வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய உதவும் தளம்
இந்தியாவில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை சொற்பமானது தான் என்றாலும், அதனளவில் இந்த சந்தை பெரிதாக தான் இருக்க வேண்டும். இல்லை எனில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய உதவுவதற்காக என்று இத்தனை இணையதளங்கள் இருக்குமா? கிளியர்டாக்ஸ்.காம் ( https://cleartax.in/), டாக்ஸ்ஸ்பேனர் (https://www.taxspanner.com/ ), ஈசிடேக்ஸ் ( https://eztax.in/) என இந்த பட்டியல் நீள்கிறது.
இந்த நிலையில் இப்போது புதிதாக ஒரு வரிதாக்கல் உதவி தளம் அறிமுகம் ஆகியிருக்கிறது. குவிக்கோ ( https://quicko.com/) எனும் அந்த இணையதளம் தனிநபர்கள் மற்றும் வர்த்தகங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய உதவும் சேவையை வழங்குகிறது.
மற்ற எல்லா வரி தாக்கல் உதவி தளங்கள் வழங்குவது போலவே, நீங்களே செய்து கொள்ளுங்கள் என வரித்தாக்கல் செய்ய எளிய முறையில் வழிகாட்டுகிறது. இந்த எளிய முறையே சிக்கல் என நினைப்பவர்கள், வல்லுனர்கள் வழிகாட்டுதலுடன் வரித்தாக்கல் செய்யும் கட்டண முறையை நாடலாம்.
படிவம் 16 சமர்பிப்பதில் இருந்து வரித்தாக்கல் செயல்முறையை துவங்கலாம்.
வடிவமைப்பு வேறுபாடு தவிர மற்ற வரித்தாக்கல் தளங்களில் இருந்து பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை என்றாலும், வரித்தாக்கல் தொடர்பான தகவல்கள் மற்றும் செய்திகளை தெரிந்து கொள்ள தனிப்பகுதி இருக்கிறது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் என்றால் முயன்று பாருங்கள். இல்லை எனில் உங்கள் நண்பர்களுக்கு பரிந்துரையுங்கள்.
நிற்க, வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ தளம் மூலமே வரித்தாக்கல் செய்யலாம். அப்படியிருக்க, இதற்கென தனியே இத்தனை தளங்கள் ஏன் என்று தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் பதில் அளிக்கலாம்.https://www.incometaxindia.gov.in/pages/e-filing-links.aspx
-