வாழ்த்து அட்டை நம்மை இணைக்கட்டும்
வரலாறு முக்கியம் என்பது போல, இணையதளத்திற்கு பெயர் முக்கியம். இணையதளத்தின் பெயர், ஈர்ப்புடையதாக இருந்தால் மட்டும் போதாது, அதன் நோக்கம் மற்றும் செயல்பாடுகளை உணர்த்தும் வகையிலும் இருக்க வேண்டும். புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் ’செண்ட் ஏ ஸ்டிச்’ (https://sendastitch.com/ ) இணையதளம் இதற்கு அழகான உதாரணமாக அமைகிறது.
’செண்ட் ஏ ஸ்டிச்’ என்றால், ஒரு தையலை அனுப்புங்கள் என பொருள். தையல் என்பதைவிட பூவேலைப்பாடு என வைத்துக்கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். அதாவது, மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்ட பூவேலைப்பாடு கொண்ட வாழ்த்து அட்டையை உங்கள் சார்பில் அன்பானவர்களுக்கு அனுப்பி வைப்பதாக சொல்கிறது இந்த தளம்.
டிஜிட்டல் உலகில் வாழ்த்து அட்டைகளுக்கான மவுஸ் குறைந்து போய்விட்டாலும், டிஜிட்டல் உலகையும், வாழ்த்து அட்டைகளையும் இணைத்து வைக்கும் சேவைகளும் இல்லாமல் இல்லை. இந்த சேவைகள், டிஜிட்டல் வடிவில் வாழ்த்து செய்திகளை தேர்வு செய்ய வழி செய்து, அவற்றை தபால் வடிவில் அனுப்பி வைக்கின்றன.
இதே பாணியை தான் மேலே சொன்ன இணையதளமும் பின்பற்றுகிறது. ஆனால், கொரோனா பின்புலத்தில், வாழ்த்து அட்டை மூலம் இணைந்திருப்போம் எனும் செய்தியுடன் இந்த சேவையை வழங்குகிறது. நோய்த்தொற்றை தடுக்க சமூக விலகலை பின்பற்றும் சூழலில், பெரும்பாலானோர், அன்பானவர்களுடன் இணைந்திருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்துள்ளனர். என்ன தான் ’ஜூம்’ சந்திப்புகள், பேஸ்புக் அரட்டை போன்றவை இருந்தாலும் நேரில் பார்த்து பேசுவது போல வருமா என்னா?
இந்த ஆதங்கத்தை போக்கும் வகையில், அந்த கால பாணியில் அன்பானவர்களுக்கு வாழ்த்து அட்டையை அனுப்பி வைக்க இந்த தளம் உதவுகிறது. அன்பின் வெளிப்பாடாக அமையும் வகையில், கைகளால் உருவாக்கப்பட்ட பூவேலைப்பாடு கொண்ட வாழ்த்து அட்டைகளை அனுப்பி வைக்கிறது இந்த தளம்.
சோதனையான காலத்தில் சின்ன சின்ன அற்புதங்கள் நமக்கு தேவைப்படுகிறது. அதில் ஒன்றாக இந்த சேவை இருக்கலாம்.
-