இணைய பிழை பக்க பொக்கிஷம்
இணைய உலாவலில் பிழை பக்கத்தை நீங்கள் அடிக்கடி எதிர்கொள்ளலாம். நீங்கள் தேடி வந்த பக்கம் இல்லை என்பது தான் இதன் பொருள். தொலைக்காட்சி காலத்து தடங்களுக்கு வருந்துகிறோம் அறிவிப்பை போன்றதாக இதை கருதலாம்.
ஆனால், தொலைக்காட்சி தடங்களுக்கு வருந்துகிறோம் அறிவிப்புக்கும், ’404 எரர் பேஜ்’ எனப்படும் இணைய பிழை பக்கங்களுக்கும் ஒரு சின்ன வேறுபாடு இருக்கிறது. இணைய பிழை பக்கங்கள் கலை தன்மை கொண்டதாகவும் அமையலாம் என்பது தான் அது.
தேடி வந்த இணைய பக்கம் இல்லை என சொல்வது அவசியம் தான் என்றாலும் அத்துடன் கடமை முடிந்தது என ஒதுங்கி கொண்டால் பயனர்கள் வெறுப்பாகி விடுவார்கள். அதனால் தான், பயனர்களின் ஏமாற்றத்தை குறைக்கும் அளவுக்கு , பிழை பக்கத்தை புதுமையாக வடிவமைப்பதில் கவனம் செலுத்துகின்றனர்.
உதாரணத்திற்கு, 99 டிசைன்ஸ் இணையதளத்தின் பிழை பக்கம், கண்கலை மூடியபடி தலையை தூக்கி காட்சி அளிக்கும் நாயின் படம் அருகே, வழியை தொலைத்து விட்டீர்களா? எனும் வாசகம் தோன்றுகிறது. அதன் கீழ், சின்னதாக 404 பிழை செய்தி காணப்படுகிறது.
இணைய பிழை பக்க புதுமைகளுக்கு இன்னும் சுவாரஸ்யமான உதாரணங்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. இவற்றை தொகுத்தளிக்கும் இணையதளங்களும் கூட இருக்கின்றன. அந்த வகையில், அமைந்துள்ளது 404 பேஜஸ்.எக்ஸ்.ஒய்.இசட் (https://www.404pages.xyz/ ) இணையதளம்.
இணையத்தில் உள்ள சிறந்த பிழை பக்க வடிவமைப்புகளை தொகுத்தளிப்பதாக கூறும் இந்த தளம், இத்தகைய பிழை பக்கங்களை ஒவ்வொன்றாக பார்க்க வழி செய்கிறது.
பிரதானமாக வடிவமைப்பாளர்களுக்கான என்றாலும், இணையத்தில் சுவாரஸ்யம் நாடுபவர்களும் பயன்படுத்திப்பார்க்கலாம்.
-
பி.கு: 404 பேஜஸ் இணையதளத்தை துணை தளம் என்று வர்ணிக்கலாம். அதாவது, பிரதான நோக்கம் கொண்ட வேறு ஒரு தளத்திற்காக அமைக்கப்பட்ட துணை தளம். குரோமைசாஸ் (https://www.growmysaas.co/ ) எனும் இணையதளம், மென்பொருளை ஒரு சேவையாக வழங்கி வரும் நிறுவனங்களுக்கான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த தளத்தை நோக்கி பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில், 404 பேஜஸ் இணையதளத்தை உருவாக்கியுள்ளது. அந்த வகையில் விளம்பர நோக்கிலான தளம் என்றாலும், அந்த தன்மை தெரியாத வகையில், சுவாரஸ்யம் அளிக்கும் வகையிலும், தன்னளவில் பயனுள்ளதாக தோன்றும் வகையிலும் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது தான் சிறப்பு. இதில் அடிக்குறிப்பு போல கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் தான், மூல தளத்தின் குறிப்பு இடம் பெறுகிறது.
பி.கு 2: இணைய பிழை பக்கம் பற்றி மேலும் அறிய விரும்பினால் இந்த பதிவு.