இணையதளங்களுடன் உரையாடும் வழி
இணையதளங்களுக்கு கண்ணும் இருக்க வேண்டும், காதும் இருக்க வேண்டும். ஆனால் நவீன இணையதளங்களில் பல வெறும் கண்களை மட்டுமே கொண்டிருக்கின்றன. ஆனால், காதுகள் கொண்டிருக்கவில்லை. அதாவது அவை இணையவாசிகள் என்ன செய்கின்றனர் என்பதை கண்காணித்துக்கொண்டே இருக்கின்றனவேத்தவிர, அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை அறிய முற்படுவதில்லை. அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும் என நினைப்பதும் இல்லை.
இதற்கு விதிவிலக்கு இல்லாமல் இல்லை. ஒரு சில இணையதளங்களில், வலைப்பக்கத்தில் சின்னதாக உரையாடல் பெட்டி இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இணையதளங்களுடன் உரையாட அல்லது கருத்து தெரிவிப்பதற்கான வசதி இது. ஆனால், இந்த வசதி கூட பெரும்பாலும், மார்க்கெட்டிங் நோக்கில் அமைந்துவிடுவது உண்டு.
மற்றபடி, இணையதளங்களை தொடர்பு கொள்ள விரும்பினால் அல்லது அதன் சேவை குறித்து கருத்து தெரிவிக்க விரும்பினால், அதற்கு எளிய வழி இல்லை. வேண்டுமானால் டிவிட்டரில் இணையதளத்தை டேக் செய்து கருத்து தெரிவிக்கலாம். நேரடியாக பேசுவதற்கான வாய்ப்பை பெரும்பாலான தளங்கள் அளிப்பதில்லை.
இந்த குறையை போக்கும் வகையில், சோஷியலிபிரவுஸ் ( https://sociallybrowse.com/) எனும் இணைய சேவை அறிமுகம் ஆகியிருக்கிறது. குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பு சேவையாக செயல்படும் இந்த சேவை மூலம், நீங்கள் பயன்படுத்தும் எந்த ஒரு இணையதளம் தொடர்பான கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
உங்கள் கருத்து பாராட்டாக இருக்கலாம், விமர்சனமாக இருக்கலாம் அல்லது கேள்வியாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், இந்த நீட்டிப்பு சேவை மூலம், அந்த இணையதளத்திலேயே நீங்கள் பதிவு செய்யலாம்.
இந்த கருத்துகளை சோஷியல்பிரவுஸ் தளத்தில் பார்க்கலாம் என்பதோடு, சம்பந்தப்பட்ட இணையதளங்களில் தோன்றும் சிறு பெட்டி மூலமும் பார்க்கலாம். சக இணையவாசிகள் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கலாம். ஆக, இணையத்தில் உலாவுதலை சமூக அனுபவமாக மாற்றக்கூடியதாக இந்த சேவை அமைகிறது.
சமூக ஊடகங்களில் பலவற்றை விவாதிப்பது போலவே, இணையதளங்களை பார்வையிடும் போது தோன்றும் எண்ணங்களை பதிவு செய்து மற்றவர்களுடன் உரையாடலாம்.
இணையதளங்களும், இந்த கருத்துகளை பார்த்து பதில் அளிப்பதற்கான சாத்தியம் இருக்கிறது. ஆனால், அதற்கு இந்த சேவை பரவலாக பயன்படுத்தப்பட வேண்டும். பார்க்கலாம் இந்த சேவை எத்தகைய வரவேற்பு பெறுகிறது என்று.
ஆனால், என்னளவில் இந்த சேவை ஈர்ப்புடையதாக இருக்கிறது. இதை பயன்படுத்திப்பார்த்து கருத்துகளை பகிர்கிறேன். நீங்களும் உங்கள் அனுபவத்தை தெரிவிக்கலாம்.
-
பி.கு: நேற்றைய பதிவில், ஷூலேஸ் இணையதளம் பற்றி எழுதுவதாக தெரிவித்திருந்தேன். ஆனால், இந்த தளம் பின்னே இருக்கும் இயான், மிகப்பெரிய ஆளாக இருக்கிறார். அவரது தளம் பற்றி எழுது கொஞ்சம் அவகாசம் தேவை. இயானிடம் அப்படி என்ன சிறப்பு என்ன என்பதை நீங்களும் கூட கண்டறியலாம். ஷுலேசிங் என தேடிப்பாருங்கள்….