ஏ.ஐ., செய்திகளுக்கான இணையதளம் !
’ஏ.ஐ., தருணம்’ - தலைப்பு நன்றாக இருக்கிறதா?
’தரவுகள் ஆய்வு தொடர்பாக ஏ.ஐ., உருவாக்கிய கவிதை’ - இந்த தலைப்பே நவீன கவிதை போல இருக்கிறதா?
’மெக்கின்சியில் நான் ஏன் தரவுகள் விஞ்ஞானியாக சேர்ந்தேன்?’ - இந்த தலைப்பும் கவர்ந்திழுக்கிறதா?
இவை எல்லாமே, ஏ.ஐ., தொடர்பான செய்திகளை திரட்டித்தரும் புதிய செய்தி தளமான ’ஆல் ஏஐ நியூஸ்’ ( https://allainews.com/) தளத்தின் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ளன செய்திகள்.
ஆல் ஏஐ நியூஸ் செய்தி தளம் திரட்டி வகையை சேர்ந்தது என்றால் அதி நவீன செய்தி தளம் என்று சொல்லலாம். ஏனெனில் இணைய உலகின் இப்போதைய மற்றும் எதிர்கால போக்கான ஏ.ஐ மற்றும் ஏ.ஐ சார்ந்த இன்னும் பிற துறைகள் தொடர்பான அண்மை செய்திகளை இந்த தளம் தொகுத்தளிக்கிறது.
செய்திகள் மட்டும் அல்லாமல், பாட்காஸ்டிங் எனப்படும் ஒலி கோப்புகளை வழங்குவதோடு வீடியோக்களையும் வழங்குகிறது. எல்லாமே ஏ.ஐ தொடர்பானவை. ஏ.ஐ. தொடர்பான செய்திகளயும், கட்டுரைகளையும் வெளியிடும் தளங்களில் இருந்து புதிய செய்திகளை தொகுத்தளிக்கிறது.
டுவேர்ட்ஸ் டேட்டா சயின்ஸ், வென்சர் பீட் உள்ளிட்ட ஏ.ஐ சார்ந்த தளங்கள் மற்றும் வலைப்பதிவுகளில் வெளியாகும் ஏ.ஐ செய்திகளை இந்த தளத்தில் ஒரே இடத்தில் வாசிக்கலாம். தரவுகள் ஆய்வு, கம்ப்யூட்டர் விஷன், டிஜிட்டல் டிவின்ஸ், டேட்டாசெட் என செய்திகளுடன் இடம்பெறும் குறிச்சொற்களை பார்த்தாலே ஏ.ஐ செய்தி உலகம் எப்படி பரந்து விரிந்திருக்கிறது என புரிந்து கொள்ளலாம்.
செய்திகள் தவிர, ஏ.ஐ துறை வேலைவாய்ப்புகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.
செய்தி துறையில் இருப்பவர்களும், ஏ.ஐ தொடர்பாக ஆர்வம் கொண்டவர்களும் தவறாமல் பின் தொடர வேண்டிய இணையதளம்.