உலகிற்கே பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் நபர்
இன்று நாம் பார்க்க இருக்கும் இணையதளம் உங்களை கவராமலே போகலாம். ஆனால், இந்த தளத்தின் பின்னே உள்ள கதையை தெரிந்து கொண்டால் நிச்சயம் வியப்படைவீர்கள் என்பது மட்டும் அல்ல, சாதாரணமாக தோன்றும் இந்த தளத்தை மதிப்புடன் பார்க்கத்துவங்குவீர்கள்.
’1ஹேப்பிபர்த்டே.காம்’ (https://www.1happybirthday.com/) எனும் இந்த தளம் பிறந்த நாள் வாழ்த்து பாடலை அளிக்கும் இணையதளம். வாழ்த்து பாடல் தவிர, பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பான இன்னும் பல அம்சங்களை கொண்டிருக்கிறது.
90 களின் சாயலோடு இருக்கும் இந்த தளத்தின் வடிவமைப்பும் எந்த விதத்திலும் ஈர்க்கவில்லை. இடப்பக்க பட்டியில், பிறந்த நாள் வாழ்த்து அம்சங்களும், அதன் அருகே பிறந்த நாள் வாழ்த்து பாடலுக்கான விளக்க குறிப்பும் இடம்பெற்றுள்ளது.
இந்த தளம் வழங்கும் பிறந்த நாள் வாழ்த்து பாடலில் என்ன சிறப்பு என்றால், உங்கள் பெயரில் அந்த வாழ்த்து பாடல் பாடப்படுவதை கேட்டு ரசிக்கலாம் என்பது தான்.
ஆக, இந்த தளத்தில் உங்கள் பெயரை டைப் செய்து பார்த்து, உங்கள் பெயருக்கான பாடலை தரவிறக்கம் செய்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடலாம். இந்த பிரத்யேக வாழ்த்து பாடலை பேஸ்புக் அல்லது இமெயிலில் பகிர்ந்து கொள்ளலாம்.
பிறந்த நாள் பரிசு பொருட்கள் பொதுவானதாக இல்லாமல், நமக்கான தனிப்பட்ட தன்மையுடன் இருப்பது விஷேசமானது தானே. இந்த பிரத்யேக தன்மையை பிறந்த நாள் பாடலுக்கும் கொண்டு வருகிறது இந்த தளம்.
பிறந்த நாள் பாடலில் நம் பெயர் இடம்பெறுகிறது, அவ்வளவு தானே என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், இந்த தளத்தின் நிறுவனரான கிரேக் மே (Greg May ) இதை சாத்தியமாக்கி வரும் விதம் தான் உண்மையிலேயே அற்புதமானது.
முதல் விஷயம் மே, பிறந்த நாள் பாடலை சொந்தமாக எழுதியிருக்கிறார். கவித்துவ நோக்கில் பார்த்தால், வெகு சாதாரணமான பாடல் தான். ஆனால், கிரேக் மே இந்த பாடலை, உலகில் உள்ளவர்களுக்கு எல்லாம் எழுதியிருக்கிறார். ஆம், பிறந்த நாள் கொண்ட்டாட்டத்துடன் அறியப்படும் ஹாப்பி பர்த்டே பாடல், காப்புரிமை பெறப்பட்டதாக இருப்பதால், பொதுவெளியில் எடுத்து பயன்படுத்த முடியாது.
எனவே தான், கிரேக் மே, பிறந்த நாள் பாடலை தானே எழுதினார். அத்துடன் நிற்கவில்லை, மற்றவர்கள் பிறந்த நாள் கொண்டாடுவதற்காக இந்த பாடலை தானே ஒலிப்பதிவு செய்தார். தனது குரல் மோசம் என்பதால், தொழில்முறை பாடகி ஒருவரை வைத்து பாடலை பதிவு செய்து தளத்தில் பதிவேற்றினார்.
இத்துடன் நிறுத்தியிருந்தால், கிரேக் மே பற்றியோ, இந்த தளம் பற்றியோ நாம் பொருட்படுத்தியிருக்க வேண்டாம். ஆனால், அவரோ இந்த பாடல் ஒவ்வொருக்கும் பிரத்யேகமானதாக இருக்க வேண்டும் என்று விரும்பி, ஒவ்வொருவரது பெயரிலும் இந்த பாடலை பாடி பதிவேற்றத்துவங்கினார்.
