போவீர்களா? இது தான் உங்களுக்கான சவால்.
உங்கள் பதில் எதுவாக இருந்தாலும், இந்த இணையதளம் பின்னே உள்ள கதையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான், இந்த இணையதளத்தை முழுமையாக ரசிக்க முடியும்!
இணையதள கதையை பார்ப்பதற்கு முன், https://fournaan.co.uk/ எனும் அந்த இணையதளத்தை அறிமுகம் செய்து கொள்ளலாம்.
அதிக அம்சங்கள் இல்லாமல் எளிமையாக இருக்கும் இந்த தளத்தில், நான்கு நான் எனும் ஆங்கில வார்த்தைகளுக்கு கீழ், 1 முதல் 5 எண்கள் கொண்ட சில கட்டங்கள் இருக்கின்றன. அதன் கீழ், உங்கள் கறியுடன் எத்தனை நான்களை நீங்கள் ஆர்டர் செய்ய வேண்டும்? எனும் கேள்வி இடம் பெற்றுள்ளது.
நீங்கள் ஆர்டர் செய்ய உத்தேசித்திருக்கும் நான்களின் எண்ணிக்கையை உள்ளீடு செய்தால், நிச்சயமாக இவ்வளவு தான் ஆர்டர் செய்யப்போகிறீர்களா? என கேட்கப்பட்டு, உண்மையில் நீங்கள் எத்தனை நான் ரொட்டி ஆர்டர் செய்ய வேண்டும் என அறிந்து கொள்ளுங்கள் என பரிந்துரைக்கப்படுகிறது.
இதை ஏற்று அடுத்த கட்டத்திற்கு ஆர்வத்துடன் கிளிக் செய்தால், உங்களுடன் எத்தனை பேர் சாப்பிடுகின்றனர் என்று கேட்கப்பட்டு, அரிசி உணவு எத்தனை ஆர்டர் செய்ய உள்ளீர்கள் என்றும் கேட்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக நீங்கள் கடைசியாக சாப்பிட்டு எத்தனை மணி நேரம் ஆகிறது என கேட்க்கப்படுகிறது.
நீங்கள் அளிக்கும் பதில்களின் அடிப்படையில், சரியாக நீங்கள் ஆர்டர் செய்ய வேண்டிய நான் ரொட்டிகளின் எண்ணிக்கை பரிந்துரைக்கப்பட்டு, ஒருவருக்கு எத்தனை ரொட்டிகள் வரும் என்ற கணக்கும் அளிக்கப்படுகிறது.
உணவுப்பிரியர்கள் நிச்சயம் இந்த தளத்தை ரசிக்கவே செய்வார்கள்,. அதிலும் குறிப்பாக அடிக்கடி ரெஸ்டாரண்ட் சென்று, பிரியானி போன்ற அரசி உணவையும், நான் ரொட்டிகளையும், இன்னும் பிற வகைகளையும் ஆர்டர் செய்துவிட்டு இறுதியில் நான் ரொட்டிகளை காலி செய்ய முடியாமல் திணறிய அனுபவம் கொண்டவர்கள் இந்த தளத்தை பயனுள்ளதாக கருதலாம். அல்லது நிச்சயம் சுவாரஸ்யமானதாக கருதலாம்.
இன்னும் சிலர், இதற்கெல்லாம் இணையதளம் அமைப்பார்களா என்று அதிருப்தி கொள்ளலாம்.
இந்த இடத்தில் தான், இந்த தளத்தின் பின்னணி கதையை தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
இணையத்தில் எத்தனையோ விதமான இணையதளங்கள் இருக்கின்றன. நகைச்சுவை நோக்கத்துடன் அமைக்கப்படும் இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன. அவற்றில் சில புதுமையான கருத்தாக்கத்தோடு புன்னகைக்க வைக்கும். இன்னும் சில, இது பயன்பாட்டு நோக்கிலான தளமா அல்லது கேலி செய்யும் தளமா என தெளிவாக புரியாமல் குழம்ப வைக்கும்.
மேலே சொன்ன தளம் இரண்டும் கலந்த தன்மையை கொண்டிருக்கிறது. கூட்டமாக சென்று வட இந்திய உணவு சாப்பிடுவர்கள், தேவைக்கு அதிகமாக ஆர்டர் செய்து விட்டு திணறாமல் இருக்க சரியான எண்ணிக்கையில் நான் ரொட்டிகளை ஆர்டர் செய்ய உதவும் வகையில் இது பயனுள்ள இணையதளம் தான்.
அதே நேரத்தில், கணக்கில்லாமல் ஆர்டர் செய்துவிட்டு சாப்பிட முடியாமல் திண்டாடும் மிகை பழக்கத்தை கேலி செய்யும் தளம் என்றும் கருதலாம்.
இந்த தளத்தின் நோக்கத்தை உறுதி செய்து கொள்வதற்காக, இணையத்தில் தேடிப்பார்த்த போது தான், இதன் பின்னணியை தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த பின்னணியுடன் பார்க்கும் போது இந்த தளம் சபாஷ் போட வைக்கிறது.
