இந்த தளம் ஆடைகளுக்கான பேஸ்புக்
’செட்க்லோ’ இணையதளத்தை (https://www.setclo.com/login?next=/ ) பேஸ்புக்குடன் ஒப்பிடுவதைவிட ’லைப்ரரி திங்’ இணையதளத்துடன் ஒப்பிடுவது தான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில், லைப்ரரி திங் புத்தகங்களுக்கு என்ன செய்ததோ அதை தான், செட்க்லோ ஆடைகளுக்கு செய்ய முயல்கிறது.
லைப்ரரி திங் தளத்தை அறியாதவர்களுக்காக ஒரு எளிய அறிமுகம். சமூக வலைப்பின்னல் பிரிவில் முன்னோடி தளங்களில் ஒன்று. புத்தக பிரியர்களுக்கான சமூக வலைப்பின்னல் சேவையாக அறிமுகம் ஆக லைப்ரரி திங், டிவிடிக்களுக்கு நெட்பிளிக்ஸ் செய்தத்தை புத்தகங்களுக்காக செய்தது.
இன்று ஸ்டிரீமிங் சேவைக்காக அறியப்படும் நெட்பிளிக்ஸ் தளம் டிவிடிக்களை தபால் மூலம் அனுப்பி வைக்கும் சேவையாக துவங்கியதை நீங்கள் அறிந்திருக்கலாம். அந்த வகையில், இணைய யுகம் காலாவதியாக்கியதாக கருதப்பட்ட அஞ்சல் சேவையையும், இணையத்தையும் இணைக்கும் பாலமாக நெட்பிளிக்ஸ் அமைந்திருந்தது.
அதே போல, இணையமும், இ- புத்தகங்களும் அச்சு புத்தகங்களை காலாவதியாக்கும் என கருதப்பட்ட நிலையில், இரண்டையும் இணைக்கும் சேவையாக லைப்ரரி திங் அறிமுகமானது.
லைப்ரரி திங் தளத்தில் புத்தக பிரியர்கள், தாங்கள் வாசித்த புத்தகங்கள் மற்றும் வாசிக்க விரும்பும் புத்தகங்களின் பட்டியலை பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் தங்களிடம் உள்ள புத்தகங்களுக்கான மெய்நிகர் அலமாரியை இந்த தளத்தில் அமைத்துக்கொள்வதோடு, இதில் பகிரப்படும் புத்தகங்கள் மூலம் சக உறுப்பினர்களுடன் வாசிப்பு சார்ந்த உரையாடலை மேற்கொண்டு இலக்கிய நட்பை வளர்த்துக்கொள்ளலாம்.
இதே போலவே திரைப்பட பிரியர்களுக்கான சேவையாக ஐசெக்மூவிஸ் அமைகிறது.
செட்க்லோ இதே கருத்தாக்கத்தை ஆடை அலங்காரத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.
இந்த தளத்தில் பேஷன் பிரியர்கள் தங்களிடம் உள்ள ஆடைகளை பட்டியலிட்டு தங்களுக்கான மெய்நிகர் ஆடை அலமாரியை உருவாக்கி கொள்ளலாம். தாங்கள் வாங்க விரும்பும் ஆடைகளையும் இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.
அடுத்த கட்டமாக, ஒவ்வொரு நிகழ்வுக்கும் அணிந்து கொள்ளக்கூடிய ஆடை அலங்கார அமைப்பை, தங்களிடம் உள்ள ஆடை தொகுப்பில் இருந்து உருவாக்கி கொள்ளலாம். அலமாரியில் உள்ள ஆடை ரகங்களை கலைத்து போட்டி சரியான ஆடை சேர்க்கையை தேர்வு செய்வதைவிட, மெய்நிகர் வடிவில் பொருத்திப்பார்த்து தேர்வு செய்வது எளிதாக இருக்கும். தேர்வுக்கான பரிந்துரைகளை வழங்கும் அம்சங்களும் தளத்தில் இருக்கிறது.
இப்படி உருவாக்கிய ஆடை தொகுப்பை நட்பு வட்டத்திலும் பகிர்ந்து கொள்ளலாம்.
மிகவும் சுவாரஸ்யமான இணையதளமாக அறிமுகம் ஆகியிருக்கும் செட்க்லோ, இணையத்தில் பெரிய வரவேற்பை பெற்றதாக தெரியவில்லை. பிராடக்ட் ஹண்ட் தளத்தில் கூட, இதன் அறிமுகத்திற்கு பதில் கருத்துகளும் அதிகம் இல்லை.
ஆனால், லைப்ரரி திங் தளத்தை நினைவூட்டியதால் அந்த தளம் பற்றி குறிப்பிடுவதற்கான வாய்ப்பாக இந்த தளம் அமைகிறது.