இசை கேட்கும் எக்ஸெல் கோப்பு
எக்ஸ்லெ கோப்பு என்றதும், எண்களும், புள்ளி விவரங்களும் தான் நினைவுக்கு வரும். ஏனெனில் எண்களையும், எண்ணிக்கைகளையும், கட்டங்களுக்குள் அடைத்து காட்சிரீதியாக புரிந்து கொள்ள எக்ஸெல் கோப்பு வசதி வழி செய்கிறது.
எக்ஸெல் கோப்பு வசதியை பலவிதங்களில் பயன்படுத்தலாம். எக்ஸெல்லை எளிதாக பயன்படுத்துவது எப்படி என வழி காட்டுவதற்கே பல இணையதளங்கள் இருக்கின்றன. ஆனால், எக்ஸெல் வசதியை இப்படியும் பயன்படுத்த முடியுமா என வியக்க வைக்கும் வகையில் அறிமுகம் ஆகியிருக்கும் இணையதளத்தை தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
நாய்ஸ்.ஷ் ( https://noise.sh/) எனும் அந்த இணையதளம், ஒலிக்குறிப்புகளை எக்ஸெல் கோப்பு வடிவில் அணுக வழி செய்கிறது.
தகவல்களையும், எண்ணிக்கையும் எக்ஸெல் கட்டங்களில் அடுக்குவது போல இந்த தளம் இசை சார்ந்த ஒலிக்குறிப்புகளை எக்ஸெல் கட்டத்தில் காட்சிப்படுத்துகிறது.
ஒலிகளுக்கான அலைவரிசைகளை எண்ணிக்கையாக குறிப்பதன் மூலம் இதை சாத்தியமாக்குகிறது.
ஒலிக்குறிப்புகளை எண்களான எக்ஸெல் கோப்பில் பார்க்கும் போது வியப்பாக மட்டும் அல்ல வசீகர்மாகவும் இருக்கிறது. தொடர்புடைய ஒலிகளையும் கேட்கலாம்.
ஆட்ரியான் கூனி ( Adrian Cooney ) எனும் ஒலி பொறியாளர் இந்த தளத்தை உருவாக்கியிருக்கிறார். ஒலிகளை காட்சிப்படுத்தி புரிந்து கொள்ளும் ஆர்வம் காரணமாக இந்த தளத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒன்று, இந்த தளத்தை சீர் தூக்கிப்பார்த்து குறை நிறைகளை சொல்ல, கொஞ்சம் இசையும் தெரிந்திருக்க வேண்டும். கூடவே ஒலி அறிவும், புரோகிராமிங் பற்றிய புரிதலும் இருந்தால் இந்த தளத்தை முழுவதுமாக புரிந்து கொள்ளலாம்.