திரைப்படங்களுக்கு இணையதளம் தேவையா?
தமிழில் எத்தனை திரைப்படங்களுக்கு தனியே இணையதளம் இருக்கின்றன என்று தெரியவில்லை. ஆனால், ஆங்கிலத்தில் பெரும்பாலும் பேசப்படும் பல நல்ல படங்களுக்கு தனியே இணையதளம் இருக்கின்றன. இந்த வகையில் அண்மையில் கண்ணில் பட்ட திரைப்பட தளமாக, ’ஹலோ மை நேம் ஈஸ் டோரிஸ்’ (http://www.hellomynameisdorismovie.com/#cast ) படத்திற்கான இணையதளம் அமைகிறது.
அநேகமாக படம் வெளியான போது அதன் விளம்பரத்திற்காக அமைக்கப்பட்ட தளமாக இருந்தாலும், இந்த தளம் தகவல் நோக்கிலும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. இந்த படம் சுவாரஸ்யமானதாக இருப்பதே இதற்கு காரணம்.
’ஹலோ மை நேம் ஈஸ் டோரிஸ்’படம் ஆங்கிலத்தில் வெளியான படம் என்றாலும், ஹாலிவுட் படம் அல்ல. மாறாக, ஹாலிவுட் வணிக சூழலில் இருந்து விலகி சுயாதீன பிரிவில் எடுக்கப்பட்ட படம். 2015 ம் ஆண்டு சவுத் பை சவுத்வெஸ்ட் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு கவனத்தை ஈர்த்த இந்த படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி, பரவலான வரவேற்பை பெற்றிருக்கிறது. அதன் பிறகு தொடர்ந்து, ஸ்டிரீமிங் உலகில் விரும்பி பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது.
டோரிஸ் படம் ரசிகர்களை கவர முக்கிய காரணம் அதன் கதை தான் எனத்தோன்றுகிறது. பெரும்பாலான பெண்கள் போல, பல ஆண்டுகளாக புறக்கணிப்புகளையும், கவனமின்மையையும் எதிர்கொள்ளும் ஒரு பெண்மணி, நடுத்தர வயதுக்கு பிறகு சக நண்பர் ஒருவர் உதவியால் ஊக்கம் பெற்று தனக்கான தனி வாழ்க்கையை மீட்டுக்கொள்வதாக படத்தின் கதை அமைந்துள்ளது. இதில் டோரிஸ் பாத்திரத்தில் ஆஸ்கர் விருது வென்ற சாலி பீல்டு என்பவர் நடித்துள்ளார். ஷோவால்டர் என்பவர் இயக்கியுள்ளார்.
காவிய பாணி காமெடி வகையைச்சேர்ந்த இந்த படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ஆதரவை பெற்று, தொடர்ந்து பார்க்கப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது. இதன் அடையாளம் தான், படத்திற்கான இணையதளம் இன்னமும் ஈர்ப்புடையதாகவே இருக்கிறது.
மிக எளிமையாக வடிவமைக்கப்படுள்ள இந்த தளத்தில் படத்தின் கதைச்சுருக்கம், நடிகர்கள் விவரம், விமர்சனங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றுக்கான பகுதிகளோடு, படத்தின் முன்னோட்டமும் இடம்பெற்றுள்ளது.
தற்செயலாக இணையத்தில் இந்த படத்தை எதிர்கொள்பவர்கள் படம் பற்றி அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த தளம் அமைந்துள்ளது. தொடர்ந்து புதுப்பிக்கப்படாவிட்டாலும் கூட, இந்த தளம் புதிதாக வருபவர்களுக்கு சரியான தகவல் அளிக்கும் வகையில் இருக்கிறது.
எல்லாம் சரி, தமிழில் எந்த படங்களுக்கு எல்லாம் இணையதளம் அமைத்தால் இதே போல ஈர்ப்புடையதாக இருக்கும் சொல்லுங்கள்!