உங்களை தேடி வரும் ஜிப்கள்
’ஜிப்களை, இமெயில் மூலம் உங்கள் இன்பாக்ஸ் தேடி வர வழி செய்யும் சேவை’ என ஜிப்-லெட்டர் (https://gif-letter.com/ ) இணையதளத்தை சுருக்கமாக அறிமுகம் செய்து விடலாம். ஆனால், இந்த தளத்தின் அருமையை புரிந்து கொள்ள, இதன் பின்னே இருக்கும் இணையதளத்தின் மகிமையை அறிந்து கொள்ள வேண்டும். அதோடு, இமெயில் வழி எனும் கருத்தாக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
முதலில், ஜி-லெட்டர் சேவை பற்றி கூடுதலான சில தகவல்கள். மீம்கள், போல இமோஜிகள் போல, இன்றைய இணைய யுக கருத்து பரிமாற்றத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் கருவிகளில், ஜிப்களும் ஒன்று. இத்தகைய ஜிப்களை இமெயில் வடிவில் நம்மை தேடி வர வழி செய்வதற்காக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. எந்த வகையான ஜிப்களை பெற விருப்பம் என இதில் உள்ள வகைகளில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.
ஜிப்களுக்கான தொழில்நுட்ப விளக்கமும், அதன் வரலாறும் கொஞ்சம் சிக்கலானது. அதோடு, ஜிப்களை எப்படி உச்சரிப்பது என இணையத்தில் ஒரு தொடர் பஞ்சாயத்து இருக்கிறது. இப்போதைக்கு ஜிப்களை அசையும் படங்கள் என புரிந்து கொள்ளலாம்.
ஜிப்களை எண்ணற்ற விதங்களில் பயன்படுத்தலாம். அதற்கு ஜிப்களை தேடி எடுக்க வேண்டும். இந்த இடத்தில் தான், ஜிஃப்பி இணையதளம் வருகிறது. ஜிஃப்பி பற்றி தனியே எழுத வேண்டும். இந்த இடத்தில், ஜிப்களுக்கான தேடியந்திரம் என மட்டும் குறிப்பிடலாம்.
கூகுள் போன்றவை தகவல்களை தேடுவதற்கான பொது தேடியந்திரங்கள் என்றால், ஜிஃபி போன்றவை குறிப்பிட்ட நோக்கிலான சிறப்பு தேடியந்திரங்கள். அதாவது, ஜிப்களை மட்டுமே தேட வழி செய்யும் தேடியந்திரம்.
ஜிப் பிரியர்கள், ஜிஃபி தேடியந்திரத்தை ஒரு முறை பயன்படுத்திப்பார்த்தால் அசந்து விடுவார்கள். ஏற்கனவே பயன்படுத்தியுள்ளவர்கள் இந்த கருத்தை ஆதரிப்பார்கள்.
ஜிஃபி தேடியந்திரம் தான், மேலே விவரித்த ஜிப்-லெட்டர் இணையதளம் பின்னே இருக்கிறது. ஜிஃபியில் இருந்து பெறக்கூடிய ஜிப்களை தேர்வு செய்து நமக்கு இமெயிலில் அனுப்பி வைக்கிறது ஜி-லெட்டர். ஆக, நாம் ஜிஃபியில் தேட வேண்டாம். நாம் விரும்பும் வகைகளுக்கு ஏற்ப புதிய ஜிப்களை இந்த தளம் அனுப்பி வைக்கிறது. ஜிப்களை தினமும் பெற வேண்டுமா? அல்லது வாரம் ஒரு முறை பெற வேண்டுமா ? என நாமே தீர்மானித்துக்கொள்ளலாம்.
ஜிஃபி தேடியந்திரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம், பயனாளிகளுகு நேரடியாக இமெயில் தகவல்களை அவர்கள் விரும்பும் கால அடிப்படையில் வழங்கும் செய்தி மடல் கருத்தாக்க வழியில் செயல்படுகிறது. அந்த வகையில் இந்த சேவை விஷேசமானது.
இணையதளங்களை அறிமுகம் செய்யும் மின்மடல் என்ற முறையில், ஜிப்களுக்கான மின்மடலான இந்த தளத்தை கூடுதல் மகிழ்ச்சியுடன் அறிமுகம் செய்கிறேன்.