லட்சிய வேலைவாய்ப்பு இணையதளம்

குறிப்பிட்ட நோக்கிலான வேலைவாய்ப்புகளை தேட வழி செய்யும் இணையதளங்களே வேலைவாய்ப்பு தளங்களில் இப்போதைய போக்காக தோன்றுகிறது. இந்த வகையில் புதிதாக அறிமுகம் ஆகியுள்ள வேலைவாய்ப்பு இணையதளமான ரிமோட் இம்பேக்ட்.இயோ ( https://www.remoteimpact.io/ ) இணையதளத்தை இரண்டு காரணங்களுக்காக முக்கியமானதாக கருதலாம்.

முதல் காரணம், இந்த இணையதளம் நம் காலத்து வேலைவாய்ப்புகளை தேட வழி செய்கிறது. நம் கால வேலைவாய்ப்பு என்பதை,குறிப்பிட்ட இடத்தில் அல்லாமல் எங்கிருந்தாலும் பணியாற்றக்கூடிய வேலைவாய்ப்பு என புரிந்து கொள்ளலாம்.

கொரோனா சூழலில், வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டிய தேவை அதிகரித்திருப்பதால், ரிமோட் ஜாப்ஸ் அல்லது தொலையிட பணிகள் என சொல்லக்கூடிய வேலைவாய்ப்பு தொடரபான தகவல்கள் முக்கியமாகின்றன.

இத்தகைய வேலைவாய்ப்புகளை தேடுவதற்கான இணையதளமாக ரிமோட் இம்பேக்ட் அமைகிறது. இந்த வேலைவாய்ப்புகள் அனைத்தும், லட்சிய நோக்கிலான பணிகளாக அமைந்திருப்பது இந்த தளம் தொடர்பான இரண்டாவது முக்கிய அம்சமாகிறது.

லட்சிய நோக்கிலான பணி என்றால், சுற்றுச்சூழலையும், பூமியின் இதர வளங்களையும் அதிகம் பாதிக்காமல், நீடித்த நிலையான வளர்ச்சிக்கு உதவுவதை நோக்கமாக கொண்ட நிறுவனங்களில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பாகும்.

நீடித்த நிலையான வளர்ச்சிக்கு என, ஐக்கிய நாடுகள் சபை 18 இலக்குகளை வகுத்துள்ளது. காலநிலை மாற்றம், தூய்மை எரிசக்தி, சுழற்சி பொருளாதாரம், சமத்துவமின்மை, அமைதி மற்றும் நீதி… என இந்த இலக்குகள் அமைகின்றன.

இந்த இலக்குகளை நிறைவேற்றுவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ள வர்த்தக நிறுவனங்கள் வழங்கும் தொலையிட பணிகளை இந்த தளம் பட்டியலிடுவதால் இதை லட்சிய வேலைவாய்ப்பு தளம் என கருதலாம்.

பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளே பட்டியலிடப்பட்டுள்ளன. பணி தொடர்பாக எதிர்பார்க்கப்படும் தொழில்நுட்பத்திறன்கள் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, குறிப்பிட்ட அந்த பணி தொடர்பான் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளும் அடையாளம் காட்டப்பட்டுள்ளன.