ஐபாடை மீட்டுருவாக்கும் செய்யும் இணையதளம்
இப்போது நாம் பார்க்க இருக்கும் இணையதளம், எளிமையான ஒரு இணைய பக்கம் தான். - https://tannerv.com/ipod/
ஆனால், இந்த இணைய பக்கம் உங்களை வசீகரிக்க கூடியது. அதிலும் நீங்கள் ஆப்பிள் அபிமானி+ ஐபாடு (iPod ) பிரியராக இருந்தால் இந்த இணைய பக்கம் உங்களை துள்ளிக்குத்திக்க வைக்கும். அதே நேரத்தில் ஆப்பிள் மீது தனி அபிமானம் இல்லாதவர்களும் கூட இந்த பக்கத்தை விரும்பி வரவேற்பார்கள் என்பதோடு பொதுவாக சாதனங்கள் மீது பற்று கொண்டவர்கள் இதை போற்றி வரவேற்பார்கள். ஏனெனில், உருவாக்கிய நிறுவனமே கைவிட்ட ஒரு சாதனத்தை இந்த இணைய பக்கம் டிஜிட்டல் தோற்றமாக மீட்டுருவாக்கம் செய்திருக்கிறது.
பலரும் மறந்துவிட்ட ஆப்பிளின் ஐபாடு கிளாஸிக் சாதனத்தை இந்த தளம் புதுப்பித்து தந்திருக்கிறது.
இந்த தளத்தில் நுழைந்ததுமே, ஆப்பிளின் காவிய உருவாக்கமான ஐபாடு சாதனத்தின் டிஜிட்டல் வடிவை எதிர்கொள்ளலாம். வெறும் தோற்றம் மட்டும் அல்ல: இந்த டிஜிட்டல் ஐபாடில் பாட்டு கேட்கலாம். அதிலும் எப்படி தெரியுமா? பழைய ஐபாடு சாதனத்தில் அதன் அடையாளமாக அமைந்திருந்த கிளிக் சக்கரத்தை (click wheel ) இயக்குவதன் மூலம் பாட்டு கேட்கலாம்.
டிஜிட்டல் கோப்பு வடிவில் இசை கேட்க வழி செய்த எம்பி-3 பிளேயர் வகையைச்சேர்ந்த ஐபாடு சாதனம் அழகியல் அமைதியும், வடிவமைப்பு நேர்த்தியும் கலந்த அற்புதமாக விளங்கியது. சாதனத்தை இயக்குவதற்கான பொறியாக அமைந்த கிளிக் சிக்கரத்தில் இதை கச்சிதமாக உணரலாம்.
சாதனத்தின் இரண்டாம் பாதியில் மையமாக அமைந்திருந்த இந்த சக்கரம் மொத்தம் நான்கு விசைகள் மற்றும் மைய விசையை கொண்டிருந்தது. நான்கு விசைகளை கையால் அழுத்துவதன் மூலம் எளிதாக சாதனத்தை இயக்கலாம். பட்டியலை வர வைப்பது, பாடல்களை தேர்வு செய்வது, அடுத்த பாடலுக்கு செல்வது, விரும்பிய பாடலை ஒலிக்கச்செய்வது என எல்லாவற்றையும் இந்த விசைகளை கொண்டே இயக்கலாம்.
அது மட்டும் அல்ல, சாதனத்தை ஒரு கையில் வைத்துக்கொண்டு, ஒற்றை விரலாம் இதன் விசைகளை இயக்கலாம். அப்படியே, பட்டியலில் இருந்து புகைப்படம், விளையாட்டு போன்றவற்றையும் தேர்வு செய்யலாம். இந்த எளிமை தான் பயனாளிகளை வெகுவாக கவர்ந்தது.
மொபைல் சாதனங்களில் தொடுதிரை வசதி வருவதற்கு முன், எல்லாமே பட்டன்களாக இருந்த காலத்தில், ஆப்பிள் தனது ஐபாடு சாதனத்தில், சுழலும் சக்கர வடிவில் விசைகளை அமைத்து, பட்டனும், தொடுதிரை அம்சமும் இணைந்த வசதியை அளித்து அசத்தியது.
