இது நீளமான இணையதளம்
இணையத்தில் முகவரி சுருக்க சேவைகள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இணைய இணைப்புகளை சுட்டிக்காட்ட விரும்பும் போது அவற்றின் முகவரி நீளமாக இருப்பதை சுருக்கி பகிர வழி செய்யும் சேவையாக இவை அமைகின்றன.
சமூக ஊடக யுகத்தில் இணைய முகவரி சுருக்க சேவைகளின் முக்கியத்துவம் நன்றாக உணரப்பட்டாலும், இது தொடர்பாக விவாதங்களும் இருக்கவே செய்கின்றன.
ஆனால், முகவரி சுருக்க சேவை போலவே முகவரி நீட்டிப்பு சேவை தேவையா? என்பது சுவாரஸ்யமான கேள்வி.
இணைய இணைப்புகள் மிக நீளமாக இருக்கும் போது அவற்றை சுருக்குவதற்கான அவசியத்தை எளிதாக புரிந்து கொள்ளலாம். ஆனால், ஒரு இணையதள முகவரியை நீளமாக மாற்றுவதற்கான தேவை என்ன?
புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் நீளமான இணைய முகவரிக்கான இணையதளத்தை (https://aaa.aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa.com/ ) பார்க்கும் போது இது போன்ற கேள்விகள் எழுகின்றன.
இந்த தளத்தின் முகவரியை பார்க்கும் போது, இத்தனை நீளமான முகவரியா என கேடக்கதோன்றுகிறதா? அதோடு, முகவரி முழுவதும் ஆங்கில ஏ எழுத்துக்களாக நீண்டு இருப்பதை பார்க்க முடிகிறதா?
இதே முறையில் நீங்கள் சமர்பிக்கும் இணையதள முகவரியையும் நீளமாக மாற்றித்தரும் சேவையை இந்த தளம் வழங்குகிறது.
உங்கள் இணைய முகவரிகள் மிகவும் சுருக்கமாக இருப்பதாக நினைக்கிறீர்களா? கவலை வேண்டாம், உங்கள் முகவரியை நாங்கள் நீளமாக மாற்றித்தருகிறோம் என இந்த தளம் குறிப்பிடுகிறது. இப்படி நீட்டிக்கப்பட்ட முகவரிகளை பார்த்தால், உங்கள் காதலியும், நண்பர்களும் அசந்து விடுவார்கள் என்றும் இந்த தளம் குறிப்பிடுகிறது.
ஆக, முகவரி சுருக்க சேவையை பகடி செய்து உருவாக்கப்பட்ட சேவை இது என எளிதாக புரிந்து கொள்ளலாம்.
அதற்காக, முகவரி சுருக்க சேவை கருத்தாக்கத்தை விமர்சிக்கும் நோக்கம் கொண்ட சேவை என்று கருத வேண்டியதில்லை. பகடி என்பதும் ஒரு உருவாக்கம் தானே. அந்த வகையில், கோடிங் திறனை வைத்துக்கொண்டு முகவரி சுருக்க கருத்தாக்கத்தை தலைகீழாக்கி இந்த தளத்தை உருவாக்கியிருக்கிறார் பியாரோ (https://www.piemadd.com/ ) எனும் மென்பொருளாளர்.
இதற்கான சுவாரஸ்யமான தொழில்நுட்ப விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார்.
இணைய சேவைகள் கண்டறிதல் தளமான பிராடக்ட் ஹண்ட் தளத்தில் இந்த அறிமுகம் தொடர்பான விவாதமும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்த சேவையின் பகடி தன்மையை பலரும் புரிந்து கொண்டிருந்தாலும், குறுகிய காலத்திற்கு பார்க்க வேண்டிய தளங்களை இந்த முறையில் பகிர்ந்து கொண்டால், எட்டிப்பார்க்கும் மற்றவர்கள் அதன் முகவரியை தெரிந்து கொள்ள முடியாத வகையிலும் இதை பயன்படுத்தலாம் என்றும் ஒருவர் யோசனை தெரிவித்திருக்கிறார்.
அட நான் கூட இதை யோசிக்கவில்லையே என சேவையை உருவாக்கியவர் இதற்கு பதில் அளித்திருக்கிறார்.