இது இளந்தளிர்களுக்கான விக்கிபீடியா!
விக்கிபீடியாவுக்கு அறிமுகம் தேவையில்லை: ஆனால், விக்கிடியாவுக்கு (https://en.vikidia.org/) அறிமுகம் தேவை. அதென்ன விக்கிடியா? இதுவரை கேட்டிராத தளமாக இருக்கிறதே என நீங்கள் நினைக்கலாம்.
விக்கிடியாவும், விக்கிபீடியா போன்ற ஒரு இணைய களஞ்சியம் தான். விக்கிபீடியா எல்லோருக்கும் பொதுவான இணைய களஞ்சியம் என்றால், விக்கிடியா, சிறார்களுக்கான இணைய களஞ்சியம்.
ஆம், சிறுவர், சிறுமிகளுக்காக என்று தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்டுள்ள இணைய களஞ்சியம் தான் விக்கிடியா. இதற்கும், விக்கிபீடியாவுக்கும் தொடர்பு இல்லை. பிரான்சைச் சேர்ந்த விக்கிடியா சங்கம் இதை நிர்வகிக்கிறது.
விக்கிபீடியாவுக்கு அடித்தளமான விக்கி மென்பொருள் கொண்டே இந்த தளமும் இயங்குகிறது. செயல்பாட்டிலும் விக்கிபீடியா போன்றதே. இதிலும் பயனர்கள் கட்டுரைகளை தாங்களே உருவாக்கலாம், திருத்தலாம், மேம்படுத்தலாம்.
ஆனால், விக்கிபீடியாவை போல அல்லாமல், எட்டு முதல் 13 வயதான சிறார்களை மனதில் கொண்டு இந்த களஞ்சியம் உருவாக்கப்பட்டுள்ளது. சிறார்களுக்கான என்பதால், இதன் கட்டுரை மொழி வாசிக்க எளிதானதாக அமைந்திருக்கிறது. சிறுவர், சிறுமிகளுக்காக எழுதப்படுகிறது எனும் பொறுப்புணர்வுடன் தகவல்கள் அளிக்கப்படுகின்றன.
முதலில் ( 2006) பிரெஞ்சு மொழியில் துவக்கப்பட்டு, பின்னர் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இந்த ஆன்லைன் களஞ்சியம் விரிவாக்கப்பட்டது.
ஆங்கில விக்கிடியாவில், 3500 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. கட்டுரைகள், பல் வேறு வகையான கருப்பொருள் சார்ந்த தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உயிரியல் , விலங்கினம், கணிதம், கம்ப்யூட்டர் அறிவியல் என பல்வேறு தலைப்புகளில் கட்டுரை தொகுப்புகளை காணலாம். இலக்கியம், இசை, வீடியோ கேம் உள்ளிட்ட தலைப்புகளிலும் கட்டுரைகள் உள்ளன. விரும்பிய தலைப்பை கிளிக் செய்தால் அதில் தனிக்கட்டுரைகளை வாசிக்கலாம்.
கட்டுரைகளை தேடும் வசதியும் இருக்கிறது.
எல்லா கட்டுரைகளும், விக்கி கட்டுரை பாணியில் அமைந்திருந்தாலும், நீளம் குறைவாக இருப்பதும், சிறுவர், சிறுமியர் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருப்பதும் தனிச்சிறப்பு.
விக்கிபீடியா போலவே, இதில் உள்ள கட்டுரைகளையும் யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். இதற்கு வயது வரம்பு கிடையாது. ஆனால், தகவல்களை எழுதும் போதும், திருத்தும் போதும், இது இளந்தளிர்களுக்கான களஞ்சியம் என்பதை மனதில் கொண்டால் போதுமானது.
-