இன்னுமொரு இணைய எழுதி சேவை!
இணையத்தில் எழுத வேர்டுபேட் அல்லது கூகுள் டாக்ஸ் சேவை இருந்தாலும், தனியே ஒரு எழுதி சேவை இருந்தால் வசதி தான். இத்தகைய டெக்ஸ்ட் எடிட்டர் சேவைகள் பல இருக்கும் நிலையில், இப்போது புதிதாக ரைட்டி ( https://iamcharlie.design/writty/) எனும் இணைய எழுதி அறிமுகம் ஆகியுள்ளது.
கவனத்தை குவித்து எழுதுவதற்கான எளிமையான எழுதி என வர்ணிக்கப்படும் இந்த சேவையை பயன்படுத்துவது எளிது. ரைட்டி சேவையை கிளிக் செய்தால் தோன்றும் திரையில் டைப் செய்யத்துவங்க வேண்டியது தான்.
இடப்பக்கம் பார்த்தால், இணையத்தில் எழுதும் போது தேவைப்படும் அனைத்து டூல்களும் இடம்பெறும் பட்டியை பார்க்காலம். அதில் கிளிக் செய்தால் தலைப்பிடும் வசதியை பெறலாம்,. துணை தலைப்பிடலாம், எழுத்துக்களை தடிமனாக்கலாம். அடிக்கோடிடலாம். புகைப்படம் மற்றும் இணைய இணைப்புகளை இடம்பெறச்செய்யும் வசதியும் இருக்கிறது.
மொத்த வார்த்தைகளின் எண்ணிக்கை சுட்டிக்காட்டப்படுவதோடு, டைப் செய்ததை பிடிஎப் கோப்பாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலே உள்ள புதிய பிரதி வசதியை கிளிக் செய்தால் புதிய கோப்பை வரவைக்கலாம்.
டைப் செய்யும் வாசகங்கள் தானாக சேமிக்கப்பட்டு விடுகிறது. டைப் செய்யும் திரையை டார்க் மோடு வசதியிலும் மாற்றிக்கொள்ளலாம். குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பு சேவையாக அல்லது புக்மார்க் துண்டாகவும் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.