பஞ்ச் வசனங்களாக அறிவியல் ஆய்வு தகவல்கள்
அறிவியல் ஆய்வு தகவல்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கிறது, ஆனால் அதற்காக அறிவியல் கட்டுரைகளை தேடி கண்டுபிடிக்கவோ அல்லது அந்த கட்டுரைகளை முழுவதும் படிக்கவோ நேரமும், பொறுமையும் இல்லை என நினைக்கிறீர்களா? இப்படி நினைத்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, அறிவியல் தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ள வழி செய்யும் யூஸ்புல்சயன்ஸ்.ஆர்ல் (https://www.usefulscience.org/) இணையதளத்தை நீங்கள் அறிமுகம் செய்து கொள்வது நல்லது.
இந்த தளம் அண்மை அறிவியல் ஆய்வு முடிவுகளை ’பிட்’ சைசில் தருகிறது. அதாவது, ஆய்வு கட்டுரை சாரம்சத்தை கச்சிதமாக ஒரு வரியில் அளிக்கிறது.
தலைப்புச்செய்தியை வாசிப்பது போல, இந்த கட்டுரை சுருக்கத்தை எளிதாக வாசிக்கலாம். அதன் பின் ஆர்வம் இருந்தால், அந்த கட்டுரைக்கான மூலத்தை வாசிக்கலாம். இந்த தகவலை சமூக ஊடகங்களிலும் பகிரலாம்.
நடைமுறை வாழ்க்கையில் பயனுள்ள அறிவியல் ஆய்வு தொடர்பான தகவல்களை இந்த தளம் தேடி தொகுத்தளிக்கிறது. ஊட்டச்சத்து, ஆரோக்கியம், சுற்றுச்சூழல், கல்வி என பல்வேறு தலைப்புகளில் ஆய்வு கட்டுரை சுருக்கத்தை வாசிக்கலாம். புதியவை என்றும் கட்டுரைகள் அடையாளம் காட்டப்படுகின்றன. தேடல் வசதியும் இருக்கிறது.
அறிவியல் ஆய்வு தொடர்பான கட்டுரைகளை தேடி கண்டறிந்து ஓரிடத்தில் அவற்றை தொகுத்தளிப்பதோடு, கட்டுரைகளின் முக்கியத்துவத்தை சுருக்கமாகவும் தெரிந்து கொள்ள வழி செய்கிறது இந்த தளம்.
இதனுடன் தொடர்புடைய டிவிட்டர் பக்கமும் இருக்கிறது.
கனடா நாட்டைச்சேர்ந்த பட்டதாரி மாணவர்கள் இந்த தளத்தை நடத்தி வருகின்றனர். நீங்களும் விரும்பினால், இந்த தளத்தில் இடம்பெறக்கூடிய கட்டுரை தகவல்களை சமர்பிக்கலாம்.