கொரோனா பயண விவரங்களை அளிக்கும் இணையதளம்!
எல்லோரையும் வீட்டிலேயே கொரோனா முடக்கி போட்டிருக்கும் நிலையில், அலுவல் நிமித்தமாகவும், தனிப்பட்ட தேவைக்காகவும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு, உலக நாடுகளில் பயணம் தொடர்பான தற்போதையை நிலை என்ன என்பதை எளிதாக அறிந்து கொள்ள உதவுகிறது ’டிர்ப்ஸ்கார்ட்’ (https://tripsguard.com/ ) இணையதளம்.
கொரோனாவை கட்டுப்படுத்த போராடிய படி ஒவ்வொரு நாடும் மிகுந்த கவனத்தோடு கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொண்டிருக்கிறது. இன்னும் முழுவீச்சில் விமான பயணங்கள் துவங்கிவிடவில்லை என்றாலும் ஒரு சில நாடுகள் பயணங்களை அனுமதிக்கத்துவங்கியுள்ளன.
சர்வதேச பயணங்கள் எதிர்பார்த்திருப்பவர்கள் அறிந்து கொள்ள துடிக்கும் இத்தகைய தகவல்களை ஒரு சேர திரட்டித்தருகிறது டிரிப்ஸ்கார்ட் இணையதளம்.
எங்கே பயணிக்கலாம் எனும் கேள்விக்கு பதிலாக அமைந்துள்ள இந்த தளம், முழுவதும் மூடப்பட்ட நாடுகள், ஓரளவு பயணங்களை அனுமதிக்கும் நாடுகள், முழுவதும் பயணங்களை அனுமதிக்கும் நாடுகள் என மூன்றுவிதமான தலைப்புகளின் கீழ் உலக நாடுகளின் தற்போதைய பயண நிலவரத்தை உணர்த்துகிறது.
இந்த மூன்றில் ஒரு வாய்ப்பை தேர்வு செய்து கிளிக் செய்தால் அருகே உலக வரைபடத்தில், அந்த தேர்வு தொடர்பான பயண நிலை கொண்ட நாடுகள் சுட்டிக்காட்டுப்படுகின்றன. இன்றைய தேதிக்கு பெலராஸ், எத்தியோப்பியா, தான்சானியா போன்ற நாடுகள் முழுவீச்சில் பயணத்தை அனுமதிக்கின்றன. பெரும்பாலான நாடுகளில் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
இதைத்தவிர, வலப்பக்கத்தில், வரிசையாக நாடுகள் பட்டியலிடப்பட்டு, அந்த நாடுகளில் தற்போதைய கொரோனா நிலை விவரம் இடம்பெறுகிறது. எல்லை நிலவரம், ரெஸ்டாரண்ட் நிலை, போக்குவரத்து உள்ளிட்ட தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அங்கு முகமுடி அணிய வேண்டுமா எனும் தகவலும், தனிமைபடுத்தல் அவசியமா எனும் விவரமும் அறியலாம்.
ஆக, ஒரு பறவை பார்வையாக உலக நாடுகளில் தற்போது என்ன நிலை, வரும் நாட்களில் எந்த அளவு சீராகும் என்பதை எல்லாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த தகவலில் கிளிக் செய்து உள்ளே சென்றால், குறிப்பிட்ட அந்த நாட்டில் கொரோனா தொற்றின் நிலை உள்ளிட்ட மேலதிக விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
வரைபடத்தில் சுட்டிக்காட்டப்படும் நாடுகள் மீது கிளிக் செய்தாலும், அங்குள்ள நிலவரத்தை அறியலாம்.
ஏவியான் எனும் பயண சேவை நிறுவனம் அமைத்துள்ள இந்த தளம், பல்வேறு இடங்களில் இருந்து கொரோனா நிலை தொடர்பான தகவல்களை தொகுத்தளிக்கிறது. இவற்றில் தவறுகளும் இருக்கலாம் எனும் எச்சரிக்கையுடன்!.
-
கொரோனா நிலவர வரைபடம்
கோவிட்கண்ட்ரோல்ஸ்.கோ (https://covidcontrols.co/ ) இணையதளம், உலகில் தற்போதைய கொரோனா நிலையை காட்சிரீதியாக உணர்த்துகிறது. முகப்பு பக்கத்தில் உலக வரைபடமும், வலப்பக்க பட்டியில் பல்வேறு நிலை அறிவதற்கான குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த குறிப்புகளில் இருந்து தேர்வு செய்தால்,எந்த எந்த நாடுகளில் தொடர்புடைய நிலை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
உதாரணமாக, லாக்டவுன் நிலைம் எனும் குறிப்பை தேர்வு செய்தால், வரைபடத்தில், லாக்டவுன் இல்லாத நாடுகள், பகுதியளவு லாக்வுடன் மற்றும் முழு லாக்டவுன் அமலில் உள்ள நாடுகள் எவை என்பது அதற்குறிய வண்ணத்தில் சுட்டிக்காட்டப்படுகின்றன.
