எளிமையான இணைய குறிப்பேடு
புதிய இணைய குறிப்பேடு சேவையான நியூம்நோட்ஸ் (https://neumnotes.com/) தளத்தை கொஞ்சம் திறந்த மனதுடன் நாட வேண்டும். குறிப்பெழுத உதவும் ஆன்லைன் நோட்பேடு ரகத்தைச்சேர்ந்த இந்த சேவையில் எந்த புதுமையும் இல்லை. இதில் குறிப்பெழுதலாம் அவ்வளவு தான்.
தளத்தின் இடப்பக்கத்தில் இருக்கும் சிறிய டிஜிட்டல் குறிப்பேட்டில் மனதில் உள்ள எண்ணங்களை அல்லது செய்ய வேண்டிய வேலைகளை டைப் செய்து கொள்ளலாம். வேண்டாம் எனில் டெலிட் செய்துவிடலாம். புதிய குறிப்பை எழுத வேண்டும் எனில், தளத்தின் மேல் பகுதியில் உள்ள கூட்டல் குறிப்பை சொடுக்கினால் புதிய டிஜிட்டல் குறிப்பேடு தோன்றும். இந்த தளத்தில் வேறு எந்த அம்சமும் கிடையாது. அம்சங்கள் இல்லாதது தான் இந்த சேவையின் சிறப்பு என அறிமுக பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ( தளத்தின் தோற்றத்தை டார்க் மோடுக்கு மாற்றிக்கொள்ளும் ஒற்றை வசதி மட்டும் இருக்கிறது).
மேம்பட்ட வசதிகள் கொண்ட இணைய குறிப்பேடுகள் தான் பல இருக்கிறனவே. இந்த சேவையை அதன் எளிமைக்காகவே ஆதரிக்கலாம். உறுப்பினராக பதிவு செய்ய வேண்டிய அவசியம் கூட இல்லாமல் எடுத்த எடுப்பில் இந்த சேவையை பயன்படுத்த துவங்கலாம்.
-
எளிமையிலும் வலிமை காட்டும் இணையதளம்
மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்பது போல, தோற்றத்திலும், வடிவமைப்பிலும் எளிமை கொண்டிருந்தாலும், செழுமையான அம்சங்களை கொண்ட இணைய குறிப்பேடாக ஈர்க்கிறது ஜாட்.எக்ஸ்.ஒய்.இசட் (https://jottt.xyz/ ).
எழுத்தாளர்களை கவரக்கூடிய கவனச்சிதறலுக்கு இடம் கொடுக்காத எளிமையான இணைய எழுதி சேவை போல, இந்த இணைய குறிப்பேடும் கவனச்சிதறல் இல்லாமல் குறிப்பெடுக்க மட்டும் வழி செய்யும் வகையில் மிக எளிமையாக இருக்கிறது.
இணையத்தில் உலாவும் போது குறிப்புகளை எழுதி வைக்க விரும்பினால், ஜாட்’ இணைய பலகையை அணுகி குறிப்பெழுத துவங்கிவிடலாம். முகப்பு பக்கத்தில் உள்ள புதிய எனும் பகுதியில் தலைப்பை குறிப்பிட்டு, நமக்கான குறிப்புகளை எழுத வேண்டும். அதன் பிறகு, புதிய தலைப்பின் கீழ், புதியதொரு குறிப்பை சேர்த்துக்கொள்ளலாம். ஏற்கனவே, உண்டாக்கிய குறிப்புகளில் தேடலாம். பயன்படுத்தி முடித்த குறிப்புகளை நீக்கிவிடலாம். எல்லாவற்றுக்கும் மேல், நம்முடைய குறிப்புகளை கிளவுட் முறையில் சேமித்து வைக்கலாம்.
எழுத்தாளர்கள், வலைப்பதிவாளர்கள், டெவலப்பர்கள் உள்ளிட்டோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
-