உங்கள் டிவிட்டர் அறிக்கை
உங்கள் டிவிட்டர் பக்கத்தை யாரேனும் ஆய்வுக்குள்ளாக்கி அது தொடர்பாக அறிக்கை அளித்து, டிவிட்டர் அனுபவத்தை மேம்படுத்த உதவினால் எப்படி இருக்கும்? இந்த பணியை இன்னொருவரிடம் ஒப்படைப்பதற்கு பதில், இதற்காக என்று செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ஒரு சேவையை உருவாக்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும் அல்லவா?
புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் ’டிவிட்டர்டிவில்’ (https://twittertwill.com/ ) இதை தான் செய்கிறது.
உங்கள் டிவிட்டர் மனநிலையை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என அழைப்பு விடுக்கும் இந்த சேவை, உங்கள் சார்பாக டிவிட்டர் பக்கத்தை, அதில் பகிரப்படும் குறும்பதிவுகளை அலசி ஆராய்ந்து அறிக்கை அளிக்கிறது.
டிவிட்டர் பக்கத்தில் வெளியாகும் குறும்பதிவுகளின் தன்மையை செயற்கை நுண்ணறிவின் அங்கமான இயந்திர கற்றல் நுட்பம் மூலம் ஆய்வுக்குள்ளாக்கி, அவை எதிர்மறையானவையா அல்லது நேர் நிறையானவையா என எடுத்துச்சொல்கிறது.
உங்கள் டைம்லைனில் வெளியாகும் பதிவுகளில், எத்தனை பதிவுகள் எதிர்மறை தன்மை கொண்டவை, அவற்றில் அதிக எதிர்மறையானவை எவை என்றெல்லாம் அடையாளம் காட்டுகிறது.
சமூக ஊடக பயன்பாடு மனநலத்தை பாதிப்பது முக்கிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கும் சூழலில் மிக பொருத்தமாக இந்த சேவை அறிமுகம் ஆகியுள்ளது.
டிவிட்டர் பயனாளிகள் தங்கள் பக்கத்தில் வெளியாகும் குறும்பதிவுகளின் தன்மையால் தாக்கத்திற்கு உள்ளானால், அதற்கு காரணமான டிவிட்டர் கணக்குகளை தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க இந்த சேவை உதவுகிறது. இந்த சேவை மூலம், தினசரி அல்லது வார அடிப்படையில் அறிக்கைகளை பெற்றுக்கொள்ளலாம்.
டிவிட்டர் பயன்பாடு நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் ஒன்று, இந்த சேவையை பயன்படுத்த உங்கள் டிவிட்டர் கணக்கில் இதை அனுமதிக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் மட்டுமே இந்த சேவை செயல்படும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
டிவிட்டர் மட்டும் அல்ல, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் , வாட்ஸ் அப் உள்ளிட்ட சேவைகளுக்கும் இது போன்ற சேவை இருந்தால் நன்றாக தான் இருக்கும்.