ஒரு (பழைய) நவீன தேடியந்திரம்!
யிப்பி (https://yippy.com/) தப்பி பிழைத்து, தாக்குப்பிடித்திருப்பதை பார்த்தால் அத்தனை சந்தோஷமாக இருக்கிறது. இதில் தேடிப்பார்த்தால் இன்னும் சந்தோஷமாக இருக்கும். அதற்கு முன், இந்த தேடியந்திர வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்த்துவிடலாம்.
’யிப்பி’ தேடியந்திரம் கிளஸ்டி எனும் பெயரில் 2004 ம் ஆண்டில் அறிமுகமானது. விவிஸிமோ (Vivísimo) எனும் நிறுவனம் அறிமுகம் செய்த கிளஸ்டி தேடியந்திரம் அமெரிக்காவின் கார்னகி மெலான் பல்கலைக்கழகம் உருவாக்கிய, தேடல் நுட்பத்தை அடிப்படையாக கொண்டு செயல்பட்டது.
கிளஸ்டி அறிமுகமாவதற்கு முன்னரே, விவிஸிமோ தேடல் சேவையை வழங்கி கொண்டிருந்தது. விவிஸிமோ பின்னர் கிளஸ்டியானது. அதன் பிறகு, ஐபிஎம் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. இப்போது யிப்பி எனும் பெயரில் செயல்பட்டு வருகிறது. இதற்கு அடிப்படையான தேடல் தொழில்நுட்பம் ஐபிஎம் வசம் இருக்கிறது. ஐபிஎம் வாட்சன் எக்ஸ்புளோரர் எனும் அந்த நுட்பத்தின் அடிப்படையில் தான் யிப்பி நிறுவனம் இந்த தேடல் சேவையை வழங்கி வருகிறது.
விவிஸிமோ எப்போது கிளஸ்டியானது, எப்போது யிப்பியானது என்பதில் எல்லாம் சிறிது குழப்பம் இருக்கிறது. ஆனால் அந்த குழப்பம் முக்கியம் அல்ல. விவிஸிமோ தேடலில் புதிய நுட்பத்தை அறிமுகம் செய்ததும், அந்த நுட்பத்தை இப்போது, யிப்பி வடிவில் அணுக முடிகிறது என்பதுமே கவனிக்க வேண்டியது.
விவிஸிமோ தேடியந்திரம் புத்தாயிரமாண்டில் அறிமுகமான போது, புதிய அனுபவமாகவே இருந்தது. இதன் காரணமாகவே, அந்த கால கட்டத்தில் முன்னணி இடத்திற்கு வந்து கொண்டிருந்த கூகுளுக்கு போட்டியாக வர்ணிக்கப்பட்டது. இப்படி பல தேடியந்திரங்கள் வர்ணிக்கப்பட்டு காணாமல் போயின என்பது வேறு விஷயம்.
ஆனால், விவிஸிமோ தன்னளவில் சிறப்பான தேடியந்திரமாகவே இருந்தது. அது தேடலை முன்வைத்ததே விதமும் தனித்துவமாக இருந்தது. விவிஸ்மோ, கூகுள் உள்ளிட்ட தேடியந்திரங்களைப்போல, தேடல் முடிவுகளை அப்படியே பட்டியலாக அளிக்காமல், அவற்றை பொருத்தமாக வகைப்படுத்தி தொகுத்தளித்தது.
இப்படி தேடல் முடிவுகளை தொகுத்தளிக்கும் உத்தி வெறும் காட்சிரீதியான மாற்றம் அல்ல. தேடல் அனுபவத்தை மாற்றி அமைக்க கூடிய இந்த உத்தியை விவிஸிமோ கிளஸ்டரிங் என குறிப்பிட்டது. அதே போல, தன்னை கிளஸ்டரிங் சர்ச் இஞ்சின் என்றே வர்ணித்துக்கொண்டது.
ஆனால் ஒன்று விவிஸிமோ, அடிப்படையில் இணையத்தில் வலைவீசி தேடுவதில்லை. மற்ற தேடியந்திரங்களின் முடிவுகளை அழகாக தொகுத்தளிக்கிறது. அந்த வகையில் இது, மெட்டா சர்ச் இஞ்சின் எனப்படும் அடுக்கு தேடியந்திர வகையைச்சேர்ந்தது என்றாலும், இது வெறும் அடுக்கு தேடியந்திரமும் இல்லை.
பல்வேறு தேடியந்திர முடிவுகளை திரட்டித்தந்தாலும், இந்த தொகுத்தளிப்பதில் தான் அதன் நுட்பமும் அடங்கியிருந்தது. பல்வேறு வகையான ஆவணங்களை தொகுக்கும் போது, அவற்றுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள் அடிப்படையில் வகைப்படுத்தப்படும் அல்லவா? அதே போல, விவிஸிமோ, தேடல் முடிவுகளை அவற்றுக்கு இடையிலான தொடர்பு மற்றும் பொருத்தத்தின் அடிப்படையில் தொகுக்கிறது. இந்த தொகுப்பும் வெறும் நேர்கோட்டிலானதாக இல்லாமல், ஒரு மரத்தின் கிளைகள் போல அமைகிறது.
