செய்திகளை அறிய புதிய வழி

பிரீவ் (https://breave.com/ ) எனும் புதிய செய்திகளுக்கான மின் மடல் சேவை அறிமுகம் ஆகியுள்ளது. தினசரி செய்திகளை மின்மடல் வடிவில் தொகுத்தளிக்கும் சேவைகள் ஏற்கனவே பல இருந்தாலும், பீரிவ் கவனிக்கத்தகதாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், இந்த சேவையின் எளிமை மற்றும் செய்திகளை தொகுத்தளிப்பதில் அதன்புதுமையான அணுகுமுறை.

எளிமை அம்சத்தை பீரிவ் தனது முகப்பு பக்கத்திலும் குறிப்பிடுகிறது. செய்திகளை எளிமையாக்கி தருவதோடு, சார்பு நீக்கி தொகுத்தளிப்பதாகவும் தெரிவிக்கிறது.

எளிமையான இதன் முகப்பு பக்கத்தில், வார முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.

செய்திகளை தொகுத்தளிப்பதில் பீரிவ் அடிப்படையில் ஒரு திரட்டியாக செயல்படுகிறது. அதாவது, எண்ணற்ற செய்திதளங்களில் இருந்து, குறிப்பிட்ட தலைப்பிலான செய்திகளை திரட்டித்தருகிறது. ஆனால், இதை வழக்கமான பட்டியல் பாணியில் அளிக்காமல் நேர்த்தியாக செய்கிறது.

பல்வேறு தளங்களில் இருந்து செய்திகளை திரட்டினாலும், அவற்றை தொகுப்பாக பட்டியலிட்டு வாசகர்கள் தேர்வு செய்து வாசித்துக்கொள்ளட்டும் என விட்டுவிடாமல், அந்த செய்திகளின் சாரம்ப்சத்தை அழகாக தொகுத்தளிக்கிறது.

செய்திகளின் சாரம்சம் தலைப்பு வடிவில் சுருக்கமாக அளிக்கப்படுவதோடு, அவற்றில் உள்ள முக்கிய அம்சங்கள் ஒற்றை வரியாக பட்டியலிடப்படுகின்றன. ஒரு செய்தி தொடர்பான பல்வேறு தளங்களின் வடிவங்களை படிக்காமலேயே, அந்த செய்தி தொடர்பான பல்வேறு கோணங்களை புரிந்து கொள்ள இது உதவுகிறது.

இதன் கீழ், குறிப்பிட்ட செய்திக்கான மூல தளங்களின் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல் தேவை எனில் மூல தளங்களுக்கு சென்று வாசித்துக்கொள்ளலாம்.

அரசியல், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆகிய மூன்று பிரிவுகளில் செய்திகள் தொகுத்தளிக்கப்படுகின்றன. இந்த செய்திகளை இமெயில் வடிவில் தேடிவரச்செய்ய இந்த செய்தி மின்மடலில் இணையலாம்.

அப்படியே இணைய மலர் மின்மடலையும் உங்கள் நட்பு வட்டத்தில் பரிந்துரைக்கலாம்!