ஸ்டார்ட் அப் கதை சொல்லும் தளம்

’ஸ்டார் அப் சட்டைகள்’ பெயர் நன்றாக இருக்கிறதா? இந்த பெயரிலான இணையதளத்தின் (https://shirtsofstartups.com/ ) பின்னே உள்ள எண்ணமும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. ஸ்டார்ட் அப் நிறுவனர்களின் கதைகளை சொல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த தளம், அதை கொஞ்சம் புதுமையான முறையில் செய்கிறது.

ஐபிஎல் அணிகளுக்கு அடையாளமாக ஒரு டி-ஷர்ட் இருப்பது போல, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அடையாளமாக இருக்கும் டி-ஷர்ட்டை அணிந்து அதன் நிறுவனர்களை படம் பிடித்து, அப்படியே அவர்கள் தங்களை சுய அறிமுகம் செய்து கொள்ளும் வகையில் இந்த தளம் அமைந்துள்ளது.

நிறுவனர்கள் தங்கள் கதையை சொல்வது, உணர்வு பூர்வமாக இருப்பதோடு, ஈடுப்பாட்டையும் ஏற்படுத்துகிறது. உதாரணத்திற்கு, ஆல்கஹால் இல்லாத பீர் தயாரிக்கும் நிறுவனத்தை துவக்கியுள்ள நிறுவனர் ஒருவர், தந்தை குடிப்பழக்கம் கொண்டவராக இருந்ததால், இத்தகைய வீட்டில் வளரும் இன்னல்களை அனுபவித்ததால் மதுவுக்கு அடிமையாகமல் இருக்க வழி செய்யும், ஆல்கஹால் அல்லாத பீர் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியதாக கூறியுள்ளார்.

இப்படி ஒவ்வொரு நிறுவனர்களும் தங்கள் ஸ்டார்ட் அப் பின்னே உள்ள கதையை பகிர்ந்து கொண்டுள்ளனர். நிறுவன டி-ஷர்ட்டுடன் அவர்கள் தோன்றும் நிலையில், அந்த படங்களின் அருகே அவர்கள் கதையையும் படிக்கலாம்.

ஸ்டார்ட் அப் கதைகளை தெரிந்து கொள்வதோடு, புதுமையான ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும் அறிமுகம் செய்து கொள்ளலாம். உதாரணமாக, லேசர்டிரேட் நிறுவனம், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்களுக்கான இணைய சந்தையாக செயல்படுகிறது. அதே போல ஸ்பேஸ் நவ் நிறுவனம், உலகம் முழுவதும் எல்லா வகையான இடங்களையும் வாடகைக்கு அமர்த்திக்கொள்வதற்கான இணைய சந்தையாக இருக்கிறது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடர்பான செய்திகள், முதலீடு விவரங்கள், டீல்களை அளிக்கும் அநேக தளங்கள் இருக்கின்றன. நிறுவனர்கள் கதைகளில் கவனம் செலுத்தும் தளங்களும் இருக்கின்றன. என்றாலும், ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் தங்கள் நிறுவன ட்-ஷர்ட் அணிந்து தங்கள் தொழில்முனைவு அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் வகையிலான இந்த தளம் அதன் எளிமையால் கவர்கிறது.

இந்த தளத்தின் அனிஷ் சின்ஹா, மனிஷ் பவா ஆகிய இந்தியர்களின் அனுபவங்களும் இடம்பெற்றுள்ளன. அனிஷ், சிறு நிறுவனங்களுக்கு காப்பீடு சேவையை எளிமையாக்கும் https://www.upcover.com/ நிறுவனத்தை நடத்துகிறார். மனிஷ் சிறு நிறுவனங்கள் மென்பொருள் சேவையை எளிதாக பெறும் ஸ்டேக்கோ நிறுவனத்தை நடத்துகிறார்.

ஆஸ்திரேலியாவைசேர்ந்த ஷோரி எனும் இளம் பெண் இந்த தளத்தை அமைத்துள்ளார். புகைப்பட கலைஞரான ஷோரி, புகைப்படம் எடுப்பது மற்றும் ஸ்டார்ட் அப்களில் தனக்கு இருக்கும் ஆர்வம் இரண்டையும் இணைந்து இந்த தளத்தை அமைத்திருப்பதாக கூறுகிறார்.

பேஸ்புக் மூலம் சாமானியர்கள் கதையை பதிவு செய்யும் ஹியூமன்ஸ் ஆப் நியூயார்க் தளத்தை இந்த தளம் நினைவுபடுத்தினால் அதுவும் நல்லதே!