ஹைக் செயலியை நீங்கள் அறிந்திருக்கலாம், பயன்படுத்தியும் கொண்டிருக்கலாம். இல்லை எனக்கு வாட்ஸ் அப்பே போதும் என நினைப்பவராக இருந்தால், ஹைக் செயலியை பயன்படுத்துவதை பரிசீலிக்கத்தூண்டும் வகையில், புதிய மெய்நிகர் உலகை இந்த இணைய அரட்டை செயலி அறிமுகம் செய்துள்ளது.
வாட்ஸ் அப் போல, டெலிகிராம் போல, ஹைக் செயலியும் ஒரு மேசேஜிங் சேவை. மற்ற செயலிகள் எல்லாம் வெளிநாட்டு உருவாக்கங்கள் என்றால், ஹைக் இந்திய செயலி எனும் அடைமொழிக்கு உரியது.
வாட்ஸ் அப் அளவுக்கு பிரபலமாகாவிட்டாலும், ஹைக் சேவைக்கு என்று அபிமானிகள் இல்லாமல் இல்லை. மேலும், ஹைக்கும் பயனாளிகளை கவர்வதற்காக புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. இணைய பரிமாற்றத்தை வண்ணமயமாக்கும் ஸ்டிக்கர்கள் இதில் ஒன்று.
இந்த வரிசையில் இப்போது, ஹைக்லாந்து எனும் மெய்நிகர் உலகை ஹைக் அறிமுகம் செய்திருக்கிறது. ஹைக் பயனாளிகள் இந்த மெய்நிகர் உலகில் சந்தித்து இணைய உரையாடலை மேற்கொள்ளலாம்.
அறிமுக நிலையில் உள்ள ஹைக்லாந்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. இல்லம் ( ஹோம் ) என குறிப்பிடப்படும் முதல் பகுதியில், நண்பர்களுடன் இணைந்து வீடியோவை பார்க்கலாம். இந்த மெய்நிகர் பகுதிக்குள் நுழைந்த பிறகு, விரும்பிய நண்பரை உரையாட அழைக்கலாம். வேறு யாரும் இதில் பங்கேற்க முடியாது. உரையாடுவதோடு, இதில் உள்ள திரையில் யூடியூப் வீடியோக்களை தேர்வு செய்து நண்பருடன் இணைந்து பார்க்கலாம். இந்த பகுதியை நம் விருப்பம் போல மாற்றி அமைத்துக்கொள்ளலாம். அழகான இமோஜிகள் பல இருக்கின்றன.
பெரிய திரை ( பிக் ஸ்கிரீன்) எனப்படும் இரண்டாவது பகுதியில், யாரை வேண்டுமானாலும் அழைத்து உரையாடலை மேற்கொள்ளலாம். அவர்களுடன் இணைந்து வீடியோ பார்க்கலாம். புதியவர்களுடன் சமூக உரையாடலில் ஈடுபட்டு நட்பு வளர்க்க இந்த சேவை உதவும் என ஹைக் தெரிவிக்கிறது.
மேசேஜிங் சேவையில் எந்த நிறுவனமும் பெரிதாக புதுமை செய்துவிடாத நிலையில், இந்த பிரிவில் மெய்நிகர் தன்மையுடன் சமூக உரையாடலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் வகையில் ஹைக்லாந்து சேவையை உருவாக்கியிருப்பதாக ஹைக் நம்புகிறது.
ஹைக்லாந்து சேவை உங்களுக்கு ஈர்ப்புடையதாக இருக்கிறதா என பயன்படுத்திப்பாருங்கள்.- https://hike.in/hikeland/
ஹைக் சேவையையும், வாட்ஸ் அப்பையும் ஒப்பிட விரும்பினால் இந்த குவோரா கேள்வி பதிலை படித்துப்பார்க்கவும்: https://www.quora.com/Which-one-is-better-Hike-or-WhatsApp#:~:text=Hike%20is%20better%2C%20hands%20down.,-You%20ask%20why&text=Hike%20has%20faster%20messaging%20speed%20than%20WhatsApp.,has%20more%20emojis%20than%20WhatsApp.&text=Hike%20has%202%2Dway%20voice,the%20features%20available%20on%20WhatsApp.
அருமை நண்பரே...தேடி தேடி ...புதியவற்றை எங்களுக்கு அறிமுகம் செய்வதில்!