இது ரசனைக்குறிய இணையதளம்
இணையத்தில் ரசிக்க கூடிய இணையதளங்கள் என்றும் ஒரு வகை இருக்கிறது. இத்தகைய இணையதளம் ஒன்றை தான் இப்போது பார்க்கப்போகிறோம். ‘டூம்கேப்ட்சா’ (https://vivirenremoto.github.io/doomcaptcha/ ) எனும் அந்த தளம், விளையாட்டாக அமைக்கப்பட்டது என்றாலும், அது ரசிக்க கூடியதாகவும் இருக்கிறது.
இந்த தளத்தின் பின்னே இருக்கும் கேலியும், கிண்டலும் தான் இதை ரசிக்க வைக்கிறது. ஆனால், இது வெறும் கேலி மட்டும் அல்ல, அதில் இணைய போக்கின் மீதான விமர்சனமும் கலந்திருக்கிறது. இதன் காரணமாகவே இந்த தளம் ரசனைக்குறியதாகவும் இருக்கிறது.
இந்த தளத்தை ரசிக்க வேண்டும் என்றால், கேப்ட்சா பற்றி தெரிந்திருக்க வேண்டும். கேப்ட்சா பற்றி தெரிந்திருக்காவிட்டாலும், நீங்கள் கேப்ட்சாவையை இணையத்தில் பல முறை எதிர்கொண்டிருக்கலாம். ஒரு சில இணைய சேவைகளை அணுகும் போது, சின்னதாக ஒரு கட்டமும், அதன் கீழ் கோணல் மாணலான எழுத்துக்களும், எண்களும் தோன்றும். இந்த எழுத்துகளையும், எண்களையும் சரியாக கட்டத்தில் டைப் செய்தால், இணைய சேவையை பயன்படுத்த அனுமதி கிடைக்கும்,
சில நேரங்களில், ஒரு சில முறைக்கு மேல் இந்த எழுத்துக்களை உள்ளீடு செய்ய வேண்டியிருக்கலாம். இன்னும் சில தளங்களில், கட்டம் கட்டமாக படங்கள் காட்டப்பட்டு, அதில் சைக்கிள் இருக்கும் படங்களை மட்டும் சுட்டிக்காட்டுமாறும் கேட்கப்படலாம். இதுவும் கேப்ட்சாவில் ஒரு வகை தான்.
இணைய சேவையை அணுக முயல்பவர்கள் ‘பாட்’கள் எனும் மென்பொருள் அல்ல, மனிதர்கள் தான் என்பதை உறுதி செய்வதற்காக நடத்தப்படும் பரிசோதனையாக கேப்ட்சா அமைகிறது. பல நேரங்களில் பயனாளிகளுக்கு இவை சோதனையாக அமைந்து விடுகின்றன. ஆர்வத்துடன் அல்லது அவசரமாக இணைய சேவையை அணுக முயலும் போது, கட்டமாக எழுத்துகளும், படங்களும் தோன்றுவதில், அவற்றில் உள்ள அர்த்தமற்ற புதிர்களை விடுவிக்க முயற்சிப்பதும் இணைய அனுபவத்தை மோசமாக்கலாம்.
பெரும்பாலான தளங்கள் பின்பற்றும் இந்த கேப்ட்சா நடைமுறையை நையாண்டி செய்யும் வகையில், மேலே சொன்ன டூம் கேப்ட்சா தளம் அமைந்துள்ளது.
இணைய சேவைக்கான கேப்ட்சா போன்ற வடிவமைப்பை முன் வைக்கும் இந்த தளம், மேற்கொண்டு செல்ல வேண்டும் எனில், துப்பாக்கி விளையாட்டில் பங்கேற்று நான்கு பேரை சுட்டு வீழ்த்துங்கள் என்கிறது. ஆக, கேப்ட்சா புதிரை விடுவிப்பதற்கு பதிலாக, வீடியோ கேம் ஆட்டம் போல, சுட்டு வீழ்த்திவிட்டு முன்னேறிச்செல்லுங்கள் என்கிறது.
கேப்ட்சா சோதனை இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என ஒரு கணம் யோசிக்க வைக்கும் இந்த தளம், இந்த பரிசோதனையின் அபத்த தன்மையையும் சுட்டிக்காட்டுவதை உணரலாம். அதிலும் குறிப்பாக கேப்ட்சாவால் சோதனையான அனுபவத்தை எதிர்கொண்டவர்கள், இந்த கேலியை நிச்சயம் ரசிப்பார்கள்.
ஆனால், இது நகைச்சுவையான முயற்சி தான், இதை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர, கோடிங் தெரிந்தால் யாரும் இந்த விளையாட்டு ரகசியத்தை உடைத்துவிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ட்சா (Miquel Camps Orteza ) எனும் மென்பொருள் வல்லுனர் இந்த விளையாட்டை உருவாக்கி இருக்கிறார். ஏற்கனவே, கேப்ட்சா புதிரை கேலி செய்யும் வகையில், இணைய புதிரை விடுவித்து இணையதளம் உள்ளே நுழைய வேண்டும் என்றால், தோப்புக்கரணம் போட்டு க்காட்ட வேண்டும் என வலியுறுத்தும் ஸ்குவாட் கேப்ட்சா தளத்தையும் இவர் உருவாக்கி இருக்கிறார். https://vivirenremoto.github.io/squat_captcha/sample-form.html?ref=producthunt எனும் இந்த தளம் முன், வெப்கேமிராவில் தோப்புக்கரணம் போட்டுக்காட்ட வேண்டும்!