ஊழியர்களுக்கு தொலைதூர பணி பயன்களை பட்டியலிடும் இணையதளம்
’கிளாஸ்டோர்’ இணையதளம் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். உலகம் முழுவதும் உள்ள வர்த்தக நிறுவனங்களின் பணி சூழல் மற்றும் ஊதிய விவரங்களை தெரிந்து கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும் உதவும் இணையதளம் இது. நிறுவன பணிகளுக்கான ஊதிய விவரங்கள் தொடர்பான தகவல்களையும், தரவுகளையும் முதன்முதலில் இணைய மயமாக்கிய சாலரி.காம் தளத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாகவே, ஊதிய விவரங்களை எல்லோரும் எளிதாக தெரிந்து கொள்ள வழி செய்யும் கிளாஸ்டோர் தளத்தை கருத வேண்டும்.
இப்போது, கிளாஸ்டோரின் அடுத்த கட்டம் என சொல்லக்கூடிய வகையில், ஆபிஸ்ஃபிரி (https://officefree.io/? ) இணையதளம் அறிமுகம் ஆகியுள்ளது. கிளாஸ்டோர் தளம் போல பரந்து விரிந்த தளம் இல்லை என்றாலும் கூட, ஆபிஸ்ஃபிரி தளம் அதன் நோக்கத்தில் கவர்ந்திழுக்கிறது.
இப்போது பரபரப்பாக பேசப்படும் ‘அலுவலகம் இல்லா வேலை’ தொடர்பான பணி நலன்களை எளிதாக தெரிந்து கொள்ள வழி செய்வதே இந்த தளத்தின் நோக்கமாக இருக்கிறது.
கொரோனா பாதிப்பு சூழலில், அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்றுவது தேவையானதாக, பரவலாகவும் ஆகியிருக்கிறது. ரிமோட் ஜாப் அல்லது ’ஒர்க் பிரம் ஹோம்’ என சொல்லப்படும் இந்த வகை வேலைவாய்ப்பை பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
வீட்டில் இருந்தே பணியாற்றும் வாய்ப்பை சில நிறுவனங்கள் கொரோனா சூழலில் வழங்குகின்றன என்றாலும், இதன் அணுகூலங்களை உணர்ந்து துவக்கத்தில் இருந்தே இவ்வாய்ப்பை ஊழியர்களுக்கு வழங்கி வரும் நிறுவனங்களும் இருக்கின்றன. உதாரணமாக, ’வேர்டுபிரஸ்’ வலைப்பதிவு சேவையின் தாய் நிறுவனமான, ஆட்டமேட்டிக் நிறுவனம் பல ஆண்டுகளாக விரிவாக்கப்பட்ட ஊழியர் படையை பெற்றிருக்கிறது.
இப்படி, வீட்டில் இருந்தே பணியாற்றும் வாய்ப்பை வழங்கும் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அளிக்கும் சலுகைகள், பணி நலன்களை பட்டியலாக அளிக்கிறது ஆபிஸ்ஃபிரி இணையதளம்.
நிறுவன பணி என்பது ஊதியம் தவிர வேறு சில சலுகைகள் மற்றும் உரிமைகளையும் கொண்டிருப்பது தானே. அந்த வகையில், தொலை பணி வாய்ப்பை அளிக்கும் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு என்ன எல்லாம் சலுகைகள் அளிக்கின்றன என்பதை இந்த தளம் தெரிந்து கொள்ள உதவுகிறது.
நிறுவனத்தின் பெயர் மற்றும் அதன் ஊழியர் எண்ணிக்கையுடன், நிறுவனம் தொடர்பான ஒற்றை வரி அறிமுகத்துடன், அது அளிக்கும் சலுகைகள் குறிச்சொற்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன. இதன் மீது கிளிக் செய்தால் மேலதிக விவரங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.
உதாரணமாக பேஸ்கேம்ப் நிறுவனம், மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு, ஊதியம் கொண்ட விடுமுறை, செல்லப்பிராணி காப்பீடு, ஓய்வூதிய திட்டம், கோடை விடுமுறை உள்ளிட்ட சலுகைகளை அளிக்கிறது. ஹாட்ஜார் நிறுவனம் இல்ல-அலுவலக்த்திற்காக 4,000 டாலர் பட்ஜெட் அளிக்கிறது. 2,000 டாலர் ஆண்டு விடுமுறை அளிக்கிறது.
இப்படி பல்வேறு நிறுவனங்கள், ஊழியர்களுக்கு அளிக்கும் சலுகைகளை இந்த தளம் பட்டியலிடுகிறது.
இந்த பணி நலன்களை எல்லாம் பார்த்தால் வியப்பாகவும், பொறாமையாகவும் கூட இருக்கிறது. அதைவிட முக்கியமாக, பணி நலன் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது.
நிச்சயம், வேலையில் இருப்பவர்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கும், குறிப்பாக இல்ல பணி வாய்ப்பை நாடுபவர்களுக்கு, வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து என்ன எல்லாம் எதிர்பார்க்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்துகிறது.
பெரும்பாலும் தொழில்நுட்ப நிறுவனங்களே இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன என்றாலும், எந்த ஒரு நிறுவனத்திடம் இருந்தும், வீட்டில் இருந்தே பணியாற்றுபவர்களுக்கு அது அளிக்கும் சலுகைகள் என்ன என்பதை உரிமையுடன் தேடிப்பார்க்கும் வேட்கையை இந்த தளம் அளிக்கிறது.
வீட்டில் இருந்தே பணியாற்றும் போக்கு நிறுவனங்களுக்கு அளிக்கும் சாதக பாதகங்கள் பற்றி பரவலாக விவாதிக்கப்படும் நிலையில், ஊழியர் நோக்கில் இந்த போக்கை அணுகுகிறது ஆபிஸ்ஃபிரி இணையதளம்.