விஷயம் இது தான், தளத்தின் தலைப்பில் உள்ள ’நான்கு நான்கள்’ என்பது தற்செயலான தேர்வு அல்ல. ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த பிரபலமான ஒரு தொலைக்காட்சி தொடரில் வரும் மறக்க முடியாத ஒரு நகைச்சுவை காட்சியின் மையமாக அமைந்த எண்ணிக்கை இது.
பீப் ஷோ (peepshow) என்பது அந்த தொடரின் பெயர். பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சியில் 2003 ம் துவங்கி ஆண்டு கணக்கில் ஒளிபரப்பாக ரசிகர்களை கவர்ந்த தொடர். கல்லூரியில் ஒன்றாக படித்து பின்னர் பணி வாழ்க்கையில் ஒன்றாக தொடரும், மார்க் மற்றும் ஜெர்மி ஆகிய இரண்டு நண்பர்களை மையமாக கொண்டு தொடர் அமைந்துள்ளதாக விக்கிபீடியா தெரிவிக்கிறது.
இந்த தொடரின் ஒவ்வொரு சீசனில் வரும் காட்சிகளும், நகைச்சுவை வசனங்களும் வெகு பிரபலம் என்பதையும், இந்த தொடருக்கு என பெரும் ரசிகர் படை இருப்பதையும் அறிய முடிகிறது.
இந்த தொடரின் ஒரு குறிப்பிட்ட காட்சியில் நண்பர்கள் மார்க் மற்றும் ஜெர்மி ரெஸ்டாரண்ட் ஒன்றில் சாப்பிட செல்கின்றனர். இந்திய ரெஸ்டாரன் அது. அப்போது, பணியாளரிடம் ஜெர்மி, மூன்று புலாவ் மற்றும் நான்கு நான் ரொட்டிகளை ஆர்டர் செய்தேனே என கேட்கிறார். மார்க் குறுக்கிட்டு நான் தான் ஆர்டரை மாற்றினேன் என்கிறார். உடனே ஜெர்மி, நானும் பெரிய ஆளாகிவிட்டேன், தெரிந்து தான் ஆர்டர் செய்தேன், மூன்று புலாவ் உணவு மற்றும் நான்கு பெஷவாரி நான் ரொட்டிகள் என மீண்டும் பலமாக ஆர்டர் செய்கிறார். இதை கேட்டதும் மார்க், தனக்கே உரிய கோணங்கித்தனத்தமான முகபாவனையுடன், நான்கு நான்களா ஜெர்மி, இது மடத்தனம் என்கிறார். ஆங்கிலத்தில் ’இன்சேன்’ என்று வருகிறது.- “Four naan, Jeremy? Four? That's insane.”
மார்க்கின் இந்த எதிர்வினையும், அதற்கேற்ற அவரது முக உணர்வும், அந்த காட்சியின் நகைச்சுவை தன்மையை உச்சத்திற்கு கொண்டு சென்றுவிடுகிறது. அதோடு, அதிகமாக நான் ரொட்டிகளை ஆர்டர் செய்து சாப்பிட முடியாமல் தவிக்கும் பேருண்மையையும் இந்த காட்சி படம் பிடித்துக்காட்டுகிறது.
தொடரில் இந்த காட்சியை பார்த்து ரசித்ததோடு நில்லாமல் ரசிகர்கள் இதை இணையத்தில் மீம்களாக உலாவ விட்டும் மகிந்திருக்கின்றனர். இது தொடர்பான பிரத்யேக மீம்களை உருவாக்கவும் ஒரு இணையதளம் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
மார்க்கின் மீமை ரசிப்பதற்காக என்றே, போர்நான் எனும் பெயரிலும் ஒரு இணையதளம் அமைக்கப்பட்டிக்கிறது. https://fournaan.com/
இந்த மறக்க முடியாத நகைச்சுவையையும், அது தொடர்பான மீம்களையும் புத்திசாலித்தனமாக பயன்படுத்திக்கொண்டு, சரியான நான் ரொட்டிகளை ஆர்டர் செய்வதற்கான கணக்கை சொல்லும் https://fournaan.co.uk/ இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள https://shoreditchdesignstudio.com/about-us/ எனும் நிறுவனத்தின் நிறுவனர் ஆண்ட்ரூ பர்டன் இந்த தளத்தை அமைத்திருக்கிறார்.
இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் ரொட்டி கால்குலேட்டருக்கு கீழே இடம்பெறும் கோட்டுருவ சித்திரம், நான்கு ரொட்டிகளா எனும் மறக்க முடியாத வசனத்தை உதிர்த்த பீப் ஷோ தொடரின் நாயகன் மார்க்கினுடையது என்பதையும் இப்போது புரிந்து கொள்ளலாம்.
இந்த தொடர் நெட்பிளிக்சிலும் காணக்கிடைக்கிறது.
குறிப்பிட்ட இந்த நகைச்சுவை காட்சியை யூடியூப்பிலும் காணலாம்: