ஒரு அனிமேஷன் தளமும், கூகுளின் போதாமையும்!
அனிமேட்டட் இஞ்சின்ஸ் (http://animatedengines.com/ ) என்றொரு அருமையான இணையதளம் இருக்கிறது. அனிமேஷன் பிரியர்களையும், அதைவிட முக்கியமாக இஞ்சின் பொறியியலில் ஆர்வம் கொண்டவர்களையும் கவர்ந்திழுக்க கூடிய தளம் இது. ஆனால், இரு தரப்பினருமே கூகுள் மூலம் இந்த தளத்தை கண்டறிவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என கேட்க விரும்புகிறேன்.
இப்படி கேட்பதற்கான முக்கிய காரணம், இந்த தளத்தை நான் கூகுள் தேடலில் கண்டறியவில்லை என்பது தான். மிகவும் தற்செயலாக ஹேக்கர்நியுஸ் தளத்தில் இந்த தளத்தை காண நேர்ந்தது.
ஹேக்கர்நியூஸ் சமூக செய்தி வகையைச்சேர்ந்த தளம். அதாவது, பயனாளிகள் சமர்பிக்கும் செய்திகளுக்கான இணைப்புகளை கொண்ட சமூக திரட்டி வகை இணையதளம் இது. ஹேக்கர் நியூஸ் தளத்தில், பொருட்படுத்தக்கூடிய செய்திகள், கட்டுரைகளுக்கான இணைப்புகளை காணலாம். இதன் முகப்பு பக்கத்தில், செய்திகளுக்கான தலைப்புடன் அதற்கான இணைப்பும் வரிசையாக இடம்பெற்றிருக்கும். இந்த செய்திகளை வாசித்தவர்களின் கருத்துக்களும் இடம்பெற்றிருக்கும்.
உண்மையில் இந்த பின்னூட்டங்கள் தான் ஹேக்கர்நியூஸின் சிறப்பம்சம். இது வெறும் இணைப்புகளுக்கான தளம் என்பதை கடந்து, இதன் பின்னே தீவிர ஆர்வமும், அறிவும் கொண்ட சமூகம் இருப்பதை, பின்னூட்டங்கள் வாயிலான விவாதத்தின் வழியே தெரிந்து கொள்ளலாம்.
அநேகமாக மற்ற இடங்களில் காண முடியாத சுவாரஸ்யமான, பயனுள்ள கட்டுரைகள், செய்திகளுக்கான இணைப்பை ஹேக்கர்நியூஸில் பார்க்கலாம் என்பதால், நான் அடிக்கடி பயன்படுத்தும் தளங்களில் ஒன்றாக இருக்கிறது.
கட்டுரைகள் மட்டும் அல்ல, பல நேரங்களில் அருமையான இணையதளங்களையும் ஹேக்கர்நியூஸ் வாயிலாக கண்டறியலாம். புதிய தளங்கள் மட்டும் அல்ல, பொக்கிஷமான பழைய தளங்களையும் கண்டறியலாம்.
இப்படி தான், அனிமேட்டட் இஞ்சின்ஸ் தளத்தை அடையாளம் கண்டேன்.
இந்த தளத்தின் பெயரை குறிப்பிட்டு, அருகிலேயே தளத்தின் முகவரியும் கொடுக்கப்பட்டிருந்தது. பெயரால் ஏற்பட்ட உந்துதலில் கிளிக் செய்து பார்த்தால், முதல் பார்வையிலேயே அருமையான தளம் எனும் உணர்வை தந்தது.
எல்லா நல்ல தளங்களை போல எளிமையான வடிவமைப்பு கொண்ட இந்த தளம், பள்ளி பாட புத்தகங்களில் பார்க்க கூடிய கோட்டுச்சித்திரம் போல, வாகன இஞ்சின்களின் படங்கள் வரையப்பட்டுள்ளன. இஞ்சின்களின் முக்கிய பாகங்களை உணர்த்தும் வகையில் வண்ண கோடுகளை கொண்ட படங்கள் என்பது மட்டும் அல்ல, அவற்றின் செயல்பாட்டை விளக்கும் வகையில் அனிமேஷன் கொண்ட படங்கள்.
