செய்திகளுக்கான தேடியந்திரம்
இணையத்தில் செய்திகளை தேடுவது என்றால், கூகுளை தான் நாட வேண்டும் என்றில்லை: கூகுள் செய்திகளை ( https://news.google.com/topstories?hl=en-IN&gl=IN&ceid=IN:en) நாட வேண்டும் என்றில்லை. செய்திகளுக்கு என்று பிரத்யேகமாக இருக்கும் தேடியந்திரங்களை நாடலாம். இதற்கான உதாரணம் தேவை எனில், 1ஸ்ட் ஹெட்லைன்ஸ்.காம் (https://www.1stheadlines.com/index.htm ) தேடியந்திரத்தை கூறலாம்.
இந்த தளம் செய்திகளை தெரிந்து கொள்வதற்கான இடமாக இருப்பதோடு, செய்திகளுக்கான தேடல் சேவையும் அளிக்கிறது.
இதன் முகப்பு பக்கத்தில் வரிசையாக அன்றைய செய்திகளை பார்க்கலாம். ஒரு தலைப்புடன் செய்திக்கான இணைப்புடன் இந்த பட்டியல் அமைந்துள்ளது.
ஒரு பறவை பார்வையாக அன்றைய செய்திகளை நோக்கிவிட்டு, விரும்பிய செய்தியை கிளிக் செய்து வாசிக்கலாம். இது தவிர, செய்திகள் தனித்தனி தலைப்புகளில் பக்கவாட்டில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது கொரோனா வைரஸ் தனியே வகைப்படுத்தப்பட்டு முதலில் உள்ளது. மற்றப்படி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு வகைகளை காணலாம்.
வழக்கமாக செய்தி தளங்களில் பார்க்க கூடிய வகைகளை விட வித்தியசமான தலைப்புகளை இதில் காணலாம். பொதுவான செய்தி வகைகள் தவிர, அமெரிக்காவுக்கான செய்திகளும் தனியே இடம்பெற்றுள்ளன. இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான செய்திகளையும் தனியே கிளிக் செய்து பார்க்கலாம்.
எளிமையான இடைமுகத்துடன் எளிதான சேவையாக இருக்கிறது. விளம்பர ஊடுருவல்கள் மட்டும் தான் ஒரு நெருடலாக அமைகிறது. முயற்சித்துப்பாருங்கள்.
-