இதே போல, பயணிகள் நிலையையும் அறிந்து கொள்ளலாம். முழுவதும் மூடப்பட்ட நாடுகள் ஒரு வண்ணத்திலும், பகுதியளவு அனுமதிக்கும் நாடுகள் வேறு வண்ணத்தில் சுட்டிக்காட்டப்படுகின்றன.
கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும் நிலை, மரணங்கள், பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களையும் இவ்வாறு அறியலாம்.
வரைபடத்தில் நாடுகள் மீது மவுஸ் கர்சரை கொண்டு சென்றால், அங்குள்ள நிலையை சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம். அதில் கிளிக் செய்தால், போக்குவரத்து வசதி, ரெஸ்டாரண்ட் நிலை, பயணங்கள் உள்ளிட்ட மேலதிக விவரங்களையும் காணலாம். இந்த தகவல்களின் மூலம் சுட்டிக்காட்டப்படுவதோடு, அண்மை செய்திகளும் பட்டியலிடப்படுகின்றன.
தனியே நாடுகளின் பெயரை குறிப்பிட்டும் தேடலாம். இந்தியா தொடர்பாக தேடினால், முகமூடி கீழ் இருக்கிறது எனும் தகவல் வருகிறது.
--
புள்ளிவிவரங்களின் சொர்கம்
கொரோனா தொடர்பாக இன்னும் விரிவான தகவல்கள் தேவை எனில், ஸ்டேடிஸ்டா தளத்திற்கு செல்லலாம். ஸ்டேஸ்டிடா தளத்தை புள்ளிவிவரங்களுக்கான இணையதளம் என்று சொல்லலாம். புள்ளிவிவரங்களுக்கான தேடியந்திரமாகவும் இந்த தளம் விளங்குகிறது. ஜெர்மனியை சேர்ந்த இந்த தளம், புள்ளி விவரங்கள் மற்றும் ஆய்வு முடிவுகள் தொடர்பான தகவல்களை ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறது.
அரசு அமைப்புகள், நிறுவனங்கள் என பலதரப்பினரும் புள்ளி விவரங்களை வெளியிடுகின்றன. இவைத்தவிர பல்வேறு அமைப்புகள் ஆய்வு முடிவுகள் மற்றும் கருத்துக்கணிப்பு சார்ந்த அறிக்கைகளை வெளியிடுகின்றன. இந்த தரவுகள், தற்போதைய போக்கை புரிந்து கொள்ள உதவுவதோடு, எதிர்கால போக்குகளையும் கோடிட்டு காட்ட வல்லவை. இத்தகைய தரவுகளை தான் ஸ்டேடிஸ்டா திரட்டித்தருகிறது.
புள்ளி விவரங்கள் சார்ந்த தகவல்களை வரைபடமாகவும், அறிக்கைகளாகவும் அணுக இந்த தளம் வழி செய்கிறது. புள்ளிவிரங்களை தேடவும் செய்யலாம். அடிப்படை தகவல்கள் இலவசம் என்றாலும், விரிவான மேலதிகார தகவல்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இணையத்தில் எப்போதாவது புள்ளிவிவரங்கள், ஆய்வு சார்ந்த தகவல்கள் தேவை எனில் ஸ்டேடிஸ்டாவை நாடலாம்.
ஸ்டேடிஸ்டா தளத்தின் முகப்பு பக்கத்தில், தற்போது பிரபலமாக இருக்கும் பல்வேறு குறிச்சொற்களும் அடையாளம் காட்டப்பட்டு அவற்றுக்கான விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவலும் இடம்பெறுகிறது.
கொரோனா வைரஸ் குறிச்சொல்லை கிளிக் செய்தால் இது தொடர்பான தனிப்பக்கம் தோன்றுகிறது. இந்த பக்கத்தில் கொரோனா தொடர்பான உலக அளவிலான பாதிப்பு தகவல்கள், கொரோனா பல்வேறு நாடுகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடர்பான புள்ளி விவரங்களை பார்க்கலாம். மேலும், லாக்டவுனுக்கு பிறகு கொரோனா ஏற்படுத்தக்கூடிய தாக்கம், மக்கள் எதை எல்லாம் தவிர்ப்பார்கள் போன்றவை தொடர்பான ஆய்வு முடிவுகளும் இடம்பெற்றுள்ளன.
இணைய முகவரி: https://www.statista.com/
-