ஐந்து நிமிட பாடங்கள்
உலகின் மகத்தான ஐடியாக்களை எல்லாம் ஐந்து நிமிட சுருக்கங்களாக ஆடியோ பதிவாக கேட்க விருப்பமா? எனில், லிஸ்னபில் (https://listenable.io/ ) சேவை உங்களுக்கானது. சுய முன்னேற்றம், தகவல் தொடர்பு, ஆரோக்கியம், உளவியல், வேலைவாய்ப்பு என பல்வேறு தலைப்புகளில் இதில் பாடங்களை ஆடியோ வடிவில் கேட்கலாம். ஒவ்வொரு பாடமும் ஐந்து நிமிடங்கள் தான். வேறு ஏதேனும் வேலை பார்த்தபடியே இந்த பாடங்களை கேட்டு உங்கள் மேம்படுத்திக்கொள்ளலாம். இன்னும் நிறைய பாடங்கள் வர இருக்கிறதாம். ஆனால் ஒன்று இப்போதைக்கு ஐபோனுக்கான செயலி வடிவாக மட்டுமே அறிமுகம் ஆகியிருக்கிறது. ஆண்ட்ராய்டு வடிவிற்கு காத்திருக்க வேண்டும்.
--
சைபர்ஸ்பேஸ் பிரம்மா!
அமெரிக்க-கனடா எழுத்தாளரான வில்லியம் கிப்சன் (William Gibson ), அதிநவீன அறிவியல் புனை கதைகளுக்காக அறிப்படுபவர். இணையம் சார்ந்த மாய உலகை குறிக்க பரவலாக பயன்படுத்தப்படும் சைபர்ஸ்பேஸ் எனும் வார்த்தையை முதலில் அறிமுகம் செய்தது கிப்சன் தான். முதலில் ஒரு சிறுகதையில் இந்த வார்த்தையை அறிமுகம் செய்தவர். 1984 ல் வெளியான நியூரோமான்சர் ( Neuromancer ) நாவலில் இந்த கருத்தாக்கத்தை மேலும் பிரபலமாக்கினார். இந்த நாவலில், இணைய வளர்ச்சி பற்றி எல்லாம் கற்பனை செய்திருக்கிறார். தொழில்நுப்டமும், கம்ப்யூட்டர் வலைப்பின்னல்களும், மனித வாழ்க்கையுடன் பின்னி பிணைந்திருக்கும் எதிர்கால கதைகளை எழுதியிருப்பது தான் இவரது சிறப்பு என்கின்றனர்.
அறிவியல் புனைகதை பிரியர்களால் கொண்டாடப்படும் கிப்சன், இப்போது ’திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்பது போல, ஏஜென்சி (Agency ) எனும் புதிய நாவலுடன் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இந்த நாவலை முன்னிட்டு அளித்துள்ள பேட்டிகளில், ஏ.ஐ நுட்பம் பற்றி விரிவாக பேசியிருக்கும் கிப்சன், எதிர்காலம் பற்றி கற்பனை செய்யும் ஆற்றலை நாம் இழந்துவிட்டது போல இருக்கிறது என்று குறைப்பட்டுக்கொண்டிருக்கிறார். கடந்த 20 ம் நூற்றாண்டு முழுவதும், 21 ம் நூற்றாண்டு எப்படி இருக்கும் என பல எழுத்தாளர்கள் கற்பனை செய்து எழுதினார்கள், ஆனால் இப்போது 22 ம் நூற்றாண்டு பற்றி பெரிதாக எழுதப்படுவதில்லை என்று கூறியிருக்கிறார்.