கவனத்தை குவிக்க ஒரு கேமிங் செயலி
வர்ணனைகள் இல்லாமல், நேரடியாக போகஸ்பைட் (https://focusbyte.io/ ) செயலியை அறிமுகம் செய்து கொள்ளலாம். இணையத்தில் நேரத்தை வீணடிக்காமல், கவனச்சிதறல் இல்லாமல், நினைத்த வேலையை செய்து முடிக்க உதவும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
கவனச்சிதறலும், சோம்பலும் எல்லோருக்கும் உள்ள பிரச்சனை தான். இவற்றை எதிர்கொண்டு, செயல் திறனை அதிகரிக்க உதவும் இணையதளங்களும், செயலிகளும் கூட இருக்கின்றன.
போகஸ்பைட்டும், இத்தகைய செயல்திறன் வளர்ப்பு வகை செயலி தான் என்றாலும், இதை விளையாட்டாக செய்ய வழி செய்வது தான் இதன் சிறப்பம்சமாக இருக்கிறது.
செயல்திறனில் கவனம் செலுத்துவது ஒரு சுமையாக மாறிவிடாமல், அதை சுவாரஸ்யமாக மேற்கொள்ள வழி செய்கிறது இந்த செயலி. இதற்காக கவனம் குவிப்பதை ஒரு கேமிங் போல மாற்றி விடுகிறது.
கேம் என்றாலே சுவாரஸ்யம் தானே. அவார்டு எடுக்கலாம், ஒவ்வொரு கட்டமாக முன்னேறலாம், நமக்கான அவ்தார்களை உருவாக்கி கொள்ளலாம். இந்த அம்சங்களை எல்லாம் செயல் திறனுடன் இணைக்கிறது போகஸ்பைட் செயலி.
அடிப்படையில் இந்த செயலி, கவனம் குவித்தலுக்கான நேரம் காட்டியாக ( டைமர்) அமைகிறது. ஆக, குறிப்பிட்ட செயலில் கவனம் செலுத்த விரும்பும் போது, இந்த செயலியில் அதற்கான நேரத்தை வகுத்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட அந்த நேரம் வரை கவனச்சிதறல் இல்லாமல், மனதில் கொண்ட வேலையை செய்து முடிக்க வேண்டும்.
இந்த உறுதியை ஒரு விளையாட்டாக மாற்றி விடுகிறது போகஸ்பைட். எப்படி என்றால், குறிப்பிட்ட வேலையை கவனச்சிதறல் இல்லாமல் செய்து முடித்தால், அதற்கான பரிசு புள்ளியை ரிவார்டாக அளிக்கிறது. இந்த ரிவார்டை கொண்டு, மேலும் பரிசுகள் வாங்கலாம். நமக்கான அவதார்களை உருவாக்கி கொள்ளலாம். அதிக செயல்களை முடித்தால் இந்த அவ்தார் வளரும்.
மாறாக, செயல்களை பாதியில் விட்டால், பரிசுகள் போய்விடும். இதற்கான எச்சரிக்கை தகவலும் வரும்.
இப்படி செயல்களை செய்து முடிப்பதை அழகான விளையாட்டாக மாற்றி செயல்திறன் மேம்படுத்திக்கொள்ள வழிகாட்டுகிறது இந்த செயலி. நீங்களும் முயன்று பாருங்கள்!.
-