ஆக, எந்த படத்தை கிளிக் செய்தாலும், அந்த இஞ்சின் தொடர்பான விரிவான விளக்கத்தை படக்குறிப்புகளுடன் வாசிக்கலாம் என்பதோடு, இஞ்சினின் இயக்கத்தையும் அனிமேஷனில் கணலாம். பொறியியல் மாணவர்கள் அல்லது இஞ்சின் வடிவமைப்புன் நுணுக்கங்களை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் இந்த அனிமேஷன் விளக்க படங்களை பார்த்தால் உற்சாகம் கொள்வார்கள்.
முகப்பு பக்கத்தில் இருபதுக்கும் அதிகமான இஞ்சின்களின் படங்கள் தான் இடம்பெற்றுள்ளன என்றாலும், அநேகமாக முக்கிய இஞ்சின் வகைகள் அனைத்தும் இதில் அடங்கியிருப்பதாக அனுமானித்துக்கொள்ளலாம்.
சாதாரண இணையவாசிகளை விட, இஞ்சின் பிரியர்கள் கவனிக்கவும் என பரிந்துரைக்க கூடிய தளமாக இருப்பதோடு, அனிமேஷன் நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்துவதற்கான உதாரணமாகவும் இந்த தளம் விளங்குகிறது. இந்த தளத்தை உருவாக்கியவர், இஞ்சின் வடிவமைப்பில் மேதாவியாகவும், அனிமேஷனில் சூரப்புலியாகவும் இருக்க வேண்டும்.
மேட் கீவ்னே என்பவர் உருவாக்கிய இந்த தளம் தொடர்பான வரலாறும் சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதில், 2000 ஆண்டு முதல் இந்த தளம் இருப்பதாக அறிய முடிகிறது.
இந்த இடத்தில் தான், இந்த தளத்தை கண்டறிவதற்கான வாய்ப்பு தொடர்பான கேள்வி எழுகிறது. என்னளவில், கூகுளின் நேர் தேடலில் இந்த தளத்தை கண்டறிந்திருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றே கருதுகிறேன். இதற்கு நிகரான பல அரிய தளங்களை, கூகுள் தேடலில் தற்செயலாக கண்டறிந்தது உண்டு என்றாலும், பொதுவாக நோக்கும் போது, இத்தகைய தளங்களை கூகுள் தேடலில் கண்டறிய வாய்ப்பு குறைவு. இதன் பொருள் கூகுள் தேடலைவிட, இணையதளங்களுக்கான பிரத்கேய தளங்களில், இந்த தளத்தை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு அதிகம். அப்படி தான், ஹேக்கர்நியூஸ் தளத்தில் நான் கண்டறிந்தேன்.
கூகுளில் இந்த தளத்தை கண்டறிய வேண்டும் எனில், அனிமேஷன் +இஞ்சின்கள் என தேடிப்பார்க்க வேண்டும். அல்லது இஞ்சின்கள் வேலை செய்வது எப்படி? + அனிமேஷன் என தேடிப்பார்க்க வேண்டும். இதற்கு நிகரான வேறு சில தேடல் பதங்களை பயன்படுத்தினாலும் இந்த தளம் தேடல் முடிவில் எதிர்படலாம்.
ஆனால், வழக்கமான கூகுள் தேடலில் கண்ணில் படக்கூடிய வழியான, மிகச்சிறந்த அனிமேஷன் தளங்கள் எனும் தேடல் குறிப்புக்கோ அல்லது மிகச்சிறந்த இஞ்சின் விளக்க தளங்கள் எனும் தேடல் குறிப்புக்கோ இந்த தளம் முன்னிறுத்தப்படவில்லை. ( சிறந்த இஞ்சின் விளக்க தளங்கள் தேடலில், கார் அண்ட் டிரைவர் தளத்தில் உள்ள அனிமெஷன் விளக்க கட்டுரை அடையாளம் காட்டப்படுகிறது. ஆனால், அனிமேஷனால் முழு விளக்கம் அளிக்கும் தளமான அனிமேட்டட் இஞ்சின்ஸ் தளம் வரவில்லை).
இதை கூகுளின் போதாமையாகவே கருதுகிறேன். அதைவிட முக்கியமாக இணையதள தேடலுக்கு, கூகுளில் இருந்து விலகி அதற்கான பிரத்யேக சேவைகளை நாடுவதே சரியாக இருக்கும்.
சிறந்த இணையதளங்கள் கண்டறிய கூகுள் சிறந்த வழியல்லை என்பதை சொல்லவே இந்த நீள் பதிவு.
உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.
-