விரும்பிய பாடலை தேர்வு செய்து கேட்பதை, வெவ்வேறு இடங்களில் விசைகளை அணுகுவதற்கு பதிலாக ஒரே இடத்தில் அடுத்தடுத்த சொடுக்கல்கள் மூலம் ஐபாடு சாத்தியமாக்கியது. இந்த சக்கரத்திற்கு மேல் இருந்த பாடல் ஆல்பம் முகப்பு பக்கம் தோன்றும் வசதியும் பயனாளிகளை வெகுவாக கவர்ந்தது.
இடைமுக வல்லுனர்களை கேட்டால், ஐபாடு கிளிக் சக்கரத்தின் அருமை பற்றி மணிக்கணக்கில் பேசுவார்கள். ஆனால், இதெல்லாம் பழங்கதை.
எம்பி-3 பிளேயராக ஐபாடு பெரும் வெற்றி பெற்று, ஐபாடு டச், ஐபாடு கிளாசிக் என பல வடிவங்களை கண்டாலும், ஐபோன் வெற்றிக்கு பின் ஆப்பிள் நிறுவனம், இந்த சாதனத்தை படிப்படியாக கைவிட்டுவிட்டது. தொடுதிரை வசதி கொண்ட ஐபோனிலேயே பாட்டு கேட்கலாம், படம் பார்க்கலாம் என்றான பிறகு, தனியே பாடல்களை கேட்ப ஐபாடு தேவைப்படவில்லை.
வர்த்தக நோக்கில் ஐபாடு இனியும் தேவையில்லை என ஆப்பிள் நிறுவனம் தீர்மானித்தாலும், ஐபாடு பிரியர்களுக்கு அதன் அனுபவம் மறக்க முடியாதது.
இப்படி இன்னமும் ஐபாடை நினைத்து ஏங்கும் ஐபாடு பிரியர்களுக்காக, டேனர் வில்லட்டே (Tanner Villarete) எனும் மென்பொருளாலர், டிஜிட்டல் வடிவில் ஐபாடு அனுபவத்தை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார். இந்த டிஜிட்டல் ஐபாடு கிளாசிக்கில் ஆப்பிள் மியூசிக் சேவை மூலம் பாடல்களை கேட்கலாம் என்பதோடு ஸ்பாட்டிபை சேவை வாயிலாகவும் பாடல்களை கேட்கலாம்.
-
ஒரு பிரோகிரமாக இருந்தால், நீங்களே படைப்பாளியாக இப்படி மறக்கப்பட்ட சாதனங்களை மீட்டெடுக்கலாம் என்பதற்கு இது சிறந்த உதாரணம். ஆனால் ஆப்பிள் சாதனங்களை மீட்டெடுக்கும் போது காப்புரிமை தொடர்பான சிக்கல் வரலாம்.
நவீன ஐபோனையே, அந்த கால ஐபாடு கிளாசிக் போல மாற்றிவிடும் ஒரு செயலியை உருவாக்கியவர் இப்படி தான் சிக்கலுக்கு உள்ளானார். லூயிஸ் அன்ஸ்லோ எனும் மென்பொருளாலர் ரீவுண்ட் (Rewound ) எனும் பெயரில் இந்த செயலியை உருவாக்கியிருந்தார். இந்த செயலியை நிறுவினால், ஐபோன், பழைய ஐபாடு சாதனம் போல மாறிவிடும். ஆனால், ஆப்பிள் நிறுவனம் இந்த செயலியை தனது ஸ்டோரில் இருந்து நீக்கிவிட்டது.
இதே போல எல்வின் ஹு (Elvin Hu ) எனும் மாணவரும் ஒரு ஐபாடு மாற்ற செயலியை உருவாக்கினார்.
இவை ஒரு பக்கம் இருக்க, ராஸ்ப்பெரி கம்ப்யூட்டர் உதவியோடு, அனலாக் வடிவிலேயே ஐபாடு சாதனத்தை மீண்டும் உருவாக்க வழிகாட்டும் கட்டுரை ஒன்றை ஹேக்கடே தளம் வெளியிட்டுள்ளது: https://hackaday.com/2021/01/27/raspberry-pi-zero-powers-spotify-streaming-ipod/#more-458449
-