2006 ம் ஆண்டு துவங்கி, இப்படி பலரது பெயர்களில் பிறந்த நாள் பாடலை பதிவு செய்து வருகிறார். முதலில் பரவலாக அறியப்படும் பெயர்களை எல்லாம் கொண்டு பாடலை பதிவு செய்தவர், அதன் பிறகு, மற்ற பெயர்களுக்கும் இதை விரிவுபடுத்தினார். வெறும் மேற்கத்திய பெயர்களுடன் நின்றுவிடவில்லை. இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளை சேர்ந்தவர்களின் பெயர்களிலும் வாழ்த்து பாடலை பதிவு செய்து வருகிறார்.
இப்படி, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெயர்களில் வாழ்த்து பாடலை பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் தனியே பாட வைத்து பதிவு செய்து வருகிறார். இந்த பாடல்களை எல்லாம் யூடியூப்பில் வீடியோவாக பதிவேற்றியிருக்கிறார். ஒவ்வொரு பெயரின் வெவ்வேறு உச்சரிப்புக்கான பாடல் என, மொத்தம் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பாடல் வீடியோக்கள் உள்ளன.
புதுமையாக பிறந்த நாள் கொண்டாடுபவர்கள், இந்த தளத்தில் தங்கள் பெயரை தேடிப்பார்த்து, தங்களுக்கான வாழ்த்து பாடலை தரவிறக்கம் செய்யலாம். அப்படி பெயர் இல்லை என்றாலும் கவலை வேண்டாம், பெயரை குறிப்பிட்டு பாடல் தேவை என கோரிக்கை சமர்பித்தால், கிரேக் மே, அந்த பெயரில் பாடலை பதிவு செய்து பதிவேற்றுகிறார்.
பாடலை பதிவேற்றுவதற்கு முன்பாக, கோரிக்கை சமர்பித்தவரை ஸ்கைப்பில் தொடர்பு கொண்டு, பெயரின் சரியான உச்சரிப்பை கேட்டு உறுதி செய்து கொள்கிறார். இப்படி தினமும் மூன்று பேருடனாவது பேசிக்கொண்டிருக்கிறார்.
ஒவ்வொரு பெயருக்கான பாடலையும், ஒவ்வொரு முறை தனியே பதிவு செய்கிறார். இதற்கு பாடகிக்கு ஊதியம் கொடுக்கிறார். தளத்தில் விளம்பரம் மூலம் வருமானம் வந்தாலும், அதைவிட பாடல் பதிவுக்கு அதிகமாக செலவு செய்து கொண்டிருக்கிறார். தன்னால் முடிந்தவரை, உலகில் உள்ள ஒவ்வொருவரின் பெயரிலும் பிறந்த நாள் வாழ்த்து பாடலை பதிவு செய்து விட வேண்டும் என்ற விருப்பம் தான் இதற்கு காரணம்.
பத்தாண்டுகளுக்கும் மேலாக மே, இதை விடாமல் செய்து வருகிறார். பாடல் பதிவில் பெயரை தானியங்கிமயமாக்கி இருக்கலாம் தான். ஆனால் பிரத்யேக தன்மை அளிப்பதற்காக ஒவ்வொரு பெயருக்கும் என தனியே பதிவு செய்து வருகிறார்.
இதனால் அவருக்கு பெரிய அளவில், புகழோ பணமோ கிடைத்துவிடவில்லை. ஆனாலும், இதை விடாமல் செய்து வருகிறார். சில நேரங்களில் சில மனிதர்கள்.
நீங்களும் கூட, உங்கள் பெயரை தேடிப்பாருங்கள். அநேகமால உங்கள் பெயரில் பாடல் பதிவாகி இருக்கும். இல்லை என்றால் ஒரு கோரிக்கை அனுப்புங்கள்!
-
இணையதள முகவரி: https://www.1happybirthday.com/index.php
கிரேக் மே பற்றி அறிய: https://www.theverge.com/tldr/2016/8/23/12583510/happy-birthday-song-1happybirthday-greg-may#comments%2522