பணக்காரராகலாம் வாங்க என அழைக்கும் இணையதளம்!
தலைப்பை பார்த்ததும், டிவி விளம்பரத்தில் வருவது போன்ற இணையத்தில் எளிதாக பணம் சம்பாதிக்க ஆசை காட்டும் இணையதளம் என தவறாக நினைத்து விட வேண்டும். இப்போது நாம் பார்க்கப்போகும் இணையதளம், பயனாளிகளை பணக்காரராக்குவதாக சொல்லும் இணையதளம் அல்ல. மாறாக பயனாளிகளிடம் இருந்து பணம் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இணையதளம்.
ஆனால், ஏமாற்று நோக்கமோ, வலை விரிக்கும் உத்தியோ இல்லாமல் பயனாளிகள் தாங்களாகவே விரும்பி பணத்தை செலுத்த தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புத்திசாலி இணையதளம்.
அவர் உங்களை விட பணக்காரர் என பொருள் வரும் வகையில் ’ஈஸ் ரிச்சர் தென் யூ’ (https://www.isricherthanyou.com/ ) எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளம், இதன் முகப்பு பக்கத்தில் இடம்பெற வேண்டும் என்றால் பணம் செலுத்த வேண்டும் என்கிறது. உண்மையில் இதற்காக, கொக்கி போட்டு இழுக்கிறது என்று கூட சொல்லலாம்.
ஏனெனில், இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் இடம்பெறுவர், இன்னொருவர் அதை விட அதிக தொகை தர முன்வரும் வரை தான், அந்த இடத்தில் இருக்க முடியும். அவர் செலுத்தியதை விட வேறு ஒருவர் அதிக தொகை செலுத்தினால், அவர் பணக்காரராகி தளத்தின் முகப்பு பக்கத்தில் இடம்பெறுவார்.
இதை குறிக்கும் வகையில் தான், ’ உங்களை விட பணக்காரர் எனும் பொருளில் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இது ஒருவகை ஏலம் போன்றது அல்லது விளையாட்டு போன்றது.
ஏற்கனவே உள்ளவரை விட அதிகமாக பணம் செலுத்த தயாராக இருப்பவர்கள் முகப்பு பக்கத்தில் வீற்றிருக்கலாம். ஆனால், இன்னொருவர் அதிக பணம் தரும் வரை தான் இந்த இடம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதுவரை தளத்தின் முகப்பு பக்கத்தை தக்க வைத்துக்கொள்வதோடு விரும்பினால் விளம்பர நோக்கிலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பணம் செலுத்தியவர், தனது இணையதள முகவரியை முகப்பு பக்கத்தில் இடம்பெற வைத்து, இங்கிருந்து கொஞ்சம் இணைய போக்குவரத்தை பெற்றுக்கொள்ளலாம்.
இப்போதைக்கு 23 டாலர் செலுத்திய ஒருவர் முகப்பு பக்கத்தில் இருக்கிறார். 24 டாலர் செலுத்த முன்வரும் ஒருவர் அந்த இடத்தை பிடிக்கலாம். இப்படியே இது சில நூறு டாலராக அல்லது சில ஆயிரம் டாலராக வளரலாம்.
அவரைவிட நீங்கள் பணக்காரராக தோன்ற வேண்டுமா? என கேள்வி கேட்கும் வகையில் ஒரு இணையதளத்தை அமைத்து அதற்கு விளையாட்டாக பணம் செலுத்தவும் முன்வர வைக்கும் வகையில் தளத்தை அமைத்துள்ள மார்கோ எடிமண்டி ( https://www.indiehackers.com/MarcoEde/history) எனும் மென்பொருளாளரை பாராட்டியாக வேண்டும்.
தளத்திற்கு வருகை தருபவர்களுக்கு சுவாரஸ்யம் அளிக்கும் வகையில், தொழிலதிபர்கள் மற்றும் பாடர்களில் பணக்காரர்களின் ஒப்பீடு பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை தான் இந்த தளத்திற்காக பணம் பெறப்படும் என்றும், அப்போது கடைசியாக பணம் செலுத்தும் நபர் நிரந்தரமாக தளத்தை சொந்தமாக்கி கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் என வியப்பாக இருக்கிறதா! நிற்க, புத்தாயிரமாண்டு வாக்கில், அலெக்ஸ் டியூ என்பவர் இதே போல ’மில்லியன் டால்ர் ஹோம்பேஜ்’ (http://www.milliondollarhomepage.com/ ) எனும் இணையதளத்தை அமைத்து லட்சாதிபதியாகி அசத்தினார்.
நிலத்தை மனையாக்கி விற்பது போல, அலெக்ஸ், இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிக்சல்களை விற்பதாக அறிவித்தார். பிக்சல்களை வாங்குபவர்கள், அதற்கேற்ப தங்கள் விளம்பர லோகோவை தளத்தில் இடம்பெறச்செய்யலாம்.
இப்படி பிக்சல்களை விற்பதன் மூலம் மில்லியன் டாலர் திரட்டும் நோக்கத்துடன் அலெக்ஸ் இந்த தளத்தை அமைத்து, அதில் வெற்றி பெற்றும் அசத்தினார்.
அந்த காலத்தில் இணையம் முழுவதும் இந்த புதுமையான இணையதளம் பற்றி தான் பேச்சாக இருந்தது.
பணக்கராராக தோன்றச் செய்யும் இப்போதைய இணையதளமும் மில்லியன் டாலர் ஹோம்பேஜின் இன்னொரு வடிவம் தான்.
மீண்டும் நிற்க, மில்லியன் டாலர் ஹோம் பேஜை உருவாக்கிய அலெக்ஸ் அதன் பிறகு இணையத்தின் மிகப்பெரிய தொழிலதிபராக உருவாகி இருக்கிறார். அவரைப்பற்றி விரிவாக இன்னொரு பதிவில்!
-
யூடியூப்பில் வெப்தமிழ் எனும் சேனல் துவங்கியிருக்கிறேன் . பார்த்து கருத்து சொன்னால் மகிழ்வேன்.