மரங்கள் பேசும் இணைய வானொலி
பரவலாக பயன்படுத்தப்படும் டாட்.காம் முகவரி போல, டாட்.எப்.எம் என முடியும் முகவரியை கொண்டுள்ள தளங்களை இசை சார்ந்த தளங்களாக எளிதில் அடையாளம் காணலாம். ஒலி சார்ந்த தளங்களும் இந்த பிரிவின் கீழ் தான் வருகின்றன. உதாரணம் தேவை எனில், பிரைன்.எப்.எம், ஆங்கர்.எப்.எம்.
இந்த பட்டியலில் டிரி.எப்.எம் (https://www.tree.fm/ ) தளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த தளம் மிகவும் விஷேசமானது. நாமிருக்கும் இடத்திலிருந்தே உலகில் உள்ள வனங்களை எல்லாம் வலம் வர வழி செய்கிறது இந்த தளம். அந்த வகையில் இந்த தளத்தை இயற்கைக்கான இணைய வானொலியாக கருதலாம்.
பசுமையான முகப்பு பக்கத்தை கொண்டுள்ள இந்த தளத்தில் நுழைந்தால், மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில் நுழைந்தது போல இருக்கும். ஆம், இதன் முகப்பு பக்கத்தில் தோன்றும் வனக்காட்சியை கிளிக் செய்தால், குறிப்பிட்ட அந்த வனத்தின் ஒலியை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
பொதுவாக காடுகளில் கேட்க கூடிய ஒலிகளை கேட்கலாம். அந்த ஒலி, பறவையின் கீதமாக இருக்கலாம், விலங்குகல்ளின் குரலாக இருக்கலாம், அருவியின் சளசளப்பாக இருக்கலாம். திரையில் தோன்றும் வனப்பகுதிக்கு ஏற்ப அந்த வனத்தின் ஒலியை இணைய வானொலி போல கேட்கலாம்.
இப்படி எங்கோ உள்ள வனப்பகுதியை நம் டெஸ்க்டாப்பில் கொண்டு வரலாம் என்பதோடு, ஒவ்வொரு கிளிக்கிலும் வனத்தை மாற்றிக்கொண்டே இருக்கலாம். இவ்விதமாக உலகில் உள்ள பல்வேறு காடுகளை வரிசையாக நம் இணைய திரையில் வர வைக்கலாம்.
இயற்கை பிரியர்களுக்கும், மரங்கள் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கும் இந்த தளம் உற்சாகமாக இருக்கும். பின்னணியில் பாடல் ஒலிக்க பணி செய்வது போல, இந்த இணைய வானொலியை இயக்கி விட்டு இயற்கை ஒலிகள் பின்னணியில் கேட்டுக்கொண்டிருக்க பணியை கவனிக்கலாம்.
அட, இப்படி ஒரு இணையதளமா என வியக்க வைக்கும் இந்த இணைய வானொலி பின்னே உள்ள இன்னொரு முக்கிய தளத்தையும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். தவிர, இந்த தளத்துடன் தொடர்புடைய வனக்குளியல் எனும் புதுமையான கருத்தாக்கம் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். இவற்றை வரும் நாட்களில் பார்க்கலாம்.