இந்திய பட்ஜெட் உங்கள் கையில்
உண்மையில் பட்ஜெட் என்பது நம் கையில் இருக்க வேண்டும். வீட்டு பட்ஜெட் மட்டும் அல்ல, நாட்டு பட்ஜெட்டும் தான். நாட்டு பட்ஜெட் நம் கையில் இருக்க வேண்டும் என்றால், பட்ஜெட் தொடர்பான தகவல்கள் அனைத்தும் நாம் எளிதாக தெரிந்து கொள்ள வழி இருக்க வேண்டும். அதைவிட முக்கியமாக பட்ஜெட் உருவாக்கத்தில் நம் கருத்துகளை தெரிவிப்பதற்கான வழி இருக்க வேண்டும்.
இதற்கு முதலில் பட்ஜெட் தொடர்பான விஷங்களில் பொதுமக்கள் ஆர்வமும், அக்கரையும் காட்ட வேண்டும். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தினத்தில், நாளிதழ்கள், அல்லது தொலைக்காட்சிகளை பார்த்து, வரிக்குறைப்பு அல்லது வரி விதிப்புகள் பற்றி மேலோட்டமாக தெரிந்து கொள்வதை தாண்டி, பட்ஜெட்டின் நோக்கம், அதற்கான திட்டங்கள், வழிமுறைகள் குறித்து கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த ஆர்வம் எனக்கும் இருக்கிறது, ஆனால் அதற்கான வழி இல்லையே என நினைதால், ஓபன்பட்ஜெட்ஸ் இந்தியா.ஆர்க் (https://openbudgetsindia.org/) உங்களுக்கு உதவியாக இருக்கும்.
இந்த தளத்தில் இருக்கும் ஓபன் எனும் வார்த்தையை கொண்டே இதன் நோக்கத்தை எளிதாக புரிந்து கொள்ளலாம். ஓபன் என்பது பொதுவாக திறந்தவெளி தன்மையை குறிக்கும். இணையத்தை பொருத்தவரை ஓபன் சோர்ஸ் எனும் திறவுமூலம் கோட்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் கூட்டு முயற்சியின் அடையாளமாக அமைகிறது.
இந்த இணையதளமும், பட்ஜெட் தகவல்கள் தொடர்பான திறந்தவெளி தன்மை மற்றும் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
“இந்திய பட்ஜெட்களை திறந்த வெளி தன்மை கொண்டதாக, பயன்பாடு மிக்கதாக, எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதாக” ஆக்குவதே நோக்கம் என இந்த தளத்தின் முகப்பு பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கேற்ப இந்த தளம் பட்ஜெட் தொடர்பான ஆவணங்களை எளிதாக அணுக வழி செய்கிறது. எளிதாக அணுகுவது என்பது வேறு எளிதாக புரிந்து கொள்ள வழி செய்வது என்பது வேறு. பட்ஜெட் தகவல்கள் பொருளாதாரம் புரியாதவர்களுக்கு அலுப்பையும், களைப்பையும் அளிக்கலாம் என்பதால், பட்ஜெட் விவரங்களை சாமானியர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில், தகவல் சித்திரங்களாகவும் வழங்குகிறது.
பட்ஜெட் தொடர்பான தரவுகளை அலசி ஆராயும் வகையில் அவற்றை தரவு பட்டியாக அளிக்கிறது. இவ்வாறு மத்திய பட்ஜெட், மாநில பட்ஜெட்கள் மற்றும் உள்ளாட்சி பட்ஜெட்களையும் அணுகலாம். குழப்பத்தை ஏற்படுத்தாத எளிமையான இடைமுகம் உள்ளது.
ஆய்வு நோக்கில் பட்ஜெட்டை அணுகுபவர்களுக்கு இந்த தளத்தின் தரவு பட்டியல் மிகவும் உதவியாக இருக்கும்.
அதே நேரத்தில் சாமானியர்கள், பட்ஜெட் பற்றி புரிந்து கொள்ளும் வகையில், பட்ஜெட்டின் அடிப்படை அம்சங்களும் விளக்கப்பட்டுள்ளது. வீட்டு பட்ஜெட்டுக்கும், நாட்டு பட்ஜெட்டுக்கும் என்ன வேறுபாடு என்பது உள்ளிட்ட விளக்கங்களை இதில் காணலாம்.
‘ வீட்டுக்கு பட்ஜெட் போடும் போது, செலவுகளை சமாளிக்க ஓரளவுக்கு மேல் கடன் வாங்குவது சாத்தியம் இல்லை, ஆனால் நாட்டு பட்ஜெட்டில் செலவுகளை சமாளிக்க நிதி திரட்ட அரசுக்கு அநேக வழிகள் இருக்கின்றன என்பது இரு பட்ஜெட்டுக்குமான வேறுபாடுகளில் முக்கியமானது.
பட்ஜெட் செயல்பாடுகளை வெளிப்படையானதாகவும், பங்கேற்பு தன்மை மிக்கதாகவும் ஆக்கும் இது போன்ற இணையதளம் நிச்சயம் தேவை. Centre for Budget and Governance Accountability (CBGA) எனும் அமைப்பின் முயற்சியில் தனிநபர்களும், அமைப்புகளும் இணைந்து இந்த தளத்தை அமைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் இன்னும் மேம்பாடு தேவை என்றாலும், இதன் அடிப்படை நோக்கத்திற்காகவே மனதார வரவேற்கலாம்.
*
நிற்க, மத்திய பட்ஜெட் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை தெரிந்து கொள்ள அரசின் இந்தியபட்ஜெட் (https://www.indiabudget.gov.in/ ) தளம் இருக்கிறது. பட்ஜெட் தாக்கல் நிகழ்வு சார்ந்த அச்சு ஊடக தகவல்களின் இணையவடிவாக இந்த தளம் இருந்தாலும், பட்ஜெட் ஆவணங்களை பெற விரும்பினால் அதற்கு வழி செய்கிறது.
*
பட்ஜெட் செயலி: இந்த ஆண்டு பட்ஜெட்டிற்கு என்று பிரத்யேகமான செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக, அச்சு வடிவில் பட்ஜெட் வழங்கப்படாது என்பதால், இந்த செயலியில் பட்ஜெட் ஆவணங்களையும், தகவல்களையும் டிஜிட்டல் வடிவில் பெறலாம். செயலியை தரவிறக்கம் செய்ய: https://www.indiabudget.gov.in/downloadapp.php