இணையத்தின் புத்தக கடை
இணையத்தின் புத்தக கடை என்றதும் அமேசான்.காம் நினைவுக்கு வரும். ஆனால், ஆல்மெண்டா ( http://olmenta.altervista.org/) இணையதளத்தை அறிமுகம் செய்து கொண்டால் இந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளத்தோன்றும். ஏனெனில், ஒரு புத்தக கடையை இணையத்தில் பார்க்க முடிந்தால் எப்படி இருக்குமோ அத்தகைய எண்ணத்தை அளிக்கும் வகையில், ஆல்மெண்டா இணையதளம் அமைந்துள்ளது.
அமேசானுடன் ஒப்பிடுவதால் ஆல்மெண்டா பற்றி பெரிதாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம். இது மிக எளிமையான இணையதளம். இ-காமர்ஸ் ஜாம்பவனான அமேசான் பக்கத்தில் கூட இந்த தளத்தால் நிற்க முடியாது. ஆனாலும் இந்த தளத்தில் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. எந்த புத்தக பிரியரும் இந்த தளத்தை பார்த்தால் நிச்சயம் ஈர்க்கப்படுவார்.
அப்படி என்ன இந்த தளத்தில் இருக்கிறது என்றால், நீங்கள் அடுத்து படிக்க கூடிய புத்தகங்களை இந்த தளம் பட்டியலிடுகிறது.
நிற்க, அடுத்து என்ன வாசிப்பது? எனும் கேள்விக்கு அழகாக பதில் அளித்து புதிய புத்தகங்களை பரிந்துரைக்கும் அருமையான இணையதளங்கள் பல இருக்கின்றன. அவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் ஆல்மண்டா அமைந்திருப்பதாக சொல்ல முடியாது.
ஆனால், ஆல்மண்டா மிக எளிமையாக, நேரடியாக நீங்கள் அடுத்து வாசிக்க கூடிய புத்தகங்களை முன்வைக்கிறது. இதன் முகப்பு பக்கத்தில் பார்த்தால், வரிசையாக புதிய புத்தகங்களின் அட்டைப்படம் இடம்பெற்றிருக்கும். இந்த புத்தகங்கள் கவிதை, புனைவு, வர்த்தகம், அபுனைவு உள்ளிட்ட தலைப்புகளிலும் வகைப்பட்டுத்தப்பட்டுள்ளன.
அவ்வளவு தான், தளத்தில் வேறு எந்த அம்சமும் கிடையாது. புத்தக அட்டைப்படங்களை பார்க்கலாம். ஏதேனும் புத்தகம் பிடித்திருந்தால், அதன் அட்டைப்படத்தை கிளிக் செய்தால், புத்தகம் தொடர்பான சுருக்கமான அறிமுகத்தை பார்க்கலாம். புத்தகத்தை வாங்குவதற்கான இணைப்பும் இருக்கிறது. அவ்வளவு தான்.
மற்ற புத்தக பரிந்துரை தளங்கள் போல, உங்களுக்கு பிடித்தமான அல்லது நீங்கள் வாசித்த புத்தகங்கள் அடிப்படையிலான பரிந்துரைகள் எதுவும் கிடையாது. இந்த தளத்தில், புத்தகங்களை பார்க்கலாம். அவற்றில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம். அந்த வகையில் ஒரு புத்தக கடையில் நுழைந்தால், வரிசையாக புத்தகங்களை பார்க்க முடிவது போலவே இந்த தளமும் அமைந்துள்ளது.
அதிக அம்சங்கள் இல்லாத இதன் எளிமைக்காகவே புத்தக பிரியர்கள் இந்த தளத்தை பயன்படுத்திப்பார்க்கலாம்.