வரைபட பெண் இணையதளம்
கூகுளில் ’நேரடியாக’ கண்டறிய முடியாத இணையதளங்களில் ஒன்றாக சார்ட்கேர்ள் (https://www.chartgirl.com/ ) இணையதளத்தை வர்ணிக்கலாம். இந்த தளத்தை நான் கண்டறிந்த விதமே இதற்கு சான்று. இந்த தளத்தை கூகுள் தேடலில் கண்டறிந்தாலும், உண்மையில் இந்த தளம் அதன் தேடல் முடிவில் வெளித்தெரியாமல், உள்ளுக்குள் மறைந்திருந்தது.
டைப் பத்திரிகையின் 2013 ம் ஆண்டு சிறந்த இணையதளங்கள் பட்டியலில் இருந்து இந்த தளத்தை கண்டறிய வேண்டியிருந்தது.
டைம் பட்டியல்
டைம் பத்திரிகை ஆண்டுதோறும் 50 இணையதளங்களை பட்டியலிடும் வழக்கத்தை கொண்டிருந்த போது, 2013 பட்டியலில் செய்தி மற்றும் தகவல்கள் பிரிவில் ஐந்தாவது இடத்தில் இருந்த சார்ட்கேர்ள் தளம் அதன் பெயராலேயே கவர்ந்திழுத்தத்து.
பயனாளிகளை ஈர்க்கும் பெயருக்கு ஏற்ப இந்த தளம், கண்ணும் கருத்துமான உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கிறது. இதன் உள்ளடக்கம் முழுவதும் தகவல் வரைபடங்களாக (infographics ) இருக்கின்றன. அதாவது செய்திகளில் பரபரப்பால பேசப்படும் விஷயங்களின் சிக்கலான அம்சங்களை அவற்றுடான தொடர்புகளை குறிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
செய்தியின் தன்மைக்கேற்ப ஒவ்வொரு வரைபடமும் ஒவ்வொரு வகையில் இருந்தாலும், செய்தி வலையின் பின்னே உள்ள சிக்கலான அம்சங்களை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்திருப்பதை பொதுத்தன்மையாக கொண்டிருக்கின்றன.
பிட்காயின் பிரம்மா
இந்த தளத்தில் இடம்பெற்றுள்ள செய்தி வரைபடங்கள் அனைத்தும் அமெரிக்காவை மையமாக கொண்டவை மற்றும் எல்லாமே 2010 காலகட்டத்தை ச்சேர்ந்தவை என்பதை மீறி, தொடர்புடைய செய்திகளின் நீள அகலத்தை புரிய வைப்பதில் உள்ள நேர்த்தி இப்போதும் கவர்கிறது. எப்போதும் கவரும் என்பது தான் இந்த தளத்தை குறிப்பிடுவதற்கான காரணம்.
அதிலும் குறிப்பாக நாகமோட்டோ எங்கே (Where in the World is Satoshi Nakamoto? ) எனும் தகவல் வரைபடத்தை இந்த தளத்தின் உள்ளடக்க நேர்த்திக்கான உதாரணமாக கூறலாம். இன்றளவும் பரப்பரப்பாக பேசப்படும் பிட்காயின் கிரிப்டோ நாணயத்தை உருவாக்கிய மர்மமனிதராக ( மர்மனிதர்களில் ஒருவர்) நாகமோட்டார் கருதப்படுகிறார். பிட்காயினை உருவாக்கிய சில ஆண்டுகளுக்குப்பிறகு இணையத்தில் சுவடில்லாமல் மறைந்துவிட்ட நாகமோட்டோ என்ன ஆனார், எங்கோ போனார் என்பது எல்லாம் பிட்காயின் விலை போக்கை விட பதில் தெரியாததாக இருக்கிறது.
நாகமோட்டோ தொடர்பான கேள்விகளும், தேடல்களும் தீவிரமாக இருந்த காலத்தில் இந்த விவகாரத்தின் நதி மூலம் துவங்கி, அதன் கிளை நதிகளாக விரியும் பல்வேறு யூகங்களையும், கணிப்புகளையும், விசாரணைகளையும் ஒற்றை வரைபடமாக இந்த தளம் தொகுத்து தந்திருக்கிறது. எப்போது பிட்காயின் மர்ம மனிதர் பற்றி எழுதினாலும்,. பேசினாலும் இந்த வரைபடம் பயன்படும்.
பாதியில் மாயம்
பிட்காயின் நிறுவனர் மர்மத்தை படம் பிடித்து காட்டும் வரைபடத்தை கொண்ட இந்த தளம், 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு புதுப்பிக்கப்படாமல் இருப்பது தான் வருதத்திற்குறியது. கொஞ்சம் புதிரானதும் கூட. இத்தனை நல்ல உள்ளடக்கம் கொண்ட தளம் ஏன் தொடர்ந்து நடத்தப்படவில்லை என்று தெரியவில்லை.
ஆனால் ஒன்றும் இந்த தளமே சுவடில்லாமல் போகாமல் புதுப்பிக்கப்படாமல் இருக்கிறதே என்று ஆறுதல் கொள்ளலாம். பாதியில் கைவிட்டப்படப்பட்டதன் காரணமாக கூட, இந்த தளம் கூகுள் தேடல் முடிவுகளில் நேரடியாக தென்படாமல் போகலாம். எப்படி இருந்தாலும், கூகுளில் கண்டறியப்பட முடியாத தளம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் சார்ட்கேர்ள் எனும் தளம் இருப்பது தெரிந்தால் அந்த பெயரை குறிப்பிட்டு தேடலாம். இப்படி ஒரு தளம் இருப்பதே தெரியாதவர்கள் இந்த தளத்தை கூகுளில் அடையாளம் காண்பது கடினம் தான். அதற்கு சிறந்த இணையதளங்கள் என தேட வேண்டும். அதிலும், ஏதேனும் ஆண்டை குறிப்பிட்டு தேட வேண்டும். இதற்கு டைம் பத்திரிகை போன்றவை ஆண்டு அடிப்படையில் சிறந்த தளங்களை பட்டியலிட்டதை அறிந்திருக்க வேண்டும். அப்போது தான், டைம் பட்டியலுக்குள் புகுந்து பார்க்கத்தோன்றும். சார்ட்கேர்ள் தளமும் கண்ணில் படும். நான் சொல்வது சரி தானே நண்பர்களே.!