யூடியூப் வீடியோக்களை இப்படியும் பகிரலாம்!
அடிக்குறிப்பிடுவது நல்ல பழக்கம். புத்தகங்களை வாசிக்கும் போது, மனதில் தோன்றும் முக்கிய விஷயங்களை எழுதி வைத்துக்கொள்வது பின்னர் நினைவில் கொள்ள உதவியாக இருக்கும். ஆனால், புத்தக பக்கத்தில் இப்படி குறிப்புகளை எழுதி வைத்தால், அதன் தோற்றப்பொலிவு பாதிக்கப்படலாம். மின்னூல்களில் இந்த பிரச்சனை இல்லை. அடிக்குறிப்பு மற்றும் உப தகவல்களை மெலெழும் இணைப்புகளாக ( ஹைபர் லிங்) பார்க்கலாம்.
இணையதளங்களிலும் இப்படி அடிக்குறிப்பிட்டு சேமித்து வைக்கலாம். இதற்கான இணைய சேவைகளும் இருக்கின்றன. இப்போது நாம் பார்க்கப்போவது, இதே முறையில் யூடியூப் வீடியோக்களில் அடிக்குறிப்பிட்டு பகிர்ந்து கொள்ள உதவும் புதிய இணைய சேவையை.
அனடேட்.டிவி ( https://annotate.tv/) எனும் இந்த இணைய சேவை, நீங்கள் பார்த்து ரசித்த யூடியூப் வீடியோக்களை அவற்றின் முக்கிய தருணங்களை அடிக்குறிப்பிட்டு பகிர வழி செய்கிறது.
அடிக்கடி வீடியோ பகிர்பவர்களுக்கு இது போன்ற ஒரு சேவையின் தேவை எளிதாக புரியும். பல காரணங்களுக்காக நாம் வீடியோக்களை பகிர்கிறோம். இவ்வாறு பகிரும் போது, குறிப்பிட்ட அந்த வீடியோவை எதற்காக பகிர்கிறோம் அல்லது அதை எதற்காக பார்க்க வேண்டும் என்பதை குறிப்பிடுவது அவசியம். அது மட்டும் அல்ல, வீடியோவில் குறிப்பிட்ட தருணங்களை சுட்டிக்காட்ட முடிந்தாலும் நல்லது.
இதற்கு தீர்வாக வீடியோவின் குறிப்பிட்ட தருணத்தை மட்டும் வெட்டி அனுப்பலாம். மாறாக பயனுள்ள முழு வீடியோக்களை பகிரும் போது, அவற்றின் முக்கிய தருணங்களை குறிப்புகளாக சுட்டிக்காட்டுவது இன்னும் நல்லது. அதை தான் அனடேட்.டிவி தளம் செய்கிறது.
பகிர விரும்பும் யூடியூப் வீடியோ முகவரியை இந்த தளத்தில் சமர்பித்து, அதில் விரும்பும் இடத்தில் அடிக்குறிப்புகளை சேர்க்கலாம். பின்னர் அடிக்குறிப்புகள் கொண்ட வீடியோ இணைப்பை பெற்று நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
பல விதங்களில் இந்த சேவையை பயன்படுத்தலாம். மாணவர்கள், கல்வி நோக்கிலான வீடியோக்களை பார்வையிடும் போது, தொடர்புடைய குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்ளலாம்.
வீடியோ உருவாக்குனர்களும், தாங்கள் பேசும் விஷயம் தொடர்பான பிடிஎப் கோப்பு அல்லது இணைப்புகளை அடிக்குறிப்புகளாக பகிர்ந்து கொள்ளலாம்.
பயன்படுத்திப்பார்த்து சொல்லுங்கள்.