இசைப்பிரியர்களுக்கான பேஸ்புக்
கொஞ்சம் வரலாற்றுடன் துவங்கலாம். பேஸ்புக் எல்லாம் வருவதற்கு முன் மைஸ்பேஸ் எனும் சமூக வலைப்பின்னல் தளம் மிக பிரபலமாக இருந்தது. மைஸ்பேஸ் இசைமயமான தளமாக இருந்தது. உறுப்பினர்கள் தங்கள் மைஸ்பேஸ் பக்கத்தில் தங்களுக்கு பிடித்தமான பாடல்களை பகிர்ந்து கொண்டதோடு, பெரும்பாலும் இசை சார்ந்து மற்றவர்களுடன் உரையாடினர். இதனால், பிரபல பாடர்கள் புழங்கும் இடமாகவும், புதிய இசைக்கலைஞர்கள் ரசிகர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதற்கான இடமாகவும் மைஸ்பேஸ் விளங்கியது.
இந்த வரலாற்றுக்குறிப்பு எதற்காக என்றால், இப்போது நாம் பார்க்க இருக்கும் தளத்தை, இசைப்பிரியர்களுக்கான மைஸ்பேஸ் என்று தான் வர்ணிக்க வேண்டும். ஆனால், மைஸ்பேஸ் சேவை படிப்படியாக செல்வாக்கு இழந்து பின்னுக்குத்தள்ளப்பட்டுவிட்ட நிலையில், இப்போது சமூக வலைப்பின்னல் சேவை என்றால் பேஸ்புக்கை தான் மேற்கோள் காட்ட வேண்டியிருக்கிறது.
எனவே, சவுண்ட்கிளிக் ( https://www.soundclick.com/) இணையதளத்தை இசைப்பிரியர்களுக்கான பேஸ்புக் என குறிப்பிட்டால் தான், அதன் தன்மையை எளிதாக புரிந்து கொள்ள முடியும். ஆனால்,எப்படி வர்ணித்தால் என்ன, இந்த தளத்தின் அருமையை இசைப் பிரியர்கள் தானாக உணர்ந்து கொள்ளலாம்.
அதிலும் குறிப்பாக மேற்கத்திய இசையில் ஆர்வம் கொண்டவர்கள் இந்த தளத்தை கொண்டாடி மகிழலாம்.
இந்த தளத்தில், மேற்கத்திய இசைக்கலைஞர்களின் பாடல்களை கேட்டு மகிழலாம். ஹிப்ஹாப், ராக், பால், எலெக்ட்ரிக் என மேற்கத்திய இசை வகைகள் ஒவ்வொன்றிலும் தனித்தனியே பாடல்களை அணுகலாம். எந்த பிரிவில் கிளிக் செய்தாலும், அந்த பிரிவில் இடம்பெற்றுள்ள பாடல் பட்டியல் தோன்றுகிறது. அவற்றில் விருப்பமான பாடலை கிளிக் செய்து கேட்கலாம்.
பாடல்கள் அவை பகிரப்பட்டுள்ள முறைக்கு ஏற்ப, இலவசமாக கேட்கலாம், டவுண்லோடு செய்து கொள்ளலாம். அல்லது கட்டணம் செலுத்தி கேட்கலாம்.
ஆக, புதிய இசையை கேட்க விரும்புகிறவர்கள் இந்த தளம் சொர்கமாக இருக்கும்.
அது மட்டும் அல்ல, ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான பாடல்களின் பட்டியலை உருவாக்கி மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம். சக உறுப்பினர்களுடன் இசை சார்ந்து உரையாடலாம். ஆனால் இதற்கு உறுப்பினராக சேர வேண்டும்.
இசைக்கலைஞர்களை பொருத்தவரை, தங்கள் இசையை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்களுடன் உரையாடலாம்.
1997 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இசைதளம் இது. டாஞு மற்றும் டோல்கர் கான்லி சகோதரர்கள் இந்த தளத்தை நடத்தி வருகின்றனர்.