ஒரு மெய்நிகர் நடை போவாமா?
காலத்திற்கு ஏற்ற இணையதளங்கள் உருவாக்கப்பட வேண்டும். இதை எளிதாக புரிந்து கொள்ளலாம். ஆனால், நம் காலத்தின் தன்மையை உணர்ந்து உருவாக்கப்படும் தளங்கள், அப்பட்டமான வர்த்தக நோக்கம் இல்லாமல், நம் கால தேவையை நிறைவேற்றும் வகையில் அமைந்திருந்தால் இன்னும் சிறப்பு. இப்போது நாம் பார்க்க இருக்கும், டேக் ஏ வாக். டூ (https://takeawalk.to/ )தளம் இந்த ரகத்தைச்சேர்ந்தது தான்.
இந்த தளத்தில் என்ன சிறப்பு என்றால், கொரோனா தொற்றின் பெருந்தாக்கத்திற்கு மத்தியில், வீட்டில் இருந்தே பணியாற்றும் நிர்பந்தமும், தேவையும் அதிகரித்திருக்கும் நிலையில், இந்த தற்கால இயல்பு சார்ந்த துணை தளமாக இது அமைந்துள்ளது தான்.
ஒர்க் பிரம் ஹோம் எனப்படும் வீட்டில் இருந்தே பணியாற்றும் வாய்ப்பு தேர்வோ அல்லது நிர்பந்தமோ எதுவாக இருந்தாலும், அதில் சாதகங்களும் உண்டு, பாதகங்களும் உண்டு. பாதகங்களில் முக்கியமானது, வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் உணர்வு.
இந்த உணர்வுக்கு மெய்நிகர் தீர்வாக, ஒரு நடை போய்விட்டு வரலாம் வாருங்கள் என அழைக்கும் வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஒரே இடத்தில் உட்காருந்து பணியாற்றும் போது சற்று காலார நடந்து விட்டு வரலாம் என்று தோன்றும் அல்லவா? அத்தகையை நடையை இணையம் மூலம் மேற்கொள்ளும் வகையில், நடைகாட்சிகளை திரைவில் ஓடவிட்டு நம்மை மனதளவில் பங்கேற்கச்செய்கிறது இந்த தளம்.
இப்படி உலகில் உள்ள பல நகரங்களில் வீடியோ காட்சி வழியே மெய்நிகர் நடை மேற்கொள்வதன் மூலம் மனதளவில் உற்சாகம் பெறலாம்.
மிக எளிதான இடைமுகம் கொண்டுள்ள இந்த தளம், யூடியூப் சேனல்களில் இருந்து இந்த நடைகாட்சிகளை எடுத்தளிக்கிறது. இதே விதமான இன்னொரு தளத்தையும் அறிந்து கொள்வது சுவாரஸ்யமாக இருக்கும்.