கிள்ளிக்கொடுக்க ஒரு செயலி
இப்போது நாம் பார்க்க இருக்கும் செயலி அமெரிக்காவை மையமாக கொண்டது என்றாலும், அதன் உன்னதமான நோக்கத்திற்காகவும், அந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள அருமையான வழிக்காகவும் இந்த செயலியை நாமும் அறிந்து கொள்வது ஊக்கம் அளிப்பதாக அமையும்.
முதலில் அந்த செயலியின் நோக்கத்தை பார்க்கலாம். மக்கள் நலனுக்காக செயல்பட்டுக்கொண்டிருக்கும், என்.ஜி.ஓ என குறிப்பிடப்படும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டித்தருவதற்காக உருவாக்கப்பட்டுள்ள செயலி இது.
தொண்டு நிறுவனங்களையும், அவற்றுக்கு நிதி அளிக்கத்தயாராக இருப்பவர்களையும் இணைக்கும் பாலமாக செயல்படும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, நல்ல நோக்கத்திற்காக செயல்பட்டு வரும் அமைப்புகளுக்கு நிதி அளிக்க விரும்புகிறவர்கள் இந்த செயலி வழியே நிதி அளிக்கலாம். அள்ளிக்கொடுக்க வேண்டும் என்றில்லை, கிள்ளிக்கொடுத்தாலும் போதும்.
அதே நேரத்தில், தன்னார்வ அமைப்புகள் இந்த செயலி மூலம் தங்கள் செயல்பாடுகளை பகிர்ந்து கொண்டு, ஆர்வம் உள்ளவர்கள் நிதி அளிக்க வழி செய்து கொள்ளலாம்.
இந்த இணைப்பு பால பணியை இந்த செயலி நிறைவேற்றும் விதம் தான் சுவாரஸ்யமானது. இப்போது இணையத்தில் பிரபலமான போக்காக இருக்கும் குறும் வீடியோ வாயிலாக இதை செய்கிறது இந்த செயலி. அந்த வகையில், நிதி திரட்டுவதற்கான வீடியோ வழி உரையாடல் சமூக ஊடக செயலியாக இது அமைகிறது.
மக்கள் நலப்பணியில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வ அமைப்புகள் இந்த செயலியில் பதிவு செய்து கொண்டு தங்களைப்பற்றி தெரிவிக்கலாம். ஆனால் வழக்கமான பாணியில் தகவல்களை பதிவு செய்வதற்கு பதில், தொண்டு அமைப்பு நிர்வாகிகள், குறும் வீடியோ பதிவுகள் மூலம் தங்கள் நோக்கம், செயல்பாடுகளை பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த வீடியோ பதிவுகளை பார்க்கும் உறுப்பினர்கள், தொடர்புடைய அமைப்பின் நோக்கம், செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டால், அதற்கு நிதி உதவி அளிக்கலாம். மேலும் தொடர்ந்து அந்த அமைப்பின் செயல்பாடுகள், முன்னேற்றம் குறித்த தகவல்களை வீடியோ வடிவில் பெறலாம்.
களப்பணியாற்றும் தொண்டு நிறுவனங்கள், தங்கள் செயல்பாடுகளை வீடியோ வடிவில் பகிர்ந்து கொள்வது உறுப்பினர்கள் அவற்றின் பணிகளை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். அதே நேரத்தில், தொண்டு நிறுவனங்களும் களப்பணியை எளிதாக காட்சி வடிவில் பகிர்ந்து கொள்ளலாம். தொடர்ந்து வீடியோ வழியே உரையாடலாம்.
உதவும் நோக்கம் கொண்டவர்கள், தகுதியுடைய மற்றும் உதவி தேவைப்படும் அமைப்புகளை கண்டறிய இந்த செயலி வழி செய்யும்.
தொண்டு நிறுவனங்கள், நிதி திரட்டுவதிலேயே பெரும்பாலான நேரத்தை செலவிட நேர்வதை நேரடியாக தெரிந்து கொண்ட அனுபவத்தின் அடிப்படையில், நிதி திரட்டுவதற்கான எளிய மேடையாக இந்த செயலியை உருவாக்கியுள்ளதாக, செயலியின் அறிமுக பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் உதவும் உறுப்பினர்களுக்கு, சலுகை புள்ளிகள், பரிசு கூப்பன்கள், பிரத்யேக அனுமதிகள் போன்றவை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்களும் இதில் பங்கேற்க வழி செய்யப்பட்டுள்ளது.
ஆக, நிதி அளிக்கும் செயல்பாட்டை சமூக ஊடகம் சார்ந்த செயல்பாடாக மாற்றி தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள அனுபவத்தை அளிக்க வல்ல புதுமையான செயலியாக இது தோன்றுகிறது. செயலியின் பெயர் மற்றும் இணைய முகவரி: https://dandi.io/