உங்கள் இசை ரசனை அறிய ஒரு இணையதளம்
நீங்கள் இசை பிரியராகவும் இருந்தும், ஸ்பாட்டிபை பயனாளியாகவும் இருந்தால், உங்கள் இசை ஆர்வத்தின் தன்மையை அறிந்து கொள்வது எளிதானது. அபஸ்கியூரிபை மியூசிக் ( https://obscurifymusic.com/login) இணையதளம் இதற்காக வழிகாட்டுகிறது.
உங்கள் இசையை நீங்கள் இன்னும் சிறப்பாக புரிந்து கொள்ள வழிசெய்வதே எங்கள் நோக்கம் என்கிறது இந்த தளம். இந்த கருத்து உங்களுக்கு வியப்பளிக்கலாம். நம்முடைய இசை ஆர்வம் பற்றி நம்மைத்தவிர வேறு யாருக்கு தெரியும்? இதை கண்டறிந்து சொல்ல ஒரு இணையதளமா? என நினைக்கலாம்.
ஆனால், இசை உலகின் மீது தொழில்நுட்பம் செலுத்தி வரும் தாக்கம் இது போன்ற பல நுட்பமான அலசல்களை அல்கோரிதம் வாயிலாக நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. அந்த வகையில், இசை ஆர்வத்தை தொழில்நுட்பம் கொண்டு மேம்படுத்தும் வகையில் பல புதுயுக இணையதளங்கள் உருவாகி இருக்கின்றன.
லாஸ்ட்.எப்.எம், பாண்டோரா, ஷாஸம், ஸ்பாட்டிபை போன்ற சேவைகள் இந்த வரிசையில் வருகின்றன என்றால், இவற்றுக்கு துணை இணையதளங்களும் பல இருக்கின்றன. அதாவது, பிரதான இசை தளங்களின் தரவுகள் அடிப்படையில் சேவை வழங்கும் இணையதளங்கள்.
இந்த வரிசையில் ஸ்பாட்டிபை சார்ந்த துணை சேவையாக அப்ஸ்கியூரிபை இணையதளம் அமைந்துள்ளது.
ஸ்பாட்டிபை தேர்வுகள் அடிப்படையில் ஒருவரது இசை ரசனையை உணர்த்தலாம் எனும் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு இந்த தளம் செயல்படுகிறது.
ஸ்பாட்டிபை பயனாளிகள், இந்த தளத்தில் தங்கள் ஸ்பாட்டிபை கணக்கு மூலம் நுழைந்தால் போதும், அதன் பிறகு இந்த தளம் பயனாளியின் இசை தேர்வு, பாடல்கள் வரலாறு, இசை வகைகள் ஆகிய தகவல்களை உள்வாங்கி கொண்டு , அதனடிப்படையில் அவர்கள் கேட்டு ரசிக்ககூடிய பாடல்களை பரிந்துரைக்கிறது.
இதைவிட முக்கியமாக, பயனாளியின் இசை தேர்வுகளுக்கு ஏற்ப அவரது ரசனையை தீர்மானித்து, அதை மற்ற இசைப்பிரியர்கள் ரசனையுடன் ஒப்பிடுகிறது. அதாவது, ஒரு இசைத்தேர்வுகள் எந்த அளவுக்கு தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
இதன் அடிப்படையில், இதே பாடல்களை கேட்டு ரசிக்கும் ரசிகர்கள் மத்தியில் அந்த பாடல்கள் எந்த அளவு பிரபலமாக இருக்கிறது என்பதை உங்களுக்கான அப்ஸ்கீயுரிபை ரேட்டிங்காக வழங்குகிறது. இந்த ரேட்டிங் அதிகமாக இருந்தால் உங்கள் ரசனை தனித்தன்மை வாய்ந்தது என பொருள். ரேட்டிங் குறைவாக இருந்தால் உங்கள் தேர்வுகள் மிகவும் பொதுவானவை என்று பொருள்.
உங்கள் ரசனையை அல்கோரிதம் தேர்வுக்கு உட்படுத்த தயார் என்றால் முயற்சித்துப்பார்க்கவும்.
பொதுவாக இணையதளங்களையும் பயன்படுத்திப்பார்த்தே பரிந்துரைக்கிறேன். ஒரு சில இணையதளங்களை அறிமுக நோக்கிலும் சுட்டிக்காட்டுவதுண்டு. நான் ஸ்பாட்டிபை பயனாளி இல்லை என்பதால், மேலே சொன்ன தளத்தை பயன்படுத்தவில்லை. ஆனால் அதன் கருத்தாக்கம் சுவாரஸ்யமாகவும், புதுமையாகவும் இருக்கிறது. எனவே தான் இந்த அறிமுகம். ஏற்கனவே ஸ்பாட்டிப சார்ந்த பல துணை தளங்கள் பற்றி எழுதியிருக்கிறேன். பெரும்பாலானவை, ஸ்பாட்டிபை கணக்கில் நுழைய அனுமதி கேட்பவை. இந்த அம்சத்தை மனதில் கொண்டே இந்த தளங்களை பயன்படுத்திப்பார்க்கவும்.