இந்த நுட்பத்தின் அடிப்படையில் விவிஸிமோ, தேடல் முடிவுகளை வெவ்வேறு கோப்புகளாக பிரித்து அளித்தது. தேடலில் ஈடுபடுபவர்கள் பட்டியலில் தங்களுக்கு தேவையான முடிவு எங்கே இருக்கிறது என குழம்ப நேராமல், தங்கள் நோக்கத்திற்கு பொருத்தமான தலைப்பு கொண்ட கோப்பில் உள்ள முடிவுகளை நாடலாம். அது மட்டும் அல்ல, வழக்கமான தேடல் பட்டியலில், முதல் ஐந்து அல்லது பத்து முடிவுகளில் மட்டுமே பெரும்பாலானோர் கவனம் செலுத்துகின்றனர். பொருத்தமான முடிவு அதற்கு பின் வரும் பக்கங்களில் வந்தால் என்ன செய்வது?
ஆனால் விவிஸிமோவை பயன்படுத்தும் போது, நூற்றி பத்தாவது இடத்தில் உள்ள முடிவு கூட, பொருத்தமாக தொகுக்கப்பட்டிருக்கலாம். இந்த காரணத்தினாலேயே விவிஸிமோ தேடல் விஷேசமாக கருதப்பட்டது.
அதன் சி.இ.ஓ பெரிஸ் (Raul Valdes-Perez), கூகுள் போன்ற பட்டியல் தேடியந்திரங்கள் வெறும்னே தேடல் முடிவுகளை, எந்த வேறுபாடும் இல்லாமல் தட்டையாக பட்டியலிடுகின்றன. இது புத்தக கடையில், புத்தகங்கள் எல்லாம் தரையில் இறைந்து கிடப்பதற்கு சமமானது என்று ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். இதற்கு மாறாக விவிஸிமோ, புத்தகங்கள் வகைப்படுத்தி அடுக்கி வைக்கப்பட்டிருப்பது போல தேடல் முடிவுகளை வழங்குவதாக தெரிவித்திருந்தார்.
இப்போது ’யிப்பி’யில் தேடிப்பார்ப்பதன் மூலம், இந்த உத்தியின் அருமையை உணரலாம். யிப்பியில் தேடும் போது, தேடல் முடிவுகள் பட்டியலிடப்படுவதோடு, இடப்பக்கத்தில் பல்வேறு தலைப்புகளின் கீழ், முடிவுகள் தொகுக்கப்பட்டிருப்பதையும் பார்க்கலாம். தேடல் முடிவுகளுக்கு ஏற்ப, இந்த வகைப்படுத்தல் அமைகிறது. உதாரணமாக, முகம் உணர்தல் ( ) என தேடிப்பார்த்தால், முகமறிதல் தொழில்நுட்பம், படங்கள், முகமறிதல் உணர்வுகள், காவல்துறை, டிஜிட்டல், தேடல், முகமறியும் காமிரா … என இந்த நுட்பம் தொடர்பான பொருத்தமான முக்கிய தலைப்புகளின் கீழ் முடிவுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 355 தலைப்புகளில் தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுக்கான மேலதிக விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
வர்த்தக நிறுவனங்கள் தங்கள் தேவைக்காக இந்த வகை தேடல் உத்தியை தான் நாடுகின்றன.
யிப்பி வழங்கும் இந்த மேம்பட்ட தேடல் அனுபவத்தை ஒரு முறை பயன்படுத்திப்பாருங்கள்!
-
பி.கு: யிப்பி பற்றிய இந்த பழைய கதைகளை அறிந்து கொள்வது கடினம். யிப்பியின் வரலாறு தெரிந்து, இணைய காப்பகமான வேபேக் மெஷினில் கொஞ்சம் அகழ்வராய்ச்சியில் ஈடுபட்டால் தான் கிளஸ்டரிங் நுப்டம் பற்றி அறிந்து கொள்ளலாம்: இணைப்புகள் இதோ:
-
https://web.archive.org/web/20050212020305/http://searchlineinfo.com/Vivisimo_cluster_search/
-
https://web.archive.org/web/20010331103751/http://www.zdnet.com/searchiq/reviews/vivisimo.html
https://web.archive.org/web/20010302043836/http://www.vivisimo.com/
--
கருப்பின மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க உதவும் இணையதளம்
அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநிதிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமாகி வருவது மட்டும் அல்ல இந்த போராட்டத்திற்கான ஆதரவும் பெருகி வருகிறது. தொழில்நுட்ப இணையதளங்களிலும் இதன் தாக்கத்தை உணரலாம். பெரும்பலான தளங்களில், கருப்பின மக்களின் போராட்டத்தின் மைய கருத்தாக அமைந்துள்ள, கருப்பர் உயிர்கள் முக்கியம் எனும் வாசகத்தை குறிப்பிட்டு அதற்கு ஆதரவு தெரிவிப்பதை பார்க்க முடிகிறது.
இப்படி ஆதரவு தெரிவிக்கும், டிஜிட்டல் பட்டையை இணையதளங்களில் இடம்பெற வைப்பதை எளிதாக்குவதற்காக என்றே https://blmbar.org// எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் உள்ள நிரல் குறிப்புகளை நகலெடுத்து இணையதள டாஷ்போர்டில் பேஸ்ட் செய்வதன் மூலம், தளத்தின் முகப்பு பக்கத்தில், கருப்பர் உயிர்கள் முக்கியம் எனும் வாசகம் கொண்ட பட்டியை தோன்றச்செய்து, வெள்ளையர் இனவெறிக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கலாம். வேர்டுபிரஸ் தளங்களுக்கான பட்டியில் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
-