போட்டித்தேர்வுகளுக்கு தயாராக உதவும் இணையதளம்

உயர்கல்வி வாய்ப்பு பெறவும், உயர்கல்விக்கு பின் பொருத்தமான வேலைவாய்ப்பு பெறவும் நுழைவுத்தேர்வுகளும், போட்டித்தேர்வுகளும் தான் நிதர்சனம் என்றாகிவிட்டது. இந்த போட்டி மிக்க சூழலுக்கு தயாராக வேண்டும் என்றால், பயிற்சி நிலையங்களையும், அகாடமிகளையும் தான் நாட வேண்டும் என்றில்லை. இணையம் மூலமே தயாரகலாம்.

இதற்கான அருமையான உதாரணமாக அமைகிறது இந்தியாபிக்ஸ் (https://www.indiabix.com/ ) இணையதளம். போட்டித்தேர்வுக்கு தயாராக தேவையான தகவல்களை அளிப்பதோடு, மாதிரி தேர்வுகள் எழுதிப்பார்க்கவும் வழி செய்கிறது இந்த தளம். கட்டணம் இல்லாமல் இலவசமாக இந்த சேவைகளை வழங்குகிறது.

போட்டித்தேர்வுகளில் அதிகம் கேட்கப்படும் அறிவுத்திறன் சார்ந்த கேள்விகளை பல்வேறு தலைப்புகளில் இந்த தளத்தில் காணலாம். இதன் இடைமுகமும் எளிதாகவே இருக்கிறது.

பொதுவான அறிவித்துறன், நடப்பு சம்பவங்கள் , மொழித்திறன் உள்ளிட்ட தலைப்புகளில் கேள்விகளை காணலாம். தேர்வுகளில் கேட்கப்படுவது போலவே கேள்விகள் கொடுக்கப்பட்டு அவற்றுக்கான பதில்களும் உள்ளன.

கேள்விகளுக்கு கீழ், பதில்களை பார்க்கும் வசதியோடு, விவாத வசதி மற்றும் ஒர்கவுட் செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தளத்தில் உள்ள தலைப்புகளுக்கு பழகவே சற்று நேரம் பிடிக்கும். புதிர்களுக்கான தனிப்பகுதி இருப்பதோடு, பொறியியல் மற்றும் புரோகிராமிங் தனிப்பகுதிகளும் இருக்கின்றன.

இவைத்தவிர, ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கான நேர்காணலுக்கு தயாராக உதவும் மாதிரி கேள்விகளையும் பார்க்கலாம்.

போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி என விடை தேடிக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும். யாரேனும் மாணவர்கள் கேட்டால் தயங்காமல் பரிந்துரைக்கலாம்.