தானியங்கி கார்கள் எப்போது வரும்?
தானியங்கி கார்கள் இப்போதைக்கு ஆய்வு நிலையில் தான் உள்ளன. எனவே, இவை எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பதை தீர்மானமாக சொல்ல முடியாது. ஆனால், இந்த கேள்விக்கான பதிலை கணிக்க, தானியங்கி கார்கள் தொடர்பான ஆய்வு எந்த நிலையில் இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். இதற்கு, இந்த துறையில் நடைபெற்றும் வரும் ஆய்வுகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
தானியங்கி கார்கள் ஆய்வுகளை பின் தொடர வேண்டும் எனில், இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால், இந்த பட்டியலுக்காக நீங்கள் இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாட வேண்டாம்! - இத்தகைய பட்டியலை அளிப்பதற்கு என்றே ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
செல்ப்டிரைவிங்.எப்.ஒய்.ஐ (https://selfdriving.fyi/ ) எனும் அந்த இணையதளம், தானியங்கி கார் ஆய்வில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை பட்டியலிட்டுள்ளது.
தானியங்கி கார் ஆய்வில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பெயர் குறிப்பிடப்பட்டு, அவை ஈடுபட்டுள்ள ஆய்வை உணர்த்தும் வகையில், குறிப்புச்சொற்களும் இணைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, வாயேஜ் எனும் நிறுவனம் ரோபோடாக்சி ( robotaxi) ஆய்வில் ஈடுபட்டுள்ளது. அமேசான் ஆதரவு பெற்ற அரோரா நிறுவனம் டிரக் சேவை (trucking ) தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
இப்படி தானியங்கி கார் ஆய்வில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களைப்பற்றி ஒரு பறவை பார்வையாக அறிந்து கொள்ள இந்த பட்டியல் உதவுகிறது. சீனாவின் கூகுள் எனப்படும் பெய்டுவின் தானியங்கி கார் ஆய்வு உள்ளிட்ட தகவலை இந்த தளத்தில் அறியலாம்.
குறிப்பிட்ட நிறுவனங்கள் தொடர்பாக மேலும் அறிய, அவற்றின் இணையதள முகவரியும் தனிப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
பட்டியல் இணையதளம் தான். ஆனால் வெறும் பட்டியலாக அல்லாமல், தானியங்கி கார் ஆய்வில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த துறையின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ள உதவும் கையேடு போல, அருமையாக இந்த பட்டியல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பி.கு: இந்த தளம் போலவே அதன் இணைய முகவரியும் புதுமையாக இருக்கிறதே, அதென்ன எப்.ஒய்.ஐ என உங்களுக்கு சந்தேகம் எழலாம். எப்.ஒய்.ஐ என்பது, விரிவாகி கொண்டே இருக்கும் இணைய முகவரிகளில் புதிதாக இணைந்திருப்பது. உங்கள் தகவலுக்கு என்பதை இது குறிக்கிறது.- "For Your Information". "FYI" . இந்த வகையான தகவல்களை அளிக்கும் இணையதளங்கள் இந்த டொமைன் முகவரியை பின்பற்றுகின்றன.