சின்ன சின்ன ஊக்கங்களுக்கான இணையதளம்

நம்மில் பலருக்கு தினந்தோறும் ஏதேனும் ஒரு வகையில் ஊக்கம் அளித்தல் தேவைப்படவே செய்கிறது. அதிலும் தற்போது கொரோனா கால பாதிப்புக்கு நடுவே வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழலில், சோர்வும், நிச்சயமின்மையும் வாட்டிக்கொண்டிருக்கும் நிலையில் எல்லோருக்குமே ஊக்கம் அளித்தல் தேவைப்படுகிறது.

நாம் வேண்டும் ஊக்கம், நண்பர்களின் சிறு புன்னகையாக இருக்கலாம் அல்லது நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளாக இருக்கலாம் அல்லது, ஒரு செயலுக்கான பரிந்துரையாக இருக்கலாம்.

இதை தான் செய்கிறது ’ஒன் குட் திங்’ ( https://onegoodthing.glideapp.io/) செயலி. இன்று ஒரு தகவல் பாணியில், தினம் ஒரு நல்ல செயலை இந்த செயலி பரிந்துரைக்கிறது.

கடினமான காலத்தில் ஊக்கம் அளிப்பதற்கான எண்ணங்களின் களஞ்சியமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில் பதிவு செய்து கொண்டால், இன்று உங்களை உற்சாகம் கொள்ள வைக்க கூடிய செயலை பரிந்துரைக்கிறது.

நண்பர்கள் அல்லது சகாக்களுக்கு போன் செய்து நன்றி தெரிவியுங்கள், நீண்ட நாட்களாக பேசாமல் இருப்பவர்களை அழைத்து பேசுங்கள், அன்பை தெரிவியுங்கள் என்பது போல எல்லாமே எளிமையான நல்ல யோசனையாக அமைகின்றன.

மேல் மாடியில் நடந்து காற்று வாங்குங்கள், கம்ப்யூட்டரில் திறந்து வைத்துள்ள பிரவுசர் டேப்களில் தேவையில்லாத சிலவற்றை மூடுங்கள் என்பது போல நடைமுறை சார்ந்ததாகவும் யோசனைகள் அமைகின்றன.

பெருந்தொற்று கால பாதிப்பினால் பலரும் தங்கள் தினத்தை திட்டமிட முடியாமல் என்ன செய்வது எனத்தெரியாமல் சோர்வுற்று இருக்கும் நிலையை மாற்றும் வகையில் இந்த பரிந்துரைகள் அமைகின்றன. இவற்றை செய்து முடித்தால் மனதில் சின்னதாக ஊக்கம் பிறக்கும்.

இவற்றை எல்லாம் நாமே யோசித்து செய்யலாம் தான். ஆனால், கொரோனா சூழலில் சிந்தனையும், செயலும் முடங்கி கிடப்பதால், தினம் ஒரு நல்ல விஷயத்தை பரிந்துரைத்து ஊக்கம் அளிப்பதற்காக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

பயனாளிகளும் தங்கள் பங்கிற்கு, ஒரு நல்ல விஷயத்தை இந்த செயலியில் சமர்பிக்கலாம். இப்படி சமர்பிக்கப்படும் விஷயங்களில் இருந்து தேர்வு செய்யப்படுபவை தினமும் பகிரப்படும்.

இன்று செய்து முடித்த செயலை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டு உங்கள் நட்பு வட்டாரத்தையும் ஊக்கம் பெற வைக்கலாம்.