பாடலாசிரியர்களுக்காக ஒரு இணையதளம்
தமிழக பாடலாசிரியர்கள் அல்லது இந்திய பாடலாசிரியர்கள் எனும் பெயரில் ஒரு இணையதளம் இருந்தால் எப்படி இருக்கும்? இத்தகைய இணையதளத்தின் தன்மையையும், தேவையையும் உணர்த்தும் வகையில் அமைந்திருக்கிறது ’அமெரிக்கன்சாங்ரைட்டர்’ (https://americansongwriter.com/) இணையதளம்.
இதெ பெயரில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் அச்சு இதழின் இணைய பதிப்பான இந்த தளம், அதன் அமைப்பிலும், உள்ளடக்கத்தில் கவர்ந்திழுக்கிறது. தளத்தின் பெயரை பார்த்தவுடன் புரிந்து கொள்ளக்கூடியது போலவேம் அமெரிக்க பாடலாசிரியர்களுக்கான இந்த தளம், பாடலாசிரியர்கள் பற்றியும், அவர்கள் உருவாக்கிய பாடல்கள் பற்றியும் தகவல்களை கட்டுரைகளாகவும், பதிவுகளாகவும் தொகுத்தளிக்கிறது.
இதோ இப்போது வெளியான பாப் பாடல் துவங்கி, பாடகர்கள், பாடல்கள் தொடர்பான செய்திகளையும், தகவல்களையும் இந்த தளம் வழங்குகிறது. ஆழமான இசை ஆர்வம் கொண்டவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தக்கூடிய இந்த தளத்தை மேலோட்டமாக பார்க்கும் போதே அதன் உள்ளடக்கம் சிறப்பாக இருப்பதை உணர முடிகிறது.
இசை உலகில் முத்திரை பதித்த பாடல்கள் பிறந்த கதையை அறிந்து கொள்ள உதவும் வகையிலான பதிவுகள் இந்த தளத்தின் இன்னொரு சிறப்பம்சமாக இருக்கிறது. பாடல்களுக்கான போட்டி, பாடகர்களுடன் நேர்காணல்கள், பாடல் பட்டியல், டிஜிட்டல் அறிமுகம் என இன்னும் பல பகுதிகள் இந்த தளத்தில் உள்ளன. இசைப்பிரியர்களுக்கு சரியான விருந்து இந்த தளம்.
நம் நாட்டில், நல்ல பாடகர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும் குறைவில்லை தான். அதோடு இசைப்பற்றி அற்புதமாக எழுதும் எழுத்தாளர்களுக்கும் குறைவில்லை தான். என்ன ஒன்று, அமெரிக்கன் சாங்க்ரைட்டர் போன்ற ஒரு இணையதளம் தான் இங்கில்லை.