ஓவிய பயிற்சிக்கான இணையதளம்
இப்போது நாம் பார்க்க இருக்கும் இணையதளம் வரைவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கானது. அந்த வகையில், ஓவியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் கற்றுக்கொள்வதற்கான விஷயங்களை கொண்டிருக்கிறது என்றாலும், இதை அழகாக செயல்படுத்தியிருக்கும் விதத்தில், இணையம் தொடர்பாக பலருக்கு இருக்கும் ஆதார கேள்விக்கான பதிலையும் கொண்டிருக்கிறது.
இணையம் மூலம் எப்படி சம்பாதிப்பது என்பது தான் அந்த கேள்வி.
இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதவிதமான வழிகாட்டி கட்டுரைகளும், வீடியோக்களும் இணையத்தில் அளவில்லாமல் இருக்கின்றன என்றாலும், இவற்றை எல்லாம் படித்து அல்லது பார்த்து இணையம் மூலம் சம்பாதிக்க முடியுமா என்று தெரிவில்லை. ஆனால் ஒன்று, இணையம் மூலம் சம்பாதிப்பது எப்படி என எழுதி சம்பாதிக்கலாம்.
மற்றபடி, வழிகாட்டி கட்டுரைகளை மட்டும் படித்து இணையத்தில் சம்பாதிப்பது கஷ்டம் தான். அதற்காக மனம் தளர வேண்டியதில்லை. இணையத்தில் சம்பாதிப்பது சாத்தியமே. அதற்கு அடிப்படை தேவை என்னவென்றால், பளிச் என உங்கள் மனதில் ஒரு எண்ணம் தோன்ற வேண்டும். அந்த இணையத்தை செயல்படுத்தினால் பரவலாக கவனத்தை ஈர்த்து வருவாயும் ஈட்டலாம்.
இதற்கு உதாரணமாக அமையக்கூடிய தளங்களில் ஒன்றாக தான், மேலே குறிப்பிட்டப்பட்ட ஓவிய பயிற்சி இணையதளம் அமைகிறது. டிரா திஸ் புக் (https://www.drawthisbook.com/) எனும் இந்த தளம், ஓவிய பயிற்சியை எளிமையாகவும், ஈர்ப்புடையதாகவும் மாற்றி வியக்க வைக்கிறது.
ஓவிய பயிற்சிக்கு என வகுப்புகளும், வழிகாட்டுதல்களும் இருக்கின்றன. இதற்கான இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன. எனவே, ஓவிய பயிற்சிக்கான இன்னொரு இணையதளம் எனும் போது அதில் ஈர்ப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு தான்.
இந்த பிரச்சனையை ’டிரா திஸ் புக்’ தளம் அழகாக எதிர்கொள்கிறது. முதல் விஷயம் இந்த இணைய முகவரியே வித்தியாசமாக அமைந்துள்ளது. இந்த புத்தகத்தை வரையுங்கள் எனும் பொருளில் டிரா திஸ் புக் எனும் விதமாக இணையதள முகவரியை பார்க்கும் போதே, இணைய மொழியில் கால் டூ ஆக்ஷன் எனப்படும் செயலுக்கான அழைப்பு அடங்கியிருக்கிறது.
இதன் காரணமாக, இந்த தளத்தின் முகவரி நன்றாக இருக்கிறதே என அதனுள் நுழைந்தால், எழுத கற்றுக்கொள்வது போலவே, வரைய கற்றுக்கொள்ளுங்கள் என ஊக்கம் அளிக்கிறது. அதாவது, எப்படி அகர வரிசை எழுத்துக்களில் துவங்கி எழுத படிக்க கற்றுக்கொள்வோமோ, அதே போல, ஓவியத்தையும் அரிச்சுவடியில் இருந்து துவங்கி கற்றுக்கொள்ளலாம் என்கிறது இந்த தளம்.
இதற்கேற்ப, ஓவியங்களை வரைய கற்றுக்கொள்வதற்கான எளிமையான அரிச்சுவடி பயிற்சிகளை அளிக்கிறது. இந்த ஓவிய அரிச்சுவடி அடங்கிய புத்தகத்தை காசு கொடுத்து வாங்கி பயிற்சி செய்யலாம். கை, கால், முகம் உள்ளிட்ட பாகங்களை எப்படி வரைந்து பழகுவது என எளிய செயல்முறை விளக்கங்களாக இந்த புத்தகம் அமைந்துள்ளது. பயிற்சி புத்தகத்தை பிடிஎப் வடிவிலும் வாங்கி கொள்ளலாம்.
ஓவியத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும். வரைய கற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் இந்த தளத்தில் உள்ள புத்தகத்தை காசு கொடுத்து வாங்க முன்வரலாம். அவ்வளவு தான், இந்த தளம். எத்தனை எளிமையாக, ஆனால் எத்தனை அற்புதமாக இருக்கிறது.
ஓவியம் வரைய கற்றுத்தரும் பயிற்சி புத்தகத்தை, விளம்பர நெடியே இல்லாமல் அழகாக விற்பனை செய்யும் வகையில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு தான் விஷயம். உங்களிடம் உள்ள விஷயத்தை புதுமையான முறையில் இணையம் மூலம் அளித்தால் பயனர்களை கவரலாம். அதோடு முக்கியமான விஷயம் மற்றவர்கள் பயனுள்ளது என கருதும் விஷயம் நம்மிடம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் இணையத்தில் சம்பாதிப்பது எளிது.