எழுத்தாளர்களுக்கான வேலைவாய்ப்பு இணையதளம்!
இணையம் மூலம் வேலைவாய்ப்பை தேடும் போது, வேலைக்கான வலையை பரவலாக விரிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அதே நேரத்தில், தேடலை குறுக்கி கொண்டு வலைவீசவும் தெரிந்திருக்க வேண்டும்.
மான்ஸ்டர்.காம், இண்டீட்.காம் மற்றும் நம்மூரின் நவ்கரி.காம் போன்ற பொதுவான வேலைவாய்ப்பு தளங்களில் தேடுவது முதல் வகை என்றால், குறிப்பிட்ட துறை அல்லது வகை சார்ந்த வேலை வாய்ப்பு தளங்களில் தேடுவது இரண்டாவது வகை. இந்த பிரிவில் தான் இப்போது கண்டெண்ட்ரைட்டிங்ஜாப்ஸ்.காம் (https://contentwritingjobs.com/ ) தளம் அறிமுகமாகியிருக்கிகிறது.
உள்ளடக்க எழுத்தாளர்களுக்கான வேலைவாய்ப்பை அடையாளம் காட்டுகிறது இந்த தளம்.
டிஜிட்டல் யுகத்தில் கண்டெண்ட் ரைட்டிங் எனப்படும் உள்ளடக்க உருவாக்கம் முக்கிய பங்கு வகிப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அதாவது பல்வேறு வகையான இணையதளங்களுக்கு தேவையான உள்ளடக்கத்தை உருவாக்குவது. வலைப்பதிவு எழுதுவதில் துவங்கி, செய்திகளை எழுதித்தருவது வரை பலவகை எழுத்துகள் இந்த பிரிவின் கீழ் வருகின்றன.
எழுத்து ஆர்வத்துடன், இணையத்திற்கு ஏற்ப எழுதும் திறனும் இருந்தால் இந்த துறையில் ஜொலிக்கலாம்.
இந்த வகையான வேலைவாய்ப்புகளை தேடுபவர்கள் அவற்றை ஒரே இடத்தில் அணுகும் வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் உலகம் முழுவதுமான உள்ளடக்க உருவாக்க வேலைவாய்ப்புகளை கண்டறியலாம்.
உள்ளடக்க எழுத்தாளர் என்று பொதுவாக குறிப்பிட்டாலும், இந்த பிரிவின் கீழ், தொழில்நுட்ப எழுத்தாளர், மருத்துவ எழுத்தாளர், உள்ளடக்க ஸ்பெஷலிஸ்ட், பயண எழுத்தாளர், மார்க்கெட்டிங் எழுத்தாளர் என பல்வேறு பிரிவுகள் இருப்பதை உணரலாம்.
பிரிலான்ஸர் வாய்ப்பு, முழு நேர பணி, பயிற்சியாளர் பணி என பல பிரிவுகளின் கீழ், இந்த வாய்ப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
உள்ளடக்க எழுத்தாளர் பணிகளை, அவற்றின் வகைக்கு ஏற்பவும் தேடிப்பார்க்கும் வாய்ப்பை இந்த தளம் அளிக்கிறது. மேலும் இதில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டால், வேலைவாய்ப்பு தகவல்களை இமெயில் மூலம் பெறலாம்.
மென்பொருள் நிறுவனங்களில் துவங்கி, இணைய நிறுவனங்கள் வரை பலவிதமான நிறுவனங்களில் வேலைவாய்ப்பை இந்த தளம் அணுகலாம். ஒரே சங்கடம் என்னவெனில், பெரும்பாலான வாய்ப்புகள் ஆங்கிலம் சார்ந்தவை. இதே போல, இந்திய மொழிகளுக்கான வேலைவாய்ப்பு தளம் அமைக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.
இணைய தள முகவரி: https://contentwritingjobs.com/
-
வேலைவாய்ப்பு தொடர்பான முந்தைய பதிவு:https://cybersimman.substack.com/p/--17e
—
கொரோனா பயண விவரங்கள்
கொரோனா பாதிப்பு சூழலில், பயணங்கள் தொடர்பான தகவல்களை அளிக்கும் மற்றொரு இணையதளம் டிராவல்பேன்ஸ்.ஆர்க் (https://travelbans.org/) .
இந்த தளம், உலக நாடுகளில் தற்போதுள்ள பயண கட்டுப்பாடுகள் தொடர்பான விவரங்களை தெரிவிக்கிறது. முகப்பு பக்கத்தில், வரிசையாக ஒவ்வொரு நாட்டிலும் என்ன நிலவரம் எனும் தகவல் பட்டியலிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாட்டில் கிளிக் செய்தால், அந்நாட்டு பயண நிலவரத்தை, அங்கு சென்றால் தனிமை படுத்த அவசியமா? போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
நாடுகளில் உள்ள கொரோனா பாதிப்புக்கு ஏற்ப தகவல்கள் அமைந்துள்ளன. இடப்பக்க பட்டியில், கண்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் கிளிக் செய்தும் நாடுகளை தேர்வு செய்து பார்க்காலம்.
குறிப்பிட்ட நாட்டிற்கு செல்ல விரும்புகிறவர்கள், தேடல் கட்டத்தில் அந்த நாட்டின் பெயரை டைப் செய்து தேடிப்பார்க்கலாம்.- https://cybersimman.substack.com/p